🧐 மீண்டும் பரபரப்பாகும் திலீப் வழக்கு; ஏன்?
Today Edition Highlights: இஸ்ரோவின் புதிய தலைவர் சோமநாத் | பஞ்சாப் விவகாரம் குறித்து விசாரிக்க குழு | ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் | இந்திய பாஸ்போர்ட்டின் ரேங்க் என்ன? | Reading Time: ⏱ 6 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக, தனக்கு நடந்த அநீதி குறித்து இரு தினங்களுக்கு முன்பு பொதுவெளியில் மௌனம் கலைத்திருக்கிறார் பாதிக்கப்பட்ட அந்த கேரள நடிகை.
கூடவே, அண்மையில் வெளியான ஆடியோக்களால் மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கிறார் நடிகர் திலீப். 5 ஆண்டுகளாக கேரளாவில் பரபரப்பாக பேசப்படும் நடிகை கடத்தல் வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்திருக்கிறது; ஏன்?
இந்த வழக்கு கடந்துவந்த பாதையையும், தற்போது என்ன நடக்கிறது என்பதையும் இன்றைய TSL-ல் சுருக்கமாகக் காண்போம்.
2017-ல் நடந்தது என்ன?
2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், முன்னணி நடிகை ஒருவர், சில ஆண்களால் கடத்தப்பட்டு, காரில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இந்த பாலியல் தாக்குதலை 7 பேர் கொண்ட அந்த கும்பல் வீடியோவும் எடுத்துவிட்டு, பின்னர் அவரை காரிலிருந்து இறக்கிவிட்டுச் சென்றது.
இந்த வன்கொடுமை சம்பவம் தொடர்பாக உடனடியாக கேரள போலீஸில் அன்றைக்கே புகார் அளித்தார் நடிகை. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களின் ஒருவரான பல்சர் சுனி என்பவரையும் அடையாளம் காட்டினார். இவர் பல மலையாள நடிகர்களுக்கு டிரைவராகப் பணியாற்றியவர் மற்றும் குற்றப்பின்னணி உடையவர்.
இதையடுத்து கேரள போலீஸாரால் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல்சர் சுனி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 மாதங்கள் கழித்து கேரள காவல்துறை, ஏப்ரல் மாதம் முதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. இதில் பல்சர் சுனி உள்பட 7 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்த முதல்கட்ட விசாரணையில் பல்சர் சுனியே முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டாலும், அவர் இதனை தன்னிச்சையாக செய்தாரா, அல்லது வேறொருவர் சொல்லி செய்தாரா என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. இந்த சமயத்தில் திடீர் ட்விஸ்ட்டாக ஒரு சம்பவம் நடந்தது.
மீண்டும் நடந்த விசாரணை
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்சர் சுனியோடு இருந்த, ஜின்சன் என்பவர், இந்த வழக்கு குறித்து சுனி தன்னிடம் நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் எனக் கூறவே, வழக்கு தூசுதட்டப்பட்டு ஜூன் மாதம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது கேரள போலீஸ்.
கூடவே பல்சர் சுனி, திலீப்பிற்கு எழுதியதாகக் கூறப்படும் கடிதமும் வெளியானது. நடிகர் திலீப், பாதிக்கப்பட்ட நடிகையுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும், அவரின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியரின் தோழியும் கூட.
எனவே திலீப் மற்றும் அவரின் நண்பர் இருவரிடமும் 13 மணி நேரம் விசாரணை நடத்தியது போலீஸ். மஞ்சு வாரியரின் தோழியான அந்த நடிகை, திலீப்பிற்கும் காவ்யா மாதவனுக்குமான திருமணம் தாண்டிய தொடர்பை, மஞ்சு வாரியரிடம் சொன்னதற்கு பழிவாங்கவே, அந்த நடிகை மீது இப்போது திலீப் பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடத்தியிருக்கிறார் என்றது போலீஸ்.
மஞ்சு வாரியருடனான விவாகரத்துக்குப் பிறகு, காவ்யா மாதவனை 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டிருந்தார் திலீப். இப்படித்தான் இந்த வழக்கிற்குள் வந்தார் திலீப். அதே ஆண்டு ஜூலை மாதம் கைதும் செய்யப்பட்டார். பின்னர் 85 நாள்கள் கழித்து அக்டோபரில் வெளியே வந்தார்.
பின்னர் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம், 650 பக்கம் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிகையையும் இந்த வழக்கில் தாக்கல் செய்தது போலீஸ். இந்தமுறை திலீப் உள்பட 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதன்பிறகு 3 ஆண்டுகள் முன்னேற்றம் எதுவும் காணாமல் இருந்த இந்த வழக்கில் ஜனவரி, 2020-ல்தான் மீண்டும் விசாரணை தொடங்கியது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான், எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியது. இடையில் நிறைய பிரபலங்கள் திலீப்புக்கு சாதகமாகும்படி, பிறழ்சாட்சியங்களும் அளித்திருந்தனர்.
திடீர் ட்விஸ்ட் 2.0
இந்நிலையில்தான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், திலீப்பின் முன்னாள் நண்பர் இயக்குநர் பாலச்சந்திரகுமார் திடீரென சில ஆடியோக்களை வெளியிட்டார். மேலும், அந்த நடிகை பாலியல் தாக்குதலுக்குள்ளான வீடியோவை திலீப், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்பே பார்த்ததாகவும், இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகளைத் தாக்க திட்டமிட்டதாகவும் அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதற்கான ஆடியோக்களையும் வெளியிட்டார்.
இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து புதிய FIR பதிவு செய்திருக்கிறது கேரள போலீஸ். மேலும், இந்த வழக்கை புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மீண்டும் விசாரிக்க வேண்டுமெனவும் இதற்காக 6 மாத காலம் அவகாசம் வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கேரள அரசு.
திலீப்பும் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, நேற்று முன்தினம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இதுவரையிலான போராட்டம் குறித்து, அந்த நடிகையும் முதல்முறையாக, பொதுவெளியில் மௌனம் கலைத்து இன்ஸ்டாவில் தன் போராட்டம் குறித்து பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
``நான் குற்றம் செய்தவள் இல்லையென்றாலும்கூட, என்னுடைய இந்த 5 வருடப்போராட்டத்தில், என்னை அவமானப்படுத்தவும், தனிமைப்படுத்தவும் பல முயற்சிகள் நடந்தன. ஆனால், அப்போதெல்லாம் எனக்காக குரல்கொடுக்க சிலர் இருந்தனர். இப்போது, அந்தக் குரல்கள் இன்னும் அதிகமாகியிருக்கின்றன. இந்த நீதிக்கான போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்பதை அவை எனக்கு உணர்த்தியிருக்கின்றன. என்னுடன் நிற்கும் அனைவரும் நன்றி!” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார் அவர்.
5 ஆண்டுகளில் நடந்த மாற்றம்
இதற்கு முன்பு பல சமயங்களில் திலீப்பிற்கு ஆதரவாக நின்ற, மலையாள சினிமாவின் மூத்த நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் தற்போது நடிகையின் பதிவை தங்கள் இன்ஸ்டா பக்கங்களில் பகிர்ந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
2017-ம் ஆண்டு திலீப் கைது செய்யப்பட்டவுடன், அவர் மலையாள திரைக்கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artistes)-விலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், 2018-ம் ஆண்டு அவர் ஜாமீனில் வெளிவந்ததும், திலீப்பை AMMA-வில் சேர்க்க பச்சைக்கொடி காட்டினார் மோகன் லால். இவர்தான் AMMA-வின் தலைவரும்கூட.
இதேபோல, 2017-ல் AMMA-விலிருந்து திலீப் நீக்கப்பட்டபோது, பாதிக்கப்பட்ட நடிகைக்காக குரல்கொடுத்த மம்முட்டியும் 2018-ல் மீண்டும் அவரை சேர்க்க முயன்றபோது அமைதி காத்தார். இந்த நடவடிக்கைகள் அப்போது பெண் திரைக்கலைஞர்கள் மத்தியிலும், சமூகத்திலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன.
இந்நிலையில்தான், இப்போது இருவரும் நடிகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை புதிய மாற்றமாக பார்க்கிறது கேரள திரையுலகம். மேலும், திலீப் மீது புதிய FIR பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் மீண்டும் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் நீதி வெல்லட்டும்! ⚖️
1. பதவி விலகிய இரண்டாவது அமைச்சர்
உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க-விலிருந்து 1 அமைச்சரும், 4 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்ததை நேற்று பார்த்தோம் அல்லவா? நேற்று அந்த அமைச்சரான சுவாமி பிரசாத் மௌரியாவுக்கு, 7 ஆண்டு பழைய வழக்கு ஒன்றில், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது!
மேலும், யோகி அரசில் சுற்றுச்சூழல்துறை அமைச்சராக இருந்த, தாரா சிங் சௌஹானும் நேற்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவரும் விரைவில் அகிலேஷூடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி அடுத்தடுத்து விலகிய இரு அமைச்சர்களுமே, OBC பிரிவினரின் முக்கிய தலைவர்கள் என்பதால், இது அக்கட்சிக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
இந்த இருவருமே கடந்தாண்டு யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் தொடர்பாக கட்சித்தலைமையிடம் அதிருப்தி தெரிவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2. யார் இந்த சோம நாத்? 🚀
இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும், கே. சிவனின் பதவிக்காலம் வரும் வெள்ளிக்கிழமையோடு முடிகிறது. இந்நிலையில், அவருக்கு பதில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சோமநாத்.
மூத்த ராக்கெட் விஞ்ஞானியும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (VSSC) தற்போதைய தலைவருமான சோமநாத், இஸ்ரோவின் 10-வது தலைவராகப் பொறுப்பேற்கவிருக்கிறார்.
கேரளாவில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், பெங்களூரு IISc-யில் ஏரோஸ்பேஸ் இன்ஜினீயரிங்கில் முதுகலை படிப்பும் முடித்தவர் சோமநாத். 1985-ம் ஆண்டில் VSSC-ல் இணைந்த இவர், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் ஆரம்ப காலங்கள், GSLV MKIII ராக்கெட் திட்டங்கள், கிரையோஜெனிக் இன்ஜின் ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றியவர்.
``இஸ்ரோ, மத்திய விண்வெளித்துறை, IN-SPACe (விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் அமைப்பு), ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதே என்னுடைய முதல் நோக்கமாக இருக்கும்” என இந்த புதிய பொறுப்பு குறித்து தெரிவித்துள்ளார் சோமநாத்.
3. மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைத்த பிரதமர் 🏥
மார்ச் 31, 2021 நிலவரப்படி தமிழகத்தில் ஆண்டுதோறும் 3,550 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில், கூடுதலாக 1,450 மாணவர்களை சேர்க்கும் வகையில், நேற்று தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
மத்திய மாநில அரசுகளின் கூட்டுறவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கல்லூரிகளுக்கு, மத்திய அரசு சார்பிலிருந்து ₹2,145 கோடிகளும், மாநில அரசு சார்பிலிருந்து ₹1,934.6 கோடிகளும் செலவிடப்பட்டுள்ளன. மொத்த செலவு ₹4,080 கோடி.
நேற்று இவற்றை மட்டுமன்றி, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் மோடி திறந்துவைத்தார். பின்னர் பேசிய அவர், மருத்துவ கல்விக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு செயலாற்றிவரும் திட்டங்கள் குறித்து குறிப்பிட்டார்.
பின்னர், இந்நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ``நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
4. சர்ச்சையான தற்கொலை
தமிழக அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கிய புளியில், பல்லி இருந்ததாக, அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, நந்தன் (70). இந்த செய்தி உடனே வைரலாகவே, நந்தன் மீது பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.
இதனால் அவரின் குடும்பத்தினர் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். அவரது மகன் குப்புசாமி (36) என்பவரும், தற்கொலை செய்துகொண்டுவிட்டார். அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சம்பவத்தில், தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அம்மாவட்ட அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும், அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
5. தவறை ஒப்புக்கொண்ட ஜோகோவிச் 🎾
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல், ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் கலந்துகொள்ள அந்நாட்டுக்கு ஜோகோவிச் சென்ற விவகாரம் அண்மையில் பெரிய சர்ச்சையானது. இறுதியாக நீதிமன்றம், ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் விளையாடலாம் என அண்மையில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் தான் செய்த தவறுகள் குறித்து நேற்று ஒப்புக்கொண்டுள்ளார் ஜோகோவிச். கடந்த டிசம்பர் மாதம் 16-ம் தேதி, ஜோகோவிச்சுக்கு கோவிட் பாசிட்டிவ் என உறுதியானது. பிறகு எப்படி அவர் அடுத்தடுத்த நாள்களில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் எனக் கேள்வி எழுந்தது.
இதற்கு விடையளித்துள்ள அவர், அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தனக்கு கோவிட் பாசிட்டிவ் என்பது தெரியாது எனவும், அதன்பிறகே முடிவுகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதேசமயம், ``ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஒரு பத்திரிகை பேட்டியை மட்டும் நான் தவிர்க்காமல், அந்த நிருபரை சந்தித்தேன்; அப்போது மாஸ்க் அணிந்துதான் இருந்தேன்” எனவும் கூறியிருக்கிறார்.
இரண்டாவதாக, ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு 14 நாள்களுக்குள் ஸ்பெயின், செர்பியா என இரு நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறார் ஜோகோவிச். ஆனால், இதை ஆஸ்திரேலியாவிடம் மறைத்திருக்கிறார். இதை, ஏஜென்ட் தெரியாமல் செய்த பிழை என்றிருக்கிறார் அவர்.
நீதிமன்றம் ஜோகோவிச்சுக்கு அனுமதியளித்தாலும், ஆஸ்திரேலிய அரசு நினைத்தால் இன்னமும் இவரின் விசாவை ரத்து செய்யமுடியும். இந்நிலையில், அவர் சொல்லியிருக்கும் இந்த விஷயங்களையும் வைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆலோசித்து வருகிறது ஆஸ்திரேலியா.
6. 🇮🇳 Ind vs SA 🇿🇦 - இரண்டாம் நாள்
கேப் டவுன் டெஸ்ட்டில், 17-1 என்ற நிலையில், நேற்று களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நேற்றைய போட்டியின் 2-வது பந்திலேயே மார்க்ரமின் விக்கெட்டை பும்ரா தூக்க, அதற்கடுத்தும் இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. இறுதியில் பும்ரா அந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளி வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்காவில் கீகர் பீட்டர்சன் மட்டும் அதிகபட்சமாக 72 (166) ரன்கள் எடுத்திருந்தார். பின்னர் 13 ரன்கள் முன்னிலையுடன், தன் 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, விரைவில் கே.எல்.ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் விக்கெட்டை இழந்தது.
இறுதியாக ஆட்டநேர முடிவில் 70 ரன்கள் முன்னிலையுடன், 57-2 என்ற நிலையில் இருந்தது இந்தியா.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 17,934 (நேற்று முன்தினம்: 15,379) 🔺
- அதிகபட்சமாக, சென்னையில்: 7,372 (6,484) 🔺
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 19 (20)🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 1,94,720 (1,68,063) 🔺
- இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 4,868 (4,461) 🔺
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️ 👇
பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில், பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் கருத்து குறித்து, சித்தார்த் இழிவாக ட்வீட் செய்திருந்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதற்காக நேற்று அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில், நேற்று இரவு இதுதொடர்பாக ஹைதராபாத் போலீஸார் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில், அவருக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். மேலும், முன்ஜாமீன் மனு நிலுவையில் இருக்கும்போதே, ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தமிழக அரசு அவசரம் காட்டியது ஏன் என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடந்த கைதுபோல உள்ளது என்றும், காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு நீதிமன்ற விசாரணைகூட மேற்கொள்ள வேண்டியது வரலாம் என்றும் தமிழக காவல்துறை மீது கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
டெல்டா வேரியன்ட் மற்றும் ஓமிக்ரான் வேரியன்ட் இரண்டிற்கு எதிராகவும், கோவாக்சினின் பூஸ்டர் டோஸ் சிறப்பாக செயலாற்றுவதாக, நேற்று பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
பஞ்சாபில் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பாக விசாரிக்க, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இந்து மல்ஹோத்ரா தலைமையில் குழு அமைத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இதில், NIA இயக்குநர், சண்டிகர் டி.ஜி.பி, பஞ்சாப் துணை டி.ஜி.பி, பஞ்சாப் ஹரியானா நீதிமன்றத்தின் பதிவாளர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் சில துறைகள், வேறொரு அமைச்சகத்துக்கு கீழ் மாற்றப்பட்டிருக்கின்றன. புதிதாக இயற்கை வளத்துறை என ஒன்றும் உருவாக்கப்பட்டு, அது தற்போதைய நீர்ப்பாசன அமைச்சர் துரைமுருகனுக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரைத் துறை, விமான நிலையங்கள் துறை, வெளிநாட்டு மனிதவள நிறுவனம் (OMCL) ஆகியவைதான், தற்போது வேறு அமைச்சகங்களுக்கு கீழ் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
வோடஃபோன் ஐடியா நிறுவனம் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகைக்காக, அந்நிறுவனத்தின் 35.8% பங்குகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறது அரசு. இதன் மூலம் அந்நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராகவும் மாறவிருக்கிறது. அப்படியெனில், அரசு தொடர்ந்து வோடஃபோன் ஐடியாவில் முதலீடு செய்யுமா, அதன் நிர்வாகத்தில் தலையிடுமா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. ஆனால், கம்பெனியை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவரவே அரசு பங்குகளைப் பெற்றுக்கொள்கிறது எனவும், நிலைமை சரியானதும் அரசு வெளியேறிவிடும் எனவும் தெரிவித்துள்ளனர் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள்.
நாட்டின் சில்லறை பணவீக்கமானது (Retail Inflation) கடந்த டிசம்பர் மாதம் 5.59% ஆக உயர்ந்துள்ளது. இது நவம்பரில் 4.91% ஆக இருந்தது. அன்றாட மக்கள் வாங்கும் பொருள்களின் விலையேற்றத்தை இது உணர்த்துகிறது. 📈
முன்கூட்டிய விசா இல்லாமல், ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு, எவ்வளவு நாடுகளுக்குச் செல்ல முடிகிறதோ, அதைப் பொறுத்து அந்த நாட்டின் பாஸ்போர்ட்டானது, The Henley Passport Index-ல் தரவரிசைப்படுத்தப்படும். அதன்படி, இந்தியாவின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு தற்போது 60 நாடுகளுக்கு விசாவின்றி பயணம் செய்யலாம். இதன்படி தரவரிசையில் 83-வது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்தியா. முதலிடம் பிடித்திருப்பது ஜப்பானும், சிங்கப்பூரும். இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு, விசா வாங்காமலே 192 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம். 😲
On This Day - Jan 13, 2022
- விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மா பிறந்தநாள், 1949
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: