🗳 உ.பி தேர்தலில் போட்டியிடுவாரா யோகி?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: பா.ஜ.க ஐ.டி விங்கின் ரகசிய App | உயரும் பிஸ்கட் விலை | இந்தியாவின் R எண் தரும் அலர்ட் | Dunzo-வில் முதலீடு செய்த ரிலையன்ஸ் | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
விசாரணைக்கு உத்தரவிட்ட உள்துறை அமைச்சகம்
பஞ்சாபில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியின் பயணம் தடைபட்ட விவகாரம், நேற்றும் அரசியல் களத்தில் பரபரப்பாகவே இருந்தது.
பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், நேற்று மோடியை ராஷ்டிரபவனில் சந்தித்துப் பேசியிருக்கிறார்.
பா.ஜ.க தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், காங்கிரஸ் மீது நேற்றும் தொடர்ந்து விமர்சனங்களை வைத்தனர். மேலும், பா.ஜ.க நிர்வாகிகள் சார்பில் நாட்டின் சில இடங்களில் மோடியின் ஆயுளுக்காக, `மகா மிருதுஞ்சய மந்திரங்களும்’ ஓதப்பட்டு கோயில்களில் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன.
நேற்று முன்தினமே இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, பஞ்சாப் மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. பஞ்சாப் அரசும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை கமிட்டியை அமைத்திருந்தது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகமும் நேற்று 3 பேர் கொண்ட ஒரு விசாரணை கமிட்டியை அமைத்திருக்கிறது. இந்த கமிட்டி விரைவில் அறிக்கை தாக்கல் செய்ததும், மத்திய அரசு பஞ்சாப் மாநில காவல்துறை அதிகாரிகள் மீது, SPG சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற ஹைலைட்ஸ்
இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நேற்று, கேள்வி நேரம் நடைபெற்றது. இதில் பல்வேறு உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்களும், முதலமைச்சரும் பதிலளித்தனர். அதில் முக்கியமான ஹைலைட்ஸ் மட்டும் இங்கே…
சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலாக கேள்வி நேரம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழக அரசின் செய்தித்துறையின் யூடியூப் சேனலில் இந்த நேரலை ஒளிபரப்பானது.
நேற்று முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதா மீது, ஆளுநர் காலம் தாழ்த்துவது தொடர்பாக எடுத்துரைக்க தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சரை சந்திக்க 3 முறை முயன்றனர். ஆனால், உள்துறை அமைச்சர் அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்காக நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறார் தமிழக முதல்வர். ``அதில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்து, நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடரும்” என நேற்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்வது குறித்து நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ``ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, சென்ற ஆட்சி கொண்டுவந்த சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். அந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விரைவில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு நிச்சயமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதேபோல மாநில பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பது குறித்து பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு விளக்கமளித்த முதல்வர், ``வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார். தற்போது இந்த நியமனங்களை ஆளுநரே மேற்கொள்கிறார்.
உ.பி தேர்தலில் போட்டியிடுவாரா யோகி?
- நம்மூர் முதல்வர் வேட்பாளர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எந்த சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்கள் என்பது மட்டும்தான் செய்தி. ஆனால், உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதே பெரிய செய்தி. ஏனெனில் அங்கு வரலாறு அப்படி!
- இதற்கு முன்பு உ.பி முதல்வர்களாக இருந்த மாயாவதி, அகிலேஷ் யாதவ் இருவருமே எம்.எல்.ஏ-க்களாக இருந்து முதல்வரானவர்கள் இல்லை. தேர்தலில் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றதும், முதல்வராகப் பதவியேற்று, அதன் பின்னர் சட்ட மேலவை (எம்.எல்.சி) உறுப்பினராகி, முதல்வர் பதவியை தக்கவைப்பார்கள். 2017-ல் யோகி ஆதித்யநாத்தும் இதையேதான் செய்தார்.
- ஒருவேளை முதல்வராக முடியாது எனில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி-யாகி விடுவார்கள். பின்னர், மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு வந்தால், எம்.பி பதவியிலிருந்து ராஜினாமா… எம்.எல்.சி ரூட்டு… ரிப்பீட்டு!
- ஆனால், இந்தமுறை யோகி, அகிலேஷ் இருவருமே நேரடியாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. யோகியின் எம்.எல்.சி பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடியும் நிலையில், தன்னுடைய இமேஜை மேலும் உயர்த்திக்கொள்ளவும், பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தவும் மதுரா, அயோத்தி அல்லது கோரக்பூர் பகுதியின் ஏதேனும் ஒரு தொகுதியில் களமிறங்கலாம் என பா.ஜ.க வட்டாரங்களில் பேசப்படுகிறது.
- ஒருவேளை அகிலேஷூம் களமிறங்கினால், எம்.எல்.ஏ-க்காக அகிலேஷ் போட்டியிடும் முதல் தேர்தல் இதுதான்.
- இந்தியாவில் இப்போதைக்கு 6 மாநிலங்களில் மட்டும்தான், மேலவை நடைமுறையில் இருக்கிறது. மேற்கு வங்கத்தில் அப்படி ஒன்று இல்லாததால்தான், நந்திகிராம் தொகுதியில் தோற்றபின், மம்தா பானர்ஜி மீண்டும் பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று, முதல்வர் பதவியைத் தக்கவைத்தார்.
BJP ஐ.டி விங்கின் ரகசிய App?
ரகசிய ஆப் ஒன்றின் மூலமாக, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போலியான ட்ரெண்டிங்குகளை உருவாக்குவதற்கும், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் மீது இணையத்தில் கும்பல் தாக்குதல் நடத்துவதற்கும், வெறுப்பு பிரசாரங்களை மேற்கொள்வதற்கும் பா.ஜ.க ஐ.டி விங் சார்பில், `Tek Fog’ என்ற ரகசிய App ஒன்று செயல்படுவதாக, திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது `தி வயர்’ இணையதளம்.
இரண்டு தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படும் இந்த App ஆனது, முழுக்க முழுக்க இணைய வெறுப்பு பிரசாரங்களுக்கும், தனி நபர் தாக்குதல்களுக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது என ஆதாரங்களுடன் விளக்கியிருக்கிறது `தி வயர்.’
கஜகஸ்தான் கலவரம்
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கடந்த 4 நாள்களாக மக்கள் போராட்டம் வெடித்து, அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதுவரை 12 பாதுகாப்பு படை வீரர்கள், பொது மக்களுடனான மோதலில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, ரஷ்யா, அர்மேனியா உள்ளிட்ட அண்டைநாடுகளின் உதவியை நாடவே, அந்நாட்டின் பாதுகாப்பு படைகள் தற்போது கஜகஸ்தானில் களமிறங்கியுள்ளன.
அந்நாட்டில் பெரும்பாலான மக்கள் வாகனங்களுக்குப் பயன்படுத்தும் எல்.பி.ஜி எரிவாயுவின் விலை உயர்வைத் தொடர்ந்து கடந்த ஞாயிறன்று தொடங்கிய போராட்டம், அப்படியே அரசுக்கு எதிரான ஒட்டுமொத்த போராட்டமாக மாறியது. இதையடுத்து அந்நாட்டு அரசு ராஜினாமா செய்துள்ளது. இருந்தும் இன்னும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை.
தொடரை சமன் செய்த தென்னாப்பிரிக்கா
ஜோஹன்னஸ்பெர்க் டெஸ்ட்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, டெஸ்ட் தொடரை 1 - 1 என சமன் செய்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஜோஹன்னஸ்பெர்க்கில் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைவது இதுவே முதல்முறை. இரண்டாவது இன்னிங்ஸில், 96 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட தென்னாப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, ஜனவரி 11-ம் தேதி கேப்டவுனில் தொடங்கவிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 6,983 (நேற்று முன்தினம்: 4,862)
- அதிகபட்சமாக, சென்னையில்: 3759 (2481)
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 11 (9)
இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு: 90,928 (58,097)
- இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 2,630 (2,135)
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான, இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின தினத்திற்காக நடந்த பிரமாண்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது நினைவிருக்கிறதா? அந்த நிகழ்ச்சிகளுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களை அழைத்து வருவதற்காக, சுமார் 15 கோடி ரூபாயை செலவழித்திருக்கிறது மத்தியப் பிரதேச அரசு. இது பழங்குடியினர் நலனுக்கான நிதியிலிருந்து செலவிடப்பட்ட நிதியாம்.
Bulli bai என்ற App மூலமாக இணையத்தில், இஸ்லாமிய பெண்களை இழிவாக சித்திரித்த வழக்கில், நீரஜ் பிஷ்னோய் என்ற 21 வயது இளைஞனை அஸ்ஸாமில் வைத்து கைது செய்திருக்கிறது டெல்லி காவல்துறை. இந்த வழக்கில் மிக விரைவாக இதுவரைக்கும் 3 பேரை மும்பை காவல் துறை கைது செய்திருந்த நிலையில், 6 மாதங்களாக எதுவும் செய்யாத டெல்லி போலீஸ் தற்போதுதான் முதன்முதலாக ஒரு கைது நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
ஓமிக்ரான் பரவலைத் தொடர்ந்து, கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும்கூட, ஜனவரி 9-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை, அம்மாநிலத்தின் மேக்கேதாட்டூவிலிருந்து பெங்களூரு வரை, பாதயாத்திரை செல்லவிருக்கின்றனர் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களான டி.கே.சிவக்குமாரும், சித்தராமைய்யாவும். எதற்கு? காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டூவில் விரைவில் அணைகட்டச் சொல்லி, மாநில அரசை வலியுறுத்துவதற்காகவாம். இந்த மேக்கேதாட்டூ திட்டத்தைத்தான் தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக, வரும் ஜனவரி 12-ம் தேதி மதுரையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருந்த, `மோடி பொங்கல்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதேநாளில், தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளைத் திறந்துவைக்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார் மோடி. இந்த நிகழ்ச்சி குறித்து தமிழக அரசு இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த தொகுப்பை ரேஷன் கடைகளில் ஜனவரி 31-ம் தேதி வரை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
பிரபல Quick Commerce நிறுவனமான டன்ஸோ(Dunzo)-வில் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்து, அந்நிறுவனத்தின் 25.8% பங்குகளை வாங்கியிருக்கிறது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம்.
எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாக, விரைவில் தன்னுடைய சில பிஸ்கட் பொருள்களின் விலையை 5-7% வரை உயர்த்தவிருக்கிறது பார்லே நிறுவனம்.
ஒருவரிடமிருந்து ஒரு தொற்று, இன்னொருவருக்கு பரவும் எண்ணிக்கையை ஆர் எண் (R Number) என்பார்கள். இது ஒன்றுக்கு கீழ் இருந்தால், நோய்ப்பரவல் கட்டுக்குள் இருக்கிறது என அர்த்தம். கொரோனாவின் இரண்டாவது அலையில் அதிகபட்சமாக இந்தியாவின் கொரோனா ஆர் எண் 1.69 ஆக இருந்தது. ஆனால், இப்போது மூன்றாவது அலையில், இது 2.69 ஆக புதிய உச்சம் தொட்டிருக்கிறது. அதாவது, 100 பேருக்கு தொற்று இருந்தால், 269 பேருக்கு அது பரவும். எனவே, இந்த முறை இரண்டாவது அலையைவிடவும், அதிகம்பேர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
இந்தியாவில் வசித்துவந்த சிவிங்கிப் புலிகள் (Cheetah) கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, 1952-க்குப் பிறகு அவை முற்றிலுமாக அழிந்துபோயின. இந்நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் 50 சிவிங்கிப்புலிகளை ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து, இந்தியாவிற்கு கொண்டுவந்து, மீண்டும் சிவிங்கிப்புலிகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
இந்திய - சீன எல்லைக்கு அருகே, பாங்காங் ஏரியில் சீனா புதிதாக பாலம் கட்டும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், சீனாவின் இந்த செயலுக்கு நேற்று கண்டனம் தெரிவித்துள்ளது இந்தியா. 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் இடத்தில்தான் சீனா தற்போது பாலம் கட்டி வருவதாகவும், இந்தியா எப்போதும் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான வரம்புகள் 2014-க்குப் பிறகு பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளன. அந்த விவரங்கள் 👇 (பெரிய மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களுக்கு வெவ்வேறு வரம்புகள்)
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
பின்னர், மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு வந்தால், எம்.பி பதவியிலிருந்து ராஜினாமா… எம்.எல்.சி ரூட்டு… ரிப்பீட்டு!