🚫 ஏன் பத்ம விருதை மறுத்தார் புத்ததேவ் பட்டாச்சார்யா?
Today Edition Highlights: நடிகர் விஜய் வழக்கு தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | IAS கேடர் விதிகள்; மாநிலங்களின் ரியாக்ஷன் என்ன? | எப்போது வெளியாகும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு? | Re
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்! 🇮🇳
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
பத்ம விருதுகள் யார் யாருக்கு?
இந்தாண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்புகள் நேற்று வெளியாகிவிட்டது. மொத்தம் 130 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளின் முக்கியமான ஹைலைட்ஸ்…
அண்மையில் மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் முன்னாள் உ.பி முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்ட 4 பேருக்கு பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கிருஷ்ணா எல்லா மற்றும் சுசித்ரா எல்லா, மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா, ஆல்ஃபாபெட் CEO சுந்தர் பிச்சை, சீரம் நிறுவனத்தின் சைரஸ் பூனவாலா உள்ளிட்ட 17 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா, பாடகர் சோனு நிகாம் உள்ளிட்ட 107 பேருக்கு பத்மஶ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் யார் யாருக்கு?
இந்த 7 பேருக்கும் பத்மஶ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.
சிற்பி பாலசுப்பிரமணியம் - எழுத்தாளர்
S. பல்லேஷ் பஜந்திரி - ஷெனாய் இசைக்கலைஞர்
S. தாமோதரன் - சமூக சேவகர்
சௌகார் ஜானகி - திரைக்கலைஞர்
R. முத்துக்கண்ணம்மாள் - சதிர் நடனக்கலைஞர்
AKC நடராஜன் - கிளாரினெட் இசைக்கலைஞர்
டாக்டர் வீராசாமி சேஷய்யா - நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர்
முக்கியமான ஹைலைட்: தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதைப் பெற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார் மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா. விருதுகுறித்து தன்னிடம் முன்பே எதுவும் சொல்லப்படவில்லை எனவும், விருது வழங்கினால் அதைப் பெற மறுத்துவிடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், நேற்று காலை உள்துறை அமைச்சகத்திலிருந்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ``இதுபோல அரசுகளிடமிருந்து வரும் விருதுகளைப் பெறுவது எங்கள் தலைவர்களின் வழக்கம் இல்லை” என விளக்கம் அளித்திருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.


இன்னொருபுறம், காங்கிரஸில் அக்கட்சியின் தலைமையை விமர்சித்த மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்திற்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது, காங்கிரஸ்காரர்களையே கொஞ்சம் கடுப்பேற்றியிருக்கிறது.
உதாரணம்: அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷின் ட்வீட் 👇


(💡 குலாம் = சேவகன், ஆசாத் = சுதந்திரமானவன்)
விஜய் வழக்கில் நீதிபதிகள் சொன்னது என்ன?
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கேட்ட நடிகர் விஜய்யின் வழக்கை, கடந்தாண்டு ரத்துசெய்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அப்போது தீர்ப்பில் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். வரி கட்டாமல் இருப்பது தேசவிரோத செயல் எனவும், ரீல் ஹீரோக்கள் ரியல் ஹீரோக்களாக இருக்கவேண்டும் எனவும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, வழக்கிற்கு தேவையற்ற இந்த விமர்சனங்களை, இறுதி தீர்ப்பிலிருந்து நீக்கவேண்டும் என விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் நேற்று இறுதி தீர்ப்பளித்துள்ளது நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் முகமது ஷஃபிக் அடங்கிய அமர்வு.
அதில், ``இந்த நுழைவு வரி விவகாரத்தில் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்திலேயே நிறைய குழப்பங்கள் நிலவும்போது, அதுகுறித்து சட்டநடவடிக்கை எடுப்பதோ, நீதிமன்றத்தை நாடுவதோ, வாதியின் தவறு எனச்சொல்லமுடியாது. மேலும், தெரிந்தே குற்றமிழைத்ததற்கு இதில் முகாந்திரமும் இல்லை. எனவே தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்ட விமர்சனங்கள் தேவையற்றவையே; அவற்றை நீக்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
1. குடியரசு தின நிகழ்வுகள் அப்டேட்
ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தின் முந்தைய நாள் மாலை, குடியரசுத்தலைவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். அப்படி நேற்று நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
கொரோனா சூழலை இந்தியா கடந்தவந்த பாதையை நினைவுகூர்ந்த அவர், பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திருப்ப அரசு, அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டார்.
இன்று காலை 9:15 மணியிலிருந்து டெல்லி ராஜ்பாத்தில், குடியரசு தின சிறப்பு அணி வகுப்புகள் நடக்கவிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை அரசின் DD குழும சானல்களில் நேரலையாகக் காணலாம்.
தமிழக நிலவரம்: தமிழகத்தின் மெரினா கடற்கடை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இந்த ஆண்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ஏதுமில்லை. இதேபோல, கொரோனா காரணமாக பொதுமக்களையும் நேரில் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது தமிழக அரசு.
டெல்லி குடியரசு தின விழாவிற்காக தமிழக அரசு அனுப்பிய அலங்கார ஊர்தி மாதிரிகளை மத்திய அரசு நிராகரித்தது அண்மையில் சர்ச்சையானது. அந்த அலங்கார ஊர்தியானது, இந்த மாநில குடியரசு தின விழாவில் பங்குபெறவுள்ளது.
2. ஐ.ஏ.எஸ் கேடர் விதிகள் விவகாரம்; மாநிலங்களின் நிலைப்பாடு என்ன?
மாநிலங்களின் அனுமதியின்றி, மத்திய அரசுப்பணிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அழைத்துக்கொள்ள வழிசெய்யும் புதிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அந்த சட்டத்திருத்தத்தின் விதிமுறைகளை மாநிலங்களுக்கு அனுப்பி, ஜனவரி 25-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கும்படி கேட்டிருந்தது மத்திய அரசு.
இதுவரை,
16 மாநிலங்கள் இந்த சட்டத்திருத்தம் குறித்து, தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளன. இதில் பா.ஜ.க ஆளும் 7 மாநிலங்கள், இந்த சட்டத்திருத்தத்திற்கு ஓகே சொல்லிவிட்டன.
பிற கட்சிகள் ஆட்சி செய்யும் 9 மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. இதில் தமிழகமும் அடக்கம்.
இந்நிலையில், இதுவரை கருத்து தெரிவிக்காத மாநிலங்களுக்கு அவகாசம் வழங்கி, அவர்களின் கருத்தையும் பெற முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 30,055 (நேற்று முன்தினம்: 30,215) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 6,241 (6,296) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 48 (46) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,67,753 (3,06,064) 🔻
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு 🌦 ☔️

மாநில பட்ஜெட்டிற்கான கருத்துகளைப் பெறுவதற்காக முதல்முறையாக வங்கியாளர்களுடன் சிறப்புக்கூட்டத்தை நேற்று நடத்தியிருக்கிறது தமிழக அரசு. இதில் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழகத்தின் அனைத்து ஏ.டி.எம்-கள் மற்றும் வங்கிப்படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்படவேண்டும் எனவும், தகவல் உதவி மையங்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்பிலிருக்கும அதிகாரிகள் நன்கு தமிழ் தெரிந்தவர்களாகவே இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை நிறைய அறிவிப்பதைக் குறிப்பிட்டு, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார் பா.ஜ.க-வைச் சேர்ந்த அஷ்வினி உபாத்யாயா. இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் AS போபண்ணா அடங்கிய அமர்வு, ``இது மிக முக்கியமான பிரச்னை. பல நேரங்களில் பட்ஜெட்டை விடவும் இந்த இலவசத் திட்டங்களுக்கு அதிக செலவாகிறது.” எனக் குறிப்பிட்டனர். மேலும், இந்த வழக்கில் பதிலளிக்கும்படி மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர்.
கொரோனா மூன்றாவது அலை காரணமாக, தமிழகத்தில் விரைவில் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை ஒத்திவைக்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால், தேர்தலை தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. எனவே இன்று தேர்தலுக்கான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம், ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கப்போன 55 இந்திய மீனவர்களை சிறைப்பிடித்திருந்தது இலங்கை கடற்படை. இந்நிலையில், 55 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நேற்று உத்தரவிட்டிருக்கிறது அந்நாட்டு நீதிமன்றம்.
அண்மையில் அடுத்தடுத்து OBC தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியதால் கவலையில் இருந்தது உத்தரப்பிரதேச பா.ஜ.க. ஆனால், தற்போது அதை ஈடுகட்டும்விதமாக காங்கிஸிலிருந்து, முக்கியமான OBC தலைவரான RPN சிங்கை தங்கள் பக்கம் இழுத்திருக்கிறது. இதனால் தற்போது காங்கிரஸூக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுமார் 32 ஆண்டுகள் காங்கிரஸோடு பயணித்தவர் சிங்.
On This Day - Jan 26
- இந்தியாவின் 73-வது குடியரசு தினம்.
- சுமார் 20,000-க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட குஜராத் பூகம்பம் நிகழ்ந்த தினம், 2001
- பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் நினைவு தினம், 2015
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: