📶 அடுத்த BSNL ஆகிறதா வோடஃபோன் ஐடியா?
Today Edition Highlights: மிஸ் ஆன கோலியின் 71-வது செஞ்சுரி | மனிதனுக்குப் பொருத்தப்பட்ட பன்றியின் இதயம் | தமிழக மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கும் மோடி | உ.பி பா.ஜ.க-விற்கு பின்னடைவு | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
அரசுக்கு செலுத்தவேண்டிய AGR நிலுவைத்தொகை மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டண பாக்கிகளுக்கான வட்டித்தொகைக்கு பதிலாக, 35.8% பங்குகளை அரசிடம் கொடுக்க முடிவுசெய்திருக்கிறது வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம். இதன்மூலம் வோடஃபோன் ஐடியாவின் முன்னணி பங்குதாரராக மாறவிருக்கிறது மத்திய அரசு. ஏன் இப்படி தனியார் டெலிகாம் நிறுவனப் பங்குகளை வாங்குகிறது மத்திய அரசு என்பது குறித்தும், வோடஃபோனுக்கும், அரசுக்கும் இதனால் என்ன லாபம் என்பது குறித்தும் இன்றைய TSL-ல் பார்ப்போம்.
இதுபற்றி புரிந்துகொள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பிரச்னைகளையும் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
என்ன பிரச்னை?
இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கும், மத்திய அரசுக்கும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த பிரச்னை, AGR (Adjusted gross revenue) தொடர்பானது. டெலிகாம் நிறுவனங்களின் லாபத்தைக் கணக்கிடுவது தொடர்பாக ஏற்பட்ட இந்தப் பிரச்னையில், இறுதியாக 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி, டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு மொத்தமாக 92,000 கோடிக்கும் மேலாக செலுத்த வேண்டும். ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சேர்த்து இந்த தொகை. இதில் வோடஃபோன் ஐடியாவின் பங்கு மட்டும் சுமார் 58,000 கோடி ரூபாய்க்கும் மேல்.
இந்த தொகையை 2021 முதல் 2031 வரை அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிறுவனங்கள் செலுத்தவேண்டும். இதில்தான் வோடஃபோனுக்கு சிக்கல்.
2016-ம் ஆண்டு ஜியோவின் வருகைக்குப் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய வாடிக்கையாளர்களை இழந்தது வோடஃபோன். இந்தப் போட்டியை சமாளிக்க, 2018-ம் ஆண்டு பிரிட்டனின் வோடஃபோன் நிறுவனம், இந்தியாவின் ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனத்துடன் இணைந்து, வோடஃபோன் ஐடியாவாக (Vi) மாறி, இந்தியாவின் 3-வது பெரிய டெலிகாம் நிறுவனமாக உருவானது.
ஜியோவின் வருகையால் தத்தளித்து வந்த, அந்நிறுவனத்திற்கு 2019-ம் ஆண்டு வந்த AGR தீர்ப்பு மற்றுமொரு இடியாக இறங்கவே, வேறு வழியே இல்லாமல் அரசின் உதவியை நாடியது. பிற டெலிகாம் நிறுவனங்களும், இதேபோல AGR தொகையைச் செலுத்த அரசிடம் சலுகைகள் கேட்டன.
இந்த நிலையில்தான் மத்திய அரசு, டெலிகாம் நிறுவனங்கள் AGR தொகையைச் செலுத்துவதற்கு 2021-ல் சில சலுகைகளை அறிவித்தது. இதன்படி, டெலிகாம் நிறுவனங்கள் நிலுவைத்தொகையை 4 ஆண்டுகள் கழித்து செலுத்த தொடங்கலாம். (2021-லேயே தொடங்குவதற்கு பதிலாக, 2025-லிருந்து). இப்படி தாமதமாகச் செலுத்தப்படும், தொகையின் வட்டித்தொகையை, நிறுவனங்களின் பங்குகளை அரசுக்கு அளித்தும் கழித்துக் கொள்ளலாம். இதில் முதல் ஆப்ஷனை மட்டும் தேர்ந்தெடுத்தது ஏர்டெல். இரண்டு ஆப்ஷன்களையும் தேர்ந்தெடுத்தது வோடஃபோன் ஐடியா.
என்ன காரணம்?
அதிகப்படியான கடன் சுமைதான் முதல் காரணம். இதனால், நீண்டகால அடிப்படையில் புதிய முதலீடுகளைத் திரட்ட முடியாமலும், 5G உள்ளிட்ட எதிர்கால தேவைகளில் முதலீடு செய்ய முடியாமலும் தவிக்கிறது வோடஃபோன் ஐடியா.
எனவே, உடனடியாக ஏதாவது செய்து, கம்பெனியைக் காப்பாற்றுவதே அதன் முதல் நோக்கம். அதற்காகத்தான் இப்போது அரசிடம் சுமார் 16,000 கோடி ரூபாய் வட்டித்தொகைக்கு பதிலாக 36% பங்குகளை அளிக்க முடிவுசெய்திருக்கிறது.
அரசு ஏன் வோடஃபோனுக்கு உதவ வேண்டும்?
வோடஃபோனின் நிலையைப் பார்த்து உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ யாரும் முதலீடு செய்யத் தயாராக இல்லை.
``நிலை இப்படியே போனால், அரசும் உதவவில்லை என்றால், தினசரி நடவடிக்கைகளைக்கூட தொடர முடியாமல், கம்பெனியை மூடவேண்டியதுதான்” என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசிடம் நேரடியாகவே முறையிட்டார் வோடஃபோன் இந்தியாவின் முன்னாள் தலைவர் குமார் மங்கலம் பிர்லா.
மேலும், ``10-க்கும் மேற்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் இருந்த இடத்தில் தற்போது 3 தனியார் நிறுவனங்களே இருக்கின்றன. இது இன்னும் குறைந்தால், இந்த துறைக்கும், வாடிக்கையாளர்களுக்கும் நல்லதல்ல; போட்டிகளற்ற சந்தை, ஆதிக்கத்திற்கே வழிவகுக்கும்” என நினைக்கிறது மத்திய அரசு.
மேலும் வோடஃபோனுக்கு கடன்கொடுத்த வங்கிகளுக்கும் அந்நிறுவனத்தின் சரிவால் சிக்கல் ஏற்படும். இதையெல்லாம் கூட்டி கழித்து பார்த்துதான், வோடஃபோனுக்கு கைகொடுக்க நினைக்கிறது அரசு.
இனி வோடஃபோன் தப்பித்து விடுமா?
இல்லை. வோடஃபோனின் பிரச்னை யானைப்பசி என்றால், அரசின் இந்த உதவி சோளப்பொறிதான்.
அரசின் இந்த உதவி மூலம், இப்போதைக்கு சிறிய இளைப்பாறுதல் மட்டுமே வோடஃபோனுக்கு கிடைத்திருக்கிறது.
இதை வைத்துக்கொண்டு புதிய முதலீடுகளைத் திரட்டுவது, சேவையை மேம்படுத்தி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மற்றும் சராசரி வருமானத்தை (ARPU) உயர்த்துவது, 5G ஏலம், 5G-க்கான உள்கட்டமைப்புகள் என எதிர்காலத்திற்கு தயாராவது போன்றவைதான் அந்நிறுவனத்தைக் காப்பாற்றும். அதற்கு அந்நிறுவனம் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய!
BSNL போல, வோடஃபோனும் இனி அரசு நிறுவனமா?
இல்லை. வோடஃபோன் ஐடியா இன்னமும் தனியார் நிறுவனம்தான். அதேசமயம் அதன் 35.8% பங்குகள் மட்டும் அரசுக்கு சொந்தமாகும். வோடஃபோன் (28.5%) மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தை (17.8%) விட, அந்நிறுவனத்தில் அரசே பெரிய பங்குதாரராக இருந்தாலும்கூட, நிர்வாகம் மொத்தமும் வோடஃபோன் ஐடியா குழுமத்திடம்தான் இருக்கும். எனவே, அரசு வெளியிலிருந்து மட்டுமே வழிநடத்த முடியும்.
``இதைத்தாண்டி, அரசே நிர்வாகத்தை நடத்த நினைப்பது சரியாக இருக்காது; இதற்கு முன்பு அப்படி அரசு நடத்தியவை, இன்று நல்ல நிலையில் இல்லை; எனவே அப்படி செய்யாமல் இருப்பதே நல்லது.” என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே, எதிர்காலத்தில் வோடஃபோன் ஐடியா மீண்டெழுந்தால், ஒரு பங்குதாரராக அரசுக்கு லாபம். இல்லையெனில், டெலிகாம் துறைக்கும், அரசுக்கும் இந்த முயற்சிகள் சறுக்கல்தான்.
இதேபோல, அரசுக்கு செலுத்தவேண்டிய 850 கோடி ரூபாய்க்கு பதிலாக, சுமார் 9.5% பங்குகளை அரசுக்கு விட்டுத்தர முடிவு செய்துள்ளது மகாராஷ்டிராவைச் சேர்ந்த டாடா டெலிசர்வீசஸ். ``இப்படி பங்குகளைத் தர விருப்பமில்லை” எனச் சொல்லிவிட்டது ஏர்டெல்.
1. கர்நாடகா காமெடி 🤭
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணைகட்டி, பெங்களூருவின் தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டுமென (தமிழகம் எதிர்க்கும் அதே திட்டம்தான்), கடந்த 3 நாள்களாக கோவிட் விதிமுறைகளையும் மீறி, கர்நாடகாவில் பாதயாத்திரை சென்றுகொண்டிருக்கிறார் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்.
இந்த பாதயாத்திரையும், அதையொட்டி பா.ஜ.க - காங்கிரஸ் இடையே நடைபெறும் அரசியல் மோதல்களும், இடையே கொரோனா விளையாடும் விளையாட்டுகளும் அங்கே `வேற லெவலாக’ இருக்கின்றன! அதை விளக்கும் ஒரு Thread-ஐ இங்கு அப்படியே பகிர்கிறேன் 👇



2. அணி தாவும் உ.பி பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 🗳
சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர் எம்.எல்.ஏ-க்கள் திடீரென கட்சி தாவுவது உலக வழக்கம்தான். ஆனால், நேற்று உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் ஒரு அமைச்சர் மற்றும் 4 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-விலிருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு சென்றிருப்பது அங்கு `டாக் ஆப் தி டவுனாக’ மாறியிருக்கிறது.
அம்மாநிலத்தின் OBC பிரிவினரிடையே செல்வாக்கு மிகுந்தவரும், அமைச்சரவையில் முக்கிய இடம் வகித்தவருமான சுவாமி பிரசாத் மௌரியா திடீரென இப்படி கட்சி மாறியிருப்பது பா.ஜ.க-வுக்கு பின்னடைவாகவும் கருதப்படுகிறது.
இந்நிலையில், உ.பி தேர்தலில் போட்டியிடவிருக்கும் சரத் பவாரின், தேசிய வாத காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறது.
3. மனிதனுக்குப் பொருத்தப்பட்ட பன்றியின் இதயம் 🐷
உலகில் முதன்முதலாக அமெரிக்காவில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயமானது உயிருள்ள ஒருவருக்குப் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களாக அந்த நபர் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்.
டேவிட் பென்னட் எனப்படும் 57 வயதாகும் முதியவர்தான் அவர். இவருடைய உடல்நிலைக்கு, வழக்கமான இருதய மாற்று அறுவை சிகிச்சைகள் சாத்தியமே இல்லை. எனவே, புதிய முயற்சியாக, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, மரணத்தின் விளிம்பில் இருக்கும் பென்னட்டுக்கு தற்போது பன்றியின் இதயத்தைப் பொருத்தியிருக்கின்றனர்.
இப்போதைக்கு பென்னட் ஆரோக்கியமாகவே இருந்தாலும், ``இதுதான் முதல்முறை என்பதால், இந்த சிகிச்சை எவ்வளவு நாள்களுக்கு பலனளிக்கும் எனத் தெரியாது” என்கின்றனர் மருத்துவர்கள்.
உலகம் முழுக்க உடலுறுப்புகள் தானம் கிடைக்காமல், பல்வேறு நபர்கள் இறந்துவரும் நிலையில்தான், இதுபோன்ற விலங்குகளின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சில மாதங்களுக்கு முன்புதான், மூளைச்சாவு அடைந்த ஒரு நபருக்கு பன்றியின் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சோதிக்கப்பட்டது. ஆனால், இந்த முறை அப்படியின்றி, இயங்கி வரும் மனிதருக்கே பொருத்தப்பட்டிருக்கிறது புதிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற முயற்சிகள் எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பெரியளவில் பயனளிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால், உறுப்புகளுக்காக இதுபோல விலங்குகளை மரபணு மாற்றம் செய்வதும், அவற்றைக் கொல்வதும் தவறு என இந்த முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது பீட்டா (PETA).
4. 🇮🇳 Ind vs SA 🇿🇦 மூன்றாவது டெஸ்ட் 🏏
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் நேற்று கேப்டவுனில் தொடங்கியது. டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு ஆல் அவுட். இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 79(201) ரன்களும், புஜாரா 43(77) ரன்கள் எடுத்தனர்.
கோலி 2 ஆண்டுகளாக சதம் ஏதும் அடிக்காத நிலையில், நேற்று அரைசதம் கடந்ததும், இந்தப் போட்டியில் எப்படியும் நிதானமாக, தன் 71-வது சதத்தைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றும் அது மிஸ் ஆனது.
தென்னாப்பிரிக்க அணியின் ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஜேன்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதற்கடுத்து பேட் செய்த, தென்னாப்பிரிக்கா 10 ரன்களுக்கு தன் முதல் விக்கெட்டை இழந்தது. கேப்டன் டீன் எல்கர், 3(16) ரன்களுக்கு அவுட் ஆனார்.
முதல்நாள் ஆட்டநேர முடிவில், 17 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்புடன் களத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்கா.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 15,379 (நேற்று முன்தினம்: 13,990) 🔺
- அதிகபட்சமாக, சென்னையில்: 6,484 (6,190) 🔺
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 20 (11)🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 1,68,063 (1,79,723) 🔻
- இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 4,461 (4,033) 🔺
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️ 👇
Source: IMD Chennai தமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் கட்டப்பட்ட 11 மருத்துவக்கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் இரண்டையும் இன்று வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் திறந்துவைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
வரும் ஜனவரி 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகமெங்கும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால், அன்றைக்கு நடைபெறவிருந்த மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, ஜனவரி 17-ம் தேதிக்கு (திங்கள்) மாற்றப்பட்டிருக்கிறது.
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் மாயாவதி போட்டியிட மாட்டார் எனத் தெரிவித்திருக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திரா. இதுபோல, முன்னணி தலைவர்கள் சட்டமன்றத் தேர்தல்களில் நேரடியாகப் போட்டியிடாமலே, தேர்தலை எதிர்கொள்வது அங்கு இயல்பான ஒன்றுதான்.
2020-ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவோடு ஏற்பட்ட மோதலையடுத்து, ஐ.பி.எல் தொடரில் சீன நிறுவனமான விவோ டைட்டில் ஸ்பான்சராக இருந்தது சர்ச்சையானது. இதையடுத்து அந்த ஆண்டு விவோவிற்கு பதிலாக, ட்ரீம் 11 சேர்க்கப்பட்டது. பின்னர் கடந்தாண்டு மீண்டும் விவோவே ஸ்பான்சராக இருந்தது. இந்நிலையில், இந்தாண்டு விவோ நிறுவனத்திற்கு பதிலாக, டாடா குழுமம் ஐ.பி.எல்லின் ஸ்பான்சராக இணைந்திருக்கிறது.
- ஜனவரி 17-ம் தேதியும் விடுமுறை:
பொங்கல் பண்டிகையையொட்டி, வரும் 14, 15, 16 ஆகிய நாள்கள் தமிழக அரசின் அரசு விடுமுறை. இதற்கடுத்து 18-ம் தேதியும் தைப்பூசம் காரணமாக அரசு விடுமுறை. எனவே, இடையில் இருக்கும் 17-ம் தேதியும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு. இந்த நாள்களில் தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. இதற்கு பதிலாக, ஜனவரி 29-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம்:
கார்பரேட் நிறுவனங்கள், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அளவை மார்ச் 15, 2022 வரை நீட்டித்திருக்கிறது வருமான வரித்துறை. இதேபோல நிறுவனங்கள் தணிக்கைகளை தாக்கல் செய்வதற்கான தேதியையும், பிப்ரவரி 15, 2022 வரை நீட்டித்துள்ளது. தனி நபர்களுக்கான அவகாசம் கடந்த டிசம்பர் 31-ம் தேதியே முடிந்துவிட்டது. எனவே அவர்களுக்கு இது பொருந்தாது.
On This Day - Jan 12, 2022
- எம்.ஆர்.ராதாவால், எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட தினம், 1967
- `வீரத்துறவி’ என அழைக்கப்பட்ட விவேகானந்தர் பிறந்தநாள், 1863
- விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி, இந்த தினம் தேசிய இளைஞர்கள் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Update: இன்றைய நியூஸ்லெட்டரின் ஆரம்பத்தில் `35.9% பங்குகளை' என பிழையாக இருந்தது. அது `35.8% பங்குகளை' என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
``2020-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது” என்பது ``2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது” என திருத்தப்பட்டுள்ளது.