The Subject Line

Share this post

👀 கூகுள் இனி நம்மை follow செய்யாதா?

www.thesubjectline.in

👀 கூகுள் இனி நம்மை follow செய்யாதா?

Today Edition Highlights: பீகாரில் போராட்டங்கள் ஏன்? | தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை | கூகுள் மீது வழக்கு ஏன்? | மீண்டும் அணிக்கு திரும்பிய ரோகித் | Reading Time: ⏱. 6 Mins

The Subject Line
Jan 27, 2022
2
Share this post

👀 கூகுள் இனி நம்மை follow செய்யாதா?

www.thesubjectline.in

ஹாய், ஹலோ… வணக்கம் 👋

இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…

Chrome பிரவுசரில் பயனாளர்களை follow செய்யும் Third Party Cookies-க்குப் பதிலாக நேற்று புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள். இன்று இன்டர்நெட்டில் நாம் காணும் விளம்பரங்களின் தன்மையை மொத்தமாக மாற்றியமைக்க சாத்தியமுள்ள இதைப் பற்றி இன்றைய TSL-ல் சுருக்கமாகப் பார்ப்போம்.

இது எப்படி நம்மை பாதிக்கும்?

நீங்கள் ஒரு சராசரி இன்டர்நெட் யூசராக இருந்தாலே போதும். Cookies பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு வெப்சைட்டுக்கு நாம் செல்லும்போது, நம்மைப் பற்றி அந்த வெப்சைட் (நம் டிவைஸ்களில்) சேமிக்கும் தகவல்கள்தான் இந்த Cookies. ஒவ்வொருமுறை நாம் அந்த வெப்சைட்டிற்கு செல்லும்போதும், இவை அந்த வெப்சைட்டால் பயன்படுத்திக்கொள்ளப்படும். இவை எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து 2 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

1. First Party Cookies:

  • உதாரணமாக, Abcbooks.com என்ற வெப்சைட்டிற்கு நாம் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அப்போது அந்த வெப்சைட்டானது, நம்முடைய யூசர்நேம், பாஸ்வேர்டு, நம் இருப்பிடம், Language Settings போன்ற தகவல்களை சேமித்துக்கொள்ளும். எதற்காக? அப்போதுதான், அடுத்தமுறை நம் அந்த வெப்சைட்டிற்கு செல்லும்போது நம்மை திரும்பவும் லாகின் செய்யச் சொல்லாமல், நம்மிடம் திரும்பவும் விவரங்களைக் கேட்காமல் சேவை வழங்க முடியும்.

  • இப்படி, ஒரு வெப்சைட் நேரடியாக தன் யூசர்களின் தகவல்களைச் சேமிப்பது First Party Cookies. இப்படி நேரடியாக சேகரிக்கப்படும் யூசர்களின் டேட்டா, First Party Data.

2. Third Party Cookies:

  • அதே Abcbooks.com வெப்சைட்டில், வேறு சில நிறுவனங்களும் நம் தகவல்களைச் சேமித்துக்கொண்டிருக்கும். உதாரணமாக, அந்த வெப்சைட்டில் என்ன வாங்குகிறோம், எவ்வளவு நேரம் அதில் செலவிடுகிறோம், நம்முடைய கேட்ஜெட் என்ன போன்ற தகவல்களையெல்லாம் அவை சேமிக்கும்.

  • இப்படி நம்முடைய தகவல்களை சேமித்துக்கொள்ள Abcbooks வெப்சைட், அந்நிறுவனத்திற்கு (உதாரணம்: ad.doubleclick.net) அனுமதியும் கொடுத்திருக்கும். இது எதற்கு? விளம்பர நோக்கங்களுக்காக. நாம் கூகுளில் தேடிய ஒரு பொருள், அதற்கடுத்து எந்த வெப்சைட்டிற்கு போனாலும் விளம்பரங்களாக வருகிறதல்லவா? அதற்கு இந்தப் பயல்தான் காரணம்.

  • இப்படி நேரடியாக இல்லாமல், மறைமுகமாக வெவ்வேறு வெப்சைட்களில் பெறப்படும் யூசர்களின் தகவல்கள்தான் Third Party Cookies. ஒவ்வொருமுறையும் ஏதேனும் வெப்சைட்டிற்குச் சென்றால், Cookies-ஐ அனுமதிக்க ஒரு Pop-up வருமே? அது இதுதான். இதற்குத்தான் இப்போது கடிவாளம் போடுகிறது கூகுள்.

என்ன காரணம்?

இந்த Third Party Cookies என்பவை நேரடியாக நம் பிரைவசியை பாதிப்பவை. நம் அனுமதியின்றியோ அல்லது நமக்குத் தெரியாமலோ விளம்பர நிறுவனங்களால் சேமிக்கப்படுபவை. அதன்பின்பு நம்மை விளம்பரங்களுக்கு Target செய்ய பயன்படுபவை. நம்மை இன்டர்நெட்டில் எந்நேரமும் பின்தொடருபவை (Tracking). டிஜிட்டல் விளம்பர நிறுவனங்களுக்கு லாபத்தைக் கொட்டிக்கொடுப்பவை.

  • இதன் சிக்கல்கள் பற்றி பல வருடங்களாகப் பேசப்பட்டாலும், 2018-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் அமலான GDPR விதிகள், ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கா வாக்காளர்களை டார்கெட் செய்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பிறகுதான் இதன்மீது இன்னும் அதிக கவனம் குவிந்தது.

  • அதன்பிறகு டிஜிட்டல் பிரைவசி பற்றிய விழிப்புணர்வு மக்களிடமும் அதிகரிக்கத் தொடங்க, டெக் நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின. அப்படித்தான் பிரவுசர்கள், Third Party Cookies-ஐ தீவிர பிரச்னையாகக் கருதி இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தன.

  • அதைத்தொடர்ந்துதான் ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி, ஃபயர்ஃபாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்கள் Third Party Cookies-ஐ பிளாக் செய்தன. கூகுள் குரோம் அப்படி செய்யவில்லை. Third Party Cookies-ஐ பிளாக் செய்ய ஒரு ஆப்ஷனை மட்டும் கொடுத்தது; Default-டாக பிளாக் செய்யவில்லை. ஆனால், 2023-ம் ஆண்டுக்குள் இதைச் செய்து விடுவோம் எனச் சொல்லியிருக்கிறது. அதற்கான அடுத்த அடிதான் நேற்றைய அறிவிப்பு.

அப்படி என்ன சொல்லியிருக்கிறது?

சஃபாரி, ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் இன்னபிற பிரவுசர்களை விடவும் இந்த விவகாரத்தில் கூகுள் குரோமின் முடிவுதான் டெக் உலகில் உற்றுநோக்கப்படுகிறது. காரணம், பிரவுசர்களில் 60%-க்கும் மேல் சந்தையை வைத்திருப்பது குரோம்தான். மேலும், மற்ற நிறுவனங்களை விடவும், டிஜிட்டல் விளம்பரங்களில் பெரும்பகுதியைக் கொண்டிருப்பதும்தான் கூகுள்தான். அதனால், கூகுளின் முடிவு டிஜிட்டல் விளம்பர நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் லாபம்… இரண்டிற்குமே முக்கியம். சரி, நேற்று என்ன செய்திருக்கிறது?

  • இதுவரைக்கும் ஒரு தனிநபராக நாம் எந்த வெப்சைட்டில் என்ன செய்கிறோம் என நம்மை உளவுபார்த்ததல்லவா? அதற்கு பதிலாக வேறொரு ரூட்டைக் கையில் எடுத்திருக்கிறது. அதன் பெயர் Topics API. இது எப்படி செயல்படும்? உதாரணத்துடன் பார்ப்போம்.

  • ஒரு வாரத்தில் நீங்கள் குரோமில் பிரவுஸ் செய்யும் வெப்சைட்டுகளை வைத்து, நீங்கள் அதிகமாக எந்த மாதிரியான பிரிவுகளில் பிரவுஸ் செய்கிறீர்கள் என குரோம் கண்காணிக்கும். அதைவைத்து உங்களின் டாப் 5 டாபிக்குகள் முடிவு செய்யப்படும். உதாரணமாக, Sports, Movies, Cricket, Food, Travel இப்படி.

  • அடுத்து நீங்கள் எந்த தளத்திற்குச் சென்றாலும், இந்த டாபிக்குகளின் கீழ்தான் உங்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படும். இந்த டாபிக்குகள் 3 வாரத்திற்கு மட்டுமே இருக்கும். பின் அது டெலிட் செய்யப்பட்டு புதிய டாபிக் சேரும். இவற்றை மாற்ற நினைத்தால் நீங்களே குரோம் செட்டிங்ஸில் மாற்றிக்கொள்ளவும் முடியும்.

  • இதற்கு முன்பு உங்களின் வெப்சைட் ஹிஸ்டரி, அங்கு என்ன செய்கிறீர்கள் என்பதையெல்லாம் கண்காணித்து, விளம்பரங்களைக் காட்ட உதவிய குரோம் இனி, நீங்கள் எந்த டாபிக்குகளில் அதிகம் செலவிடுகிறீர்கள் என்பதை மட்டும் வைத்து விளம்பரங்களைக் காட்ட உதவும்.

  • எனவே, உதாரணமாக இனி TNPSC-க்கு படிப்பது என கூகுளில் தேடிவிட்டு, வேறு தளத்திற்கு சென்றால், அங்கு TNPSC கோச்சிங் சென்டர் விளம்பரங்கள் காட்டப்படாது. மாறாக, கல்வித்துறை சார்ந்த விளம்பரங்களே பொதுவாகக் காட்டப்படும்.

இது எப்போது அமலுக்கு வரும்?

இதை நேற்றுதான் அறிவித்திருக்கிறது கூகுள். மேலும், இது இப்படியே உறுதியாக அமலாகுமா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. காரணம், இதற்குமுன்பு இதேபோல Third Party Cookies-க்கு பதிலாக FLoC என ஒரு முறையை முன்வைக்க, அதற்கும் பிரைவசி ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.

  • அதையடுத்துதான் இப்போது இந்த டாபிக்ஸ் முறையை முன்வைத்திருக்கிறது. இது அதைவிட கொஞ்சம் ஓகேதான் என்றாலும், விளம்பரதாரர்கள் நாம் எந்த மாதிரியான வெப்சைட்டுகளைப் பார்க்கிறோம் என அறிந்துகொள்வது கூட பிரைவசி சிக்கல்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

  • எனவே இதை கூகுள் தீவிரமாக முன்னெடுத்தால், பலகட்ட சோதனைகளுக்குப் பின்னர் இன்னும் ஓராண்டில் அமலுக்கு வந்துவிடலாம்.

இதற்குப் பின் நம்மை இன்டர்நெட்டில் கூகுள் ஃபாலோ செய்யாதா?

குரோம் பிரவுசர் மூலம், நம்மைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து பிற விளம்பர நிறுவனங்களிடம்தான் கொடுக்காதே தவிர, கூகுள் அதன் பிற சேவைகளில் (Youtube, Maps, etc) நம் டேட்டாவை சேகரித்துக் கொண்டும் டிராக் செய்துகொண்டும்தான் இருக்கும். அது First Party Data என்பதால் அதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. (கூகுள் சர்ச் மூலம் வரும் விளம்பர வருமானம்தான், Third Party Cookies சார்ந்த விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயை விடவும் மிக அதிகம்.) இருப்பினும் ஒட்டுமொத்தமாக நமக்குத் தெரியாமல் நம் டேட்டாவை சேகரிக்கும் நிறுவனங்கள் கணிசமாகக் குறையும் என்பது உறுதி.

  • எனவே கூகுளிற்கு இதனால் பெரியளவில் பாதிப்பில்லை. ஆனால், டிஜிட்டல் விளம்பர நிறுவனங்கள் மாற்று தொழில்நுட்பங்களை நோக்கி நகரவேண்டும்.

  • மேலும், கூகுள் குரோமில் Third Party Cookies-ஐ பிளாக் செய்யும் வசதி இப்போதே இருக்கிறது (ஆனால், இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தும் யூசர்கள் மிக மிகக்குறைவு). இருந்தும் ஏன் இப்படி கூகுள் மாற்று தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறது?

``விளம்பர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் Third Party Cookies-க்கு மாற்றாக ஒன்றை நாம் உருவாக்கவில்லையென்றால், அது அவர்கள் இன்னும் முறையற்ற வழிகளில் டேட்டாவை சேகரிக்கவே ஊக்குவிக்கும். யூசர்களின் பிரைவசிக்கு அது இன்னும் ஆபத்து என்பதால்தான் மாற்று தொழில்நுட்பங்களை உருவாக்க நாங்கள் உழைக்கிறோம்” என்கிறது கூகுள்.

இப்படியாக 2023-க்குள் கூகுள் இந்த மாற்று முயற்சியில் வெற்றியடைந்துவிட்டால், பின்னர் அதை அனைத்து பிரவுசர்களும் பின்பற்றலாம். அது இன்டர்நெட்டில் டிஜிட்டல் விளம்பர சந்தையிலும் பெரியளவில் தாக்கம் செலுத்தலாம்.

Share The Subject Line


1. ரயில்வே தேர்வில் சர்ச்சை; வெடித்த போராட்டம்

இந்திய ரயில்வே கடந்த ஜனவரி 15-ம் தேதி வெளியிட்ட RRB NTPC தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கடந்த இரண்டு நாள்களாகப் போராட்டங்கள் நடந்துவருகின்றன. நேற்று பீகாரில் ஒரு ரயிலுக்கு, போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

Twitter avatar for @htTweets
Hindustan Times @htTweets
Trains burnt, blocked, vandalised: #Bihar Railway aspirants escalate stir against RRB exam results The agitating students went on tracks and blocked the passage of several trains, and even set a passenger train on fire in Arrah district. #RRBNTPC Read bit.ly/3u2qSVW
11:16 AM ∙ Jan 26, 2022
163Likes85Retweets
  • இதையடுத்து NTPC தேர்வுகள் மொத்தமாக ரத்து செய்யப்படுவதாகவும், போராட்டக்காரர்களின் குறைகளைக் கேட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. எதற்காக போராட்டம்?

  • இந்திய ரயில்வேயில் உள்ள 35,281 காலிப்பணியிடங்களுக்கு (ஜூனியர் கிளர்க், ஸ்டேஷன் மாஸ்டர், டைம்கீப்பர் போன்றவை) 2020-ம் ஆண்டு முதல்கட்ட கணினித்தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 11,000 பணியிடங்களுக்கு 10 / +2 பாஸ் செய்திருந்தாலே போதும். மீதமுள்ள பணிகளுக்கு பட்டப்படிப்பு தேவை.

  • சுமார் 1.25 கோடி பேர் விண்ணப்பித்த இந்தப் பணிகளுக்கு, முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சிபெறும் சுமார் 7 லட்சம் பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஆனால், 7 லட்சத்திற்கு பதில் மொத்தம் 3.84 லட்சம் பேர் மட்டுமே அடுத்தகட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

  • இதற்கு காரணம், பட்டப்படிப்பு பெற்ற ஒருவர், அனைத்துப் பணிகளுக்கும் விண்ணப்பித்து முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர் இரண்டாவது கட்டத்திலும் அனைத்து தேர்வுகளையும் எழுதலாம் (ஜூனியர் கிளர்க், ஸ்டேஷன் மாஸ்டர் என எல்லா பணிகளுக்கும்). இறுதியாக ஒரு பணியைத் தேர்வு செய்துகொள்ளலாம். இதற்குத்தான் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர் தேர்வு எழுதியவர்கள்.

ஆனால், ``பட்டப்படிப்பு முடித்தவர்கள் ஆரம்ப நிலைப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதை சட்டப்படி தடுக்கமுடியாது” என்கிறது ரயில்வே.

``இப்படி பட்டப்படிப்பு படித்தவர்கள், 10 /+2 படித்தவர்களின் பணிக்கும் விண்ணப்பித்தால் எங்களுக்கு வேலை கிடைக்காது” என்கின்றனர் போராட்டக்காரர்கள்.

  • இதற்கு முன்பு 2016-ம் ஆண்டு இதேபோல தேர்வு நடத்தப்பட்டது. அப்போதைய காலிப்பணியிடங்களுக்கு, குறைந்தபட்ச தகுதி பட்டப்படிப்பு என்பதாக மட்டுமே இருந்ததால் இப்படி பிரச்னை எழவில்லை.


2. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வந்தாச்சு!

தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை நேற்று அறிவித்திருக்கிறது மாநில தேர்தல் ஆணையம். இதன்படி, பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

  • வேட்புமனு தாக்கல், வரும் ஜனவரி 28 முதல் பிப்ரவரி 04 வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22 அன்று நடைபெறும்.

  • 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 மாவட்டங்களிலும், 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


3. ரிசர்வ் வங்கி நிகழ்வும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையும்

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது சில அதிகாரிகள் எழுந்து நிற்காதது நேற்று சர்ச்சையாகியிருக்கிறது.

Twitter avatar for @ptrmadurai
Dr P Thiaga Rajan (PTR) @ptrmadurai
Banks are essential for a community. More so the RBI, a bank regulator & currency/monetary policy manager This video is distressing, coming 2 days after the SLBC mtg where we outlined guidelines for banks who wish to bank the TN Govt We will look into, & eliminate all confusion
Twitter avatar for @Im_kannanj
Kannan Jeevanantham @Im_kannanj
தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய தேவையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் @CMOTamilnadu @TThenarasu @TNDIPRNEWS @ptrmadurai https://t.co/0AdU6lWn18
11:23 AM ∙ Jan 26, 2022
2,090Likes664Retweets

மேலும், அதுகுறித்து அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ``தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்துநிற்க வேண்டியது அவசியமில்லை என உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளனர். அப்படியொரு தீர்ப்பு உள்ளதா?

`இருந்தது; இப்போது இல்லை!’

புரியவில்லையே?

கடந்த 2018-ம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடமியில் ஆளுநர் கலந்துகொண்ட ஒரு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது காஞ்சி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது பெரிய சர்ச்சையானது. அதுதொடர்பான ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இப்படி குறிப்பிட்டார்.

``1970-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, தமிழ்த்தாய் வாழ்த்து, வாழ்த்துப்பாடல்தானே (Prayer Song) தவிர, அது தேசிய / மாநில கீதம் (Anthem) அல்ல. எனவே அதற்கு கட்டாயம் எழுந்துநிற்க வேண்டும் எனச் சொல்ல எந்த சட்டமோ, விதிமுறையோ இல்லை. அதேசமயம் அதற்கு உச்சபட்ச மரியாதை அளிக்கவேண்டியது அவசியம். மேலும், பலவகைப்பட்ட கலாசாரங்கள் கொண்ட நம் நாட்டில் ஒருவர் எழுந்துநின்று மட்டும்தான் மரியாதை செலுத்தவேண்டும் என்பது சரியல்ல; ஒரு சந்நியாசியாக அவர் (விஜயேந்திரர்) தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அமர்ந்து தியான நிலையில் மரியாதை செலுத்தியிருக்கிறார்”

இந்த வழக்கு தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றியதல்ல. மாறாக, ராமேஸ்வரம் காஞ்சிமடத்தில் 12 பேர் நுழைந்து போராட்டம் நடத்தியபோது, நாம் தமிழர் கட்சியைத் சேர்ந்த ஒருவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதை அவர் ரத்துசெய்யச் சொன்னது பற்றியது.

  • இந்த வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்திற்குப் பிறகு, தமிழக அரசு சார்பில் புதிய அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அது தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அறிவித்தது. கூடவே, மாற்றுத்திறனாளிகள் தவிர அனைவரும் எழுந்துநிற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது. இதன்படி, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்பது இப்போது கட்டாயமே. அப்படியெனில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கமுடியுமா?

இதற்காக அவர்கள் மீது நிர்வாக ரீதியாக அல்லது சட்டரீதியாக நடவடிக்கை முடியுமா என்பது பற்றி அரசும், நீதிமன்றமும்தான் தெளிவுபடுத்தவேண்டும்.

Share


  • தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 29,976 (நேற்று முன்தினம்: 30,055) 🔻

    - அதிகபட்சமாக, சென்னையில்: 5,973 (6,241) 🔻

    - தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 47 (48) 🔻

  • இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,85,914 (2,67,753) 🔺

  • இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு 🌦 ☔️

Source: IMD Chennai
  • அரசு ஊழியர்களின் செயல்திறனை அதிகப்படுத்தும் நோக்கில், இனி அவர்களுக்கு வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலைநாள்கள் என அறிவித்துள்ளார் சட்டிஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல்.

  • முன்னாள் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை மறுத்ததுபோலவே, அம்மாநிலத்தைச் சேர்ந்த மேலும் இருவர் தங்கள் விருதுகளைப் பெற மறுத்துள்ளனர். மூத்த தபலா இசைக்கலைஞர் பண்டிட் அனிந்தியா மற்றும் பாடகர் சந்தியா முகோபாத்யாய் ஆகிய இருவரும், பத்மஶ்ரீ பெறும் வயதையெல்லாம் தாங்கள் கடந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

  • கூட்டாட்சி தத்துவம் மற்றும் சமூக நீதியை தேசிய அளவில் கொண்டுசெல்ல விரைவில், `அகில இந்திய சமூக நீதிக்கூட்டமைப்பு’ ஒன்று தொடங்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். பிற மாநிலங்களிலிருந்து பிற்படுத்தப்பட்டோருக்காக குரல்கொடுக்கும் தலைவர்கள் இதில் இடம்பெறுவார்கள் என்றும், சமூகநீதி மற்றும் கூட்டாட்சி தொடர்பான விவகாரங்களில் மாநிலங்களுக்கு இந்த அமைப்பு வழிகாட்டுதல்கள் வழங்கும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

  • ``ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் அது இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அதிக விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு செயலாக இருக்கும்” என எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், அங்கு தங்கியிருக்கும் இந்தியர்களை தகவல்தொடர்பு விவரங்களைக் கொடுத்து தூதரக இணையத்தில் பதிந்துகொள்ளச் சொல்லியிருக்கிறது இந்திய தூதரகம்.

  • பயனாளர்களின் லொக்கேஷன் டேட்டாவை சேகரிப்பதில் கூகுள் குழப்பமான வழிமுறைகளைக் கையாள்கிறது எனக்கூறி அமெரிக்காவின் டெக்சாஸ், இண்டியானா, வாஷிங்டன் ஆகிய 3 மாகாணங்கள் அந்நிறுவனம் மீது வழக்கு தொடுத்திருக்கின்றன. நம்முடைய லொக்கேஷன் ஹிஸ்டரியை கூகுள் சேமிக்கக்கூடாது என நினைத்தால் கூகுள் அக்கவுன்ட்டின் Web & App Activity போய் Location History-ஐ Off செய்துகொள்ளலாம். ``ஆனால், இப்படி செய்வதால் மட்டுமே கூகுள் நம்மை விடுவதில்லை. Google Location Services, Location Sharing, and Find My Device போன்ற பிற ஆப்ஷன்கள் வழியாக, தொடர்ந்து நம் லொக்கேஷன் டேட்டாவை சேமிக்கின்றன; இது யூசர்களை ஏமாற்றும் வேலை” என்பதுதான் கூகுள் மீதான குற்றச்சாட்டு.

  • டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட இந்திய விமானப்படையின் அலங்கார ஊர்தி அணி வகுப்பில், இந்தியாவின் முதல் பெண் ரஃபேல் விமானியான ஷிவாங்கி சிங் இடம்பெற்றார்.

    Twitter avatar for @PIB_India
    PIB India @PIB_India
    Country's first woman Rafale fighter jet pilot Flight Lieutenant Shivangi Singh is a part of the Indian Air Force tableau as the @IAF_MCC band and marching contingent marches down the Rajpath #RepublicDay #RepublicDayIndia
    6:23 AM ∙ Jan 26, 2022
    429Likes108Retweets

    இந்திய விமானப்படை சார்பாக குடியரசு தின அணி வகுப்பில் இடம்பெறும் இரண்டாவது பெண் விமானி ஷிவாங்கி. இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் மொத்தம் 24 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. 12 மாநிலங்கள், 9 அமைச்சகங்கள், 3 பாதுகாப்பு படை ஊர்திகள்.

    Twitter avatar for @JuniorVikatan
    @JuniorVikatan @JuniorVikatan
    சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் தலைவர்களின் சிலைகளோடு அணிவகுத்த அலங்கார ஊர்திகள்! #Republicday2022
    Image
    Image
    Image
    Image
    4:20 AM ∙ Jan 26, 2022
    47Likes5Retweets

    தமிழகம் சார்பில் அனுப்பப்பட்டு, மத்திய அரசின் நிபுணர் குழுவால் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னை அணிவகுப்பில் கலந்துகொண்டது.

  • இந்தியா வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் கலந்துகொள்கின்றன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

    Twitter avatar for @BCCI
    BCCI @BCCI
    ODI squad: Rohit Sharma (Capt), KL Rahul (vc), Ruturaj Gaikwad, Shikhar, Virat Kohli, Surya Kumar Yadav, Shreyas Iyer, Deepak Hooda, Rishabh Pant (wk), D Chahar, Shardul Thakur, Y Chahal, Kuldeep Yadav, Washington Sundar, Ravi Bishnoi, Mohd. Siraj, Prasidh Krishna, Avesh Khan
    5:04 PM ∙ Jan 26, 2022
    23,361Likes4,019Retweets

    - காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரிலிருந்து விலகிய ரோகித் ஷர்மா மீண்டும் அணிக்குத் திரும்புகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்பின்னர் குல்தீப் யாதவ் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்காக செல்வதால் அஷ்வின் இந்த தொடரில் இடம்பெறவில்லை.

    Twitter avatar for @BCCI
    BCCI @BCCI
    T20I squad: Rohit Sharma(Capt),KL Rahul (vc),Ishan Kishan,Virat Kohli,Shreyas Iyer,Surya Kumar Yadav, Rishabh Pant (wk),Venkatesh Iyer,Deepak Chahar, Shardul Thakur, Ravi Bishnoi,Axar Patel, Yuzvendra Chahal, Washington Sundar, Mohd. Siraj, Bhuvneshwar, Avesh Khan, Harshal Patel
    5:05 PM ∙ Jan 26, 2022
    13,487Likes2,806Retweets

    - முகமது ஷமி, பும்ரா ஆகிய இருவருக்கும் இந்த தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் 2-வது ஒருநாள் போட்டியிலிருந்து இடம்பெறுவார்.

    - முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.


On This Day - Jan 27

- எலெக்ட்ரிக் பல்புக்காக தாமஸ் ஆல்வா எடிசன் காப்புரிமை பெற்ற தினம், 1880


அவ்வளவுதான்!

The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞

திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!

Have a Nice day ☕️

The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:

Telegram | Twitter | Facebook | Insta

Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️

Share this post

👀 கூகுள் இனி நம்மை follow செய்யாதா?

www.thesubjectline.in
Comments
TopNewCommunity

No posts

Ready for more?

© 2023 The Subject Line
Privacy ∙ Terms ∙ Collection notice
Start WritingGet the app
Substack is the home for great writing