ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறையானது (DoPT), கடந்த ஜனவரி 12-ம் தேதி அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறது.
இந்திய ஆட்சிப்பணியாளர் விதிகள் (Indian Administrative Service Rules) 1954-ல், பிரிவு 6-ஐ மாற்றுவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்து மாநிலங்கள் ஜனவரி 25-ம் தேதிக்குள் தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனவும் அதில் கூறியிருக்கிறது.
இந்த மாற்றங்கள், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விஷயம் எனவும், மாநில நலனுக்கு எதிராகப் போய் முடியும் எனவும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இந்த மாற்றங்கள் எதற்காக, இது எப்படி மாநிலங்களை பாதிக்கும்?
என்ன செய்கிறது மத்திய அரசு?
இதைப் புரிந்துகொள்ளும் முன்பு, IAS, IPS அதிகாரிகளின் பணி நியமனங்கள் குறித்து நாம் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் மூலம் IAS, IPS, IFS உள்ளிட்ட அதிகாரிகளைத் தேர்வு செய்வது மத்திய அரசின் பொறுப்பு. இப்படி தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் கேடர்கள் வாரியாக (உதாரணம்: தமிழ்நாடு கேடர், குஜராத் கேடர்) வெவ்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுவர்.
அதன் பின்னர் அவர்களுக்கான சம்பளம், பதவி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் அந்தந்த மாநில அரசுகள்தான் பொறுப்பு. அப்படியெனில் மத்திய அரசு பணிகளுக்கு அதிகாரிகள்? மாநில அரசிடமிருந்து, அவர்களின் அனுமதியுடன் மத்திய அரசு சில அதிகாரிகளைப் பெற்றுக்கொள்ளும்.
எந்தெந்த அதிகாரிகளை, மத்திய அரசுப் பணிகளுக்கு (Central deputation) அனுப்பலாம் என்பதையும் மாநில அரசுகள்தான் முடிவு செய்யும். ஒருவேளை மத்திய அரசுக்கு குறிப்பிட்ட அதிகாரி தேவைப்படும் பட்சத்தில், அவரை மாநில அரசின் அனுமதியுடன்தான் (With No Objection Certificate) பெற்றுக்கொள்ள முடியும்.
தற்போது இந்த அனுமதி பெறும் விஷயத்தைத்தான் மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. அதுதொடர்பான கடிதம்தான் மேலே நாம் பார்த்தது.
இந்த மாற்றங்கள் நடந்தால், அதன்பின்பு மத்திய அரசு, மாநிலத்திலிருக்கும் எந்தவொரு குறிப்பிட்ட அதிகாரியையும், மாநிலங்களின் அனுமதியின்றிகூட, மத்திய அரசின் பணிகளுக்கு அழைத்துக்கொள்ள முடியும். ஏன் இப்படி செய்கிறது மத்திய அரசு?
அதிகாரிகளுக்கு பற்றாக்குறை
மத்திய அரசில் நிலவும் அதிகாரிகள் பற்றாக்குறைதான் முதல் காரணம். 1998 முதல் 2007-ம் ஆண்டு வரைக்கும் 50-லிருந்து 100 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இந்தியாவின் தேவைக்கு இது மிகவும் குறைவு. பின்னர் 2008-க்குப் பிறகுதான் இந்த எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது. 2014-க்குப் பிறகு இந்த எண்ணிக்கை ஏறக்குறைய 180-ஐத் தொட்டது.
இப்படி 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட IAS பற்றாக்குறை, இப்போது மத்திய அரசுக்கு பிரச்னை செய்கிறது. இதைவிட இன்னொரு முக்கியமான பிரச்னை, மாநில அரசுகள். ஆம்!
ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசுப்பணிகளுக்கு என மாநிலங்கள் ஒதுக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களும் தங்களின் கேடரிலிருந்து 40% வரை அதிகாரிகளை மத்திய அரசுப்பணிகளுக்கு அனுப்பலாம். ஆனால், இது பல மாநிலங்களில் மிகவும் குறைவாக இருக்கிறது.
உதாரணமாக மாநில கேடர்களிலிருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும் IAS அதிகாரிகளின் விகிதம் 2011-ல் 25% ஆக இருந்தது. ஆனால், 2021-ல் இது 18% குறைந்திருக்கிறது.
இதேபோல துணைச்செயலாளர் / இயக்குநர் ரேங்க்கில் இருக்கும் IAS அதிகாரிகளின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டு 614 ஆக இருந்தது, 2021-ல் 1130 ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், இதிலிருந்து மத்திய அரசுக்கு வருபவர்களின் எண்ணிக்கையோ 117-லிருந்து 114 ஆக குறைந்திருக்கிறது.
இந்தப் பிரச்னையை சரிசெய்யச்சொல்லியும், அதிகமான அதிகாரிகளை ஒதுக்கும்படியும் கடந்த ஆண்டே மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது மத்திய அரசு. இந்நிலையில்தான், இந்த ஆண்டு புதிதாக விதிகளை மாற்றும் முடிவுக்கு வந்திருக்கிறது.
மாநிலங்கள் என்ன சொல்கின்றன?
இதுவரைக்கும் மேற்கு வங்கம் மட்டும் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. கேரளாவும் விரைவில் எதிர்ப்பை பதிவுசெய்ய முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் நிலை இன்னும் தெரியவில்லை. சரி, எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?
மாநில முதல்வர்கள் மட்டுமன்றி, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள்…
``மத்திய அரசுக்கு அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பது என்னவோ உண்மைதான்; ஆனால், இப்போது மாநில அரசுகளிடமிருந்து வலுக்கட்டாயமாக அதிகாரிகளைப் பிடுங்கினால் மட்டும் பிரச்னை சரியாகிவிடுமா? மாநிலங்களின் தேவையையும் பூர்த்தி செய்துவிட்டு, மத்திய அரசின் பிரச்னையையும் தீர்க்கும்படியான ஒரு தீர்வையல்லவா இவர்கள் உருவாக்கவேண்டும்?
மத்திய அரசு நினைத்தால், எப்போது வேண்டுமானாலும், எந்த அதிகாரியை வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம் என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிராக இருக்கிறதே? ஒரு மாநிலத்தில் சிறப்பாக செயல்படும் அதிகாரியை, அரசியல் உள்நோக்கங்களுடன், மத்திய அரசு அழைத்துக்கொண்டால் (மேற்கு வங்கத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்ததைப் போல) அதை யாரால் எப்படி தடுக்கமுடியும்?
மேலும் திறமையான, நல்ல அதிகாரிகளை மத்திய அரசு எடுத்துக்கொண்டால், அது மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்காதா? திடீரென மத்திய அரசு கூடுதலான அதிகாரிகளை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில், அந்த இடத்தை மாநிலங்கள் எப்படி நிரப்பும்?
எந்தவொரு அதிகாரியை வேண்டுமானாலும் இடம்மாற்ற மத்திய அரசிடம் தன்னிச்சையான அதிகாரம் இருக்கும்பட்சத்தில், அதிகாரிகள் மீது மத்திய அரசு நேரடியாக ஆதிக்கம் செலுத்த அது வழிவகுக்காதா?”
இப்படி இந்த முடிவு குறித்து பல கேள்விகள் எழுகின்றன. ஆனால், மாநில அரசுகளுக்கு எந்த பாதிப்பும் வராமல், அவர்களுடன் கலந்தாலோசித்தே இறுதி முடிவுகளை எடுப்போம் என்கிறது மத்திய அரசு.
அடுத்து என்ன?
ஜனவரி 25-க்குள் அனைத்து மாநிலங்களும், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ததும், வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இதற்கான சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. மாநிலங்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைப் பொறுத்தே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அடுத்த அடியை எடுத்துவைக்க முடியும். மத்திய, மாநில நிர்வாகங்களில் IAS அதிகாரிகளின் பங்கு மிக அதிகம் என்பதால் இந்த விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

1. கே.பி அன்பழகன் வீட்டில் சிக்கியது என்ன?
முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுமான கே.பி. அன்பழகன் மற்றும் அவரின் உறவினர்களுக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில், நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இப்படி சோதனை நடக்கும் 6-வது முன்னாள் அமைச்சர் இவர். 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக, அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில் ரூ.2.87 கோடி ரொக்கம், 6.637 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி நகைகள் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு என்றாலே, அவர்கள் வீட்டு முன்பு கூடியிருக்கும் தொண்டர்களுக்கு வெண்பொங்கல் வழங்குவது கழக விதியாகிவிட்டது போல. நேற்றும் அன்பழகன் வீட்டின் முன் கூடியிருந்த தொண்டர்களுக்கு காலை சூடான வெண் பொங்கல் மற்றும் புலாவ் வழங்கப்பட்டிருக்கிறது. மதியம் குஸ்கா!
2. மாணவியின் உயிரிழப்பிற்கு என்ன காரணம்?
தஞ்சாவூர் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில், விடுதியில் தங்கிப்படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறச் சொல்லி, விடுதி காப்பாளர் தந்த தொல்லையாலும், அதையடுத்து அவர் மாணவிக்கு செய்த கொடுமைகளாலும்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் மாணவியின் உறவினர்கள், மாணவியின் உடலை வாங்காமல் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதையடுத்து மாணவி கடைசியாகப் பேசும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரலாக நேற்று இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.
விடுதிக்காப்பாளர் சகாய மேரி, மதம் மாற மறுத்ததால் மாணவியை அதிக வேலைகள் கொடுத்து கொடுமை செய்ததாக, மாணவியின் உறவினர் குற்றம்சாட்ட, அதைப் பள்ளி நிர்வாகம் மறுத்திருக்கிறது. குடும்பச் சூழ்நிலையால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும், மதம் மாறச்சொன்னது காரணமில்லை எனவும் பள்ளி தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த தஞ்சை மாவட்ட எஸ்.பி.ரவளி பிரியா, ``முதல்கட்ட விசாரணையில் மாணவியை மதம் மாற கட்டாயப்படுத்தியதாக எந்த தகவலும் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், காவல்துறையினர் இந்தக் கோணத்திலும் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
3. தமிழகத்திற்கு அலர்ட்: கோவிட் தொற்று உறுதியாகும் விகிதம் (Weekly Positivity Rate) அதிகமாக இருக்கும் 6 மாநிலங்களைப் பட்டியலிட்டு, அந்த மாநிலங்களுக்கு சிறப்பு குழுக்கள் அனுப்பி, கண்காணிக்கவிருக்கிறோம் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு.
- அந்த 6 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பிற மாநிலங்கள்: மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி, உத்தரப்பிரதேசம்.
- தமிழகத்தின் Weekly Positivity Rate - 20.50%. பிற 5 மாநிலங்களிலும் இதேபோல கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது.

தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 28,561 (நேற்று முன்தினம்: 26,981) 🔺
- அதிகபட்சமாக, சென்னையில்: 7,520 (8,007) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 39 (35) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 3,17,532 (2,82,970) 🔺
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருள்கள் இருந்ததாக நிறைய புகார்கள் எழுந்துள்ளன; எதிர்க்கட்சிகளும் விமர்சித்திருந்தன. இந்நிலையில், இதுகுறித்து இன்று காலை 11 மணிக்கு உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
``தமிழர்களின் பண்பாட்டுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, இந்த 2022-ம் ஆண்டில் கீழடி, சிவகளை, வெம்பக்கோட்டை, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வுகள் நடைபெறும்” என அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்.
இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்திற்குள் வந்து, இந்தியாவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை சீன ராணுவம் கடத்திச் சென்றுவிட்டதாக நேற்று முன்தினம் புகார் எழுப்பியிருந்தார் அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி ஒருவர். இந்நிலையில், அந்த சிறுவனின் விவரங்கள் குறித்து சீன ராணுவத்திடம் கேட்டிருப்பதாகவும், ஒருவேளை சிறுவன் சீனாவின் எல்லைக்குள் நுழைந்திருந்தால் மீட்டுக்கொண்டு வந்துவிடுவோம் எனவும் தெரிவித்திருக்கின்றனர் இந்திய ராணுவ உயர் அதிகாரிகள். சீனா, ``நாங்கள் யாரையும் கடத்தவில்லை” எனத் தெரிவித்திருக்கிறது.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், முதல்முறையாக போட்டியிடவிருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். 1989-லிருந்து பா.ஜ.க-வின் கோட்டையாக இருக்கும் கோரக்பூர் சதர் தொகுதியில் போட்டியிடும் அவரை எதிர்த்து, அதே தொகுதியில் போட்டியிடவிருக்கிறார் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத். 2015-க்குப் பிறகு உ.பி-யில் நடந்த தலித்துகளுக்கான போராட்டங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் சந்திரசேகர்.
ஒமிக்ரான் அலை உச்சத்தை அடைந்து கடந்துவிட்டதால், பிரிட்டனில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன். இதன்படி இனி அடுத்த வாரத்திலிருந்து யாரும் அங்கே பொதுவெளியில் மாஸ்க் அணியத் தேவையில்லை.
அமெரிக்காவில் 5G சேவைகள் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டதையடுத்து, பாதுகாப்பு கருதி ஏர் இந்தியா உள்பட பல விமான நிறுவனங்களும் தங்கள் விமானப் பயணங்களை ரத்து செய்திருந்தது குறித்து நேற்று பார்த்தோம் அல்லவா? அந்தப் பிரச்னை ஓரளவு சரியாகியிருக்கிறது. ஏர் இந்தியாவின் போயிங் 777 விமானங்களை அமெரிக்காவுக்கு இயக்க, போயிங் நிறுவனம் நேற்று அனுமதி கொடுத்திருக்கிறது. இதையடுத்து ஏர் இந்தியா நேற்று மீண்டும் பழையபடி விமானங்களை இயக்கத் தொடங்கியிருக்கிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமைகளைப் பெற்றுத்தரும் 13-வது சட்டத்திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த அந்நாட்டிற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் எம்.பி-க்கள் அண்மையில், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் பிரச்னைகளை, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவிடம்தான் தெரிவிக்கவேண்டும் எனக் கூறியுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், நேற்று முன்தினம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென வந்து அவர்களின் படகை சேதப்படுத்தியிருக்கிறது இலங்கை கடற்படை. இதையடுத்து படகு மூழ்கி, நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள், பிற மீனவர்களின் படகு மூலம் மீண்டு வந்திருக்கின்றனர். இதுகுறித்து மாநில உளவுப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2020-ம் ஆண்டு டெல்லியில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்குகளில், முதல் முறையாக நேற்று ஒருவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார். கலவரத்தின்போது வீடுகளைத் தீக்கிரையாக்கிய தினேஷ் யாதவ் என்பவருக்கு, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம்.
1971-ம் ஆண்டு வங்கதேசப் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் 1972-ம் ஆண்டு கட்டப்பட்டது அமர் ஜவான் ஜோதி. டெல்லியில் இந்தியா கேட் அருகே இருக்கும் இந்த இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அணையாமல் தீபம் எரிந்துவருகிறது. இதை தற்போது அணைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. ஏன்? இதற்கு பதிலாக, கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்ட தேசிய போர் நினைவிடத்திலேயே, இனி அரசு அனைத்து வீரர்களுக்கும் மரியாதை செலுத்துமாம். வரும் குடியரசு தினம் முதல் இந்த ஏற்பாடு.
எல்லைகளில் படைகளைக் குவித்து வைத்திருக்கும் ரஷ்யா, இனி எந்த நொடி வேண்டுமானாலும் உக்ரைனுக்குள் நுழையலாம் என எச்சரித்துள்ளது அமெரிக்கா. இந்த விவகாரம் குறித்த விரிவான TSL Explainer-ஐ இங்கே படிக்கலாம்.
On This Day - Jan 21
- திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவான தினம், 1972
- கர்னாடக இசைப்பாடகர் சஞ்சய் சுப்பிரமணியன் பிறந்தநாள், 1968
- நகைச்சுவை நடிகர் சந்தானம் பிறந்தநாள், 1980
- ரஷ்ய புரட்சியாளர் லெனின் மறைந்த தினம், 1924
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:





