🛡கொரோனா: இந்த புதிய தடுப்பூசிகளின் ரோல் என்ன?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: பயிற்சி மருத்துவர்கள் போராடுவது ஏன்? | உயரும் உலக கொரோனா பாதிப்புகள் | மோடியின் புதிய காரில் என்ன ஸ்பெஷல்? | Reading Time: ⏱ 5 Minutes
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இரண்டு புதிய கொரோனா தடுப்பூசிகளுக்கும், ஒரு கொரோனா மருந்துக்கும் நேற்று அவசர கால பயன்பாடு அடிப்படையில் அனுமதியளித்திருக்கிறது மத்திய அரசு. இதையடுத்து இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 8 ஆகவும், கொரோனா மருந்துகளின் எண்ணிக்கை 4 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் V ஆகிய 3 தடுப்பூசிகளை மட்டும்தான் மத்திய அரசு வழங்கிவருகிறது. இந்நிலையில் நேற்று அறிமுகமான தடுப்பூசிகளும், ஆன்டி வைரல் மாத்திரையும் இந்தியாவின் கொரோனா சிகிச்சைகளில் முக்கிய பங்காற்றலாம் என்பதால் அவற்றின் சின்ன பயோ டேட்டாவை பார்த்துவிடுவோம்.
கோவோவேக்ஸ்:
அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட, இந்த தடுப்பூசியின் லைசென்ஸைப் பெற்று, இங்கு இந்தியாவில் `கோவோவேக்ஸ்’ என்ற பெயரில் உற்பத்தி செய்கிறது சீரம் நிறுவனம். இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசி இது.
கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்திற்கு எதிராக எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நம்மை நோய் பாதிப்பிலிருந்து தடுக்கவல்லது.
உலக சுகாதார மையத்தாலும், அவசர கால பயன்பாடு அடிப்படையில் இது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் 3-வது பூஸ்டர் டோஸானது, ஓமிக்ரானுக்கு எதிராகவும் செயலாற்றுகிறது என அண்மையில் தெரியவந்திருக்கிறது.
இதை இந்தியாவில் உற்பத்தி மட்டும் செய்ய, கடந்த மே மாதமே சீரம் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கிய அரசு, தற்போதுதான் இங்கு பயன்படுத்தவும் அனுமதி வழங்கியிருக்கிறது.
கோர்பிவேக்ஸ்:
அமெரிக்காவின் பேய்லர் கல்லூரி உருவாக்கிய இந்த தடுப்பூசியை, ஹைதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனம் இங்கு உற்பத்தி செய்யவிருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தைப் போலவே இந்தியாவின் முன்னணி தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று, இந்த பயாலஜிக்கல்-இ.
கோர்பிவேக்ஸ் தடுப்பூசியும் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை குறிவைத்தே செயல்படும். இரண்டு டோஸ்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த தடுப்பூசிக்காக, கடந்த ஜூன் மாதமே 1,500 கோடி ரூபாய் கொடுத்து, 30 கோடி டோஸ்களை புக் செய்துவிட்டது மத்திய அரசு. தற்போது பயன்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அரசின் தடுப்பூசி முகாம்களில் இனி கோர்பிவேக்ஸூம் இடம்பெறலாம்.
கோர்பிவேக்ஸின் இன்னொரு சிறப்பு, இதன் விலை. பிற தடுப்பூசிகளோடு ஒப்பிடுகையில் இதன் விற்பனை விலை மிகவும் குறைவாக இருக்கும் (இரண்டு டோஸூம் சேர்த்து 500 ரூபாய்க்குள்) என எதிர்பார்க்கப்படுகிறது.
மோல்னுபிரவிர் மாத்திரை:
கோவிட் சிகிச்சைக்காக இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல் ஆன்டி வைரல் மாத்திரை இந்த மோல்னுபிரவிர்தான். ஆரம்பத்தில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸூக்கு எதிராக மட்டுமே சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட இந்த மாத்திரைகள் பின்னர், கொரோனாவிற்கு எதிராகவும் சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டன.
கோவிட் நோயை உண்டாக்கும் SARS-CoV-2 வைரஸின் மரபணுவில் பாதிப்பை உண்டாக்கி, உடலில் கொரோனா வைரஸ் பல்கிப்பெருகுவதை இது தடுக்கிறது.
முதல்கட்ட ஆய்வுகளில் இதன் செயல்திறன் உறுதியானதைத் தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலும் இதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மாத்திரைகள் வைரஸூக்கு எதிராக செயலாற்றும் என்றாலும், அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது. குறிப்பாக 18 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கு இதனால் பின்விளைவுகள் ஏற்படலாம் என்பதால், அவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.
கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு, அதிக நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நபர்களும், இருதய நோய், முதுமை, நீரிழிவு, உடல் பருமன் போன்ற கூடுதல் ரிஸ்க் கொண்டவர்கள் மட்டுமே மருத்துவர் பரிந்துரையின் பேரில், வைரஸின் தாக்கத்தைக் குறைக்க இதை எடுத்துக்கொள்ளலாம். அதேபோல ஒருவர் 5 நாள்களுக்கு மேலும் இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
இந்த மாத்திரை ஓமிக்ரானுக்கு எதிராகவும் செயலாற்றும் வாய்ப்பு அதிகம் என்பதால், இந்தியாவில் கொரோனா சிகிச்சையில் விரைவில் இது இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த மாத்திரைகளை 13 நிறுவனங்கள் உற்பத்தி செய்யவிருக்கின்றன.
இதுவரைக்கும் இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகள்
கோவிஷீல்டு
கோவாக்சின்
ஸ்புட்னிக் V
கோவோவேக்ஸ்
கோர்பிவேக்ஸ்
மாடர்னா
ஜான்சன் & ஜான்சன்
ZyCoV-D
கோவிட்டுக்கு எதிராக செயலாற்றும் மருந்துகளில் இதுவரை அனுமதிக்கப்பட்டவை…
Tocilizumab
2-deoxy-D-glucose (2-DG)
REGEN-COV2 ஆன்டிபாடி காக்டெயில்
மோல்னுபிரவிர்
2. பயிற்சி மருத்துவர்கள் போராடுவது ஏன்?
டெல்லியில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 5,000 முதல் 6,000 பயிற்சி மருத்துவர்கள் கடந்த இரண்டு நாள்களாக சாலைகளில் இறங்கி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்பு 10 நாள்களுக்கும் மேலாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதில் நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின் மீது, டெல்லி காவல்துறையினர் மருத்துவர்களிடம் மிக மோசமாக நடந்துகொள்ளவும், போராட்டம் இன்னும் தீவிரமானது. அங்குள்ள பல அரசு மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
இதையடுத்து, நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மருத்துவர்களை போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். காவல்துறையினர் சார்பில் மன்னிப்பு கேட்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். ஆனாலும், போராட்டம் முடியவில்லை. ஏன் போராடுகிறார்கள் பயிற்சி மருத்துவர்கள்?
அரசு மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவுகளில் முதுகலை மருத்துவ மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றுவது வழக்கம். முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு என 3 பேட்ச் மருத்துவர்களும் பணியாற்றும் இடத்தில், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக 2 பேட்ச் மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வந்தார்கள். காரணம், இந்த ஆண்டுக்கான நீட் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை; எனவே புதிய மாணவர்களும் வரவில்லை. இது தற்போது பணியிலிருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையானது.
இந்நிலையில், இப்போது இதில் மூன்றாமாண்டு மாணவர்களும் தேர்வுகள் காரணமாக பணியிலிருந்து விலகிவிட்டனர். இதையடுத்து, 3 பேட்ச் பார்த்த வேலைகளை, ஒரே ஒரு பேட்ச் பயிற்சி மருத்துவர்கள் மட்டுமே பார்க்க நேரிடுகிறது. இதனால், ஒவ்வொருவரும் சுமார் 36 மணி நேரத்திற்கும் மேல், ஒரேடியாக பணி செய்ய நேரிடுவதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக விடுமுறையே இல்லாமல் பணியாற்றும் தங்களுக்கு இது அதிக மன அழுத்தத்தைக் தருவதாகவும் குமுறுகின்றனர் மருத்துவர்கள்.
ஏன் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை?
முதல் காரணம், கொரோனா. இரண்டாவது காரணம், அரசு இந்த ஆண்டு முதுகலை நீட் கவுன்சிலிங்கில் அமல்படுத்த நினைத்த முன்னேறிய பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு (EWS).
வழக்கமாக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நீட் தேர்வு நடந்து, மே / ஜூன் மாதங்களில் புதிய மாணவர்கள் வந்துவிடுவார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக, நீட் தேர்வு தள்ளிப்போனது. செப்டம்பரில் முடிவுகள் வந்தது. அதற்கடுத்து அக்டோபரில் கவுன்சிலிங் நடைபெற இருந்த நிலையில்தான், அரசின் 10% EWS இடஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
முன்னேறிய பிரிவினரில் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள் இந்த 10% இடஒதுக்கீட்டில் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இந்த 8 லட்சம் ரூபாய் என்ற வரம்பை அரசு எப்படி நிர்ணயித்தது எனக் கேள்வி எழுப்பியது உச்சநீதிமன்றம். எனவே இதுதொடர்பாக, 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது அரசு.
இப்படி ஏற்கெனவே 6 மாதங்கள் நடக்காத மாணவர் சேர்க்கை, மத்திய அரசின் தாமதத்தால் இன்னும் தள்ளிப்போவதால், விரக்தியடைந்தனர் பயிற்சி மருத்துவர்கள். இதனால், கடந்த நவம்பர் மாதம் 27-ம் தேதியே டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது, அவர்களை சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், விரைவில் அரசு சார்பில் 10% EWS இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் 3 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்வதாகவும், அதையடுத்து கவுன்சிலிங்கிற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் வாக்குறுதியளித்திருக்கிறார்.
ஆனால், அரசு அப்படியே பல்டி அடித்து, அறிக்கை தாக்கல் செய்ய 3 வாரம் அவகாசம் அளித்து, ஒரு குழு அமைத்தது. இதையடுத்து டிசம்பர் 6 முதல் மீண்டும் டெல்லியில் போராட்டங்களைத் தொடங்கினர் மருத்துவர்கள். அதுவரை அமைதியாக நடந்துவந்த போராட்டம், நேற்று முன்தினம் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி செல்லத் தொடங்கியபோதுதான், காவல்துறையினரின் நடவடிக்கைகளால் கொதிநிலையைத் தொட்டது.
சுமார் 42,000 மாணவர்கள் நாடு முழுவதும் நீட்டில் தேர்ச்சி பெற்று, தயாராக இருக்கின்றனர். அவர்களை உடனே கவுன்சிலிங் நடத்தி பணியில் சேர்க்கவேண்டும். இல்லையெனில், கொரோனா 3-ம் அலை வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூழலில், நிச்சயம் மருத்துவமனைகள் தாங்காது என்பது பயிற்சி மருத்துவர்களின் குரல்.
ஆனால், விவகாரம் உச்சநீதிமன்றத்தின் முன் இருப்பதால், இப்போதைக்கு எதுவும் செய்யமுடியாது. ஜனவரி 6-ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபின்தான், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்கிறது மத்திய அரசு.
நேற்றிலிருந்து டெல்லியின் கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களும், போராட்டத்தில் இணைந்திருக்கின்றனர். எனவே அரசு மிகுந்த இக்கட்டான சூழ்நிலையில் நின்றுகொண்டிருக்கிறது!
உலகம் முழுவதும் உயரும் கொரோனா
உலகின் பல நாடுகளில் ஓமிக்ரான் வேரியன்ட்டின் தாக்கம் அதிகரித்திருப்பதால், கொரோனா தொற்று பாதிப்புகளும் உயர்ந்துகொண்டே வருகின்றன. கடந்த 7 நாள் சராசரி தொற்று எண்ணிக்கை, கடந்த மாதத்தை விட 49% அதிகமாகும். ஆனால், இந்த அதிவேகப் பரவலில் நமக்கு தெரியவந்திருக்கும் ஒரே நல்ல விஷயம், தொற்று எண்ணிக்கை உயரும் அளவுக்கு, இறப்பு எண்ணிக்கை உயரவில்லை. அதிகப்படியான மக்கள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டதாலோ அல்லது தடுப்பூசியினால் பெற்ற எதிர்ப்பு சக்தி காரணமாகவோ, இந்த ஓமிக்ரான் இன்னும் நம்மை நோய் பாதிப்பு விஷயத்தில் பெரியளவில் பாதிக்கவில்லை.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 619
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 6
ஆம்வே, டப்பர்வேர் போன்ற நிறுவனங்கள் பிரமிட் முறையில் ஒருவரிடமிருந்து, இன்னொருவருக்கு பொருள்களை விற்கும் முறையை அறிவீர்கள்தானே? இதுபோன்ற நிறுவனங்களின், பிரமிட் விற்பனை முறைக்கு தடை விதித்திருக்கிறது மத்திய அரசு. 3 மாதங்களுக்குள் இந்த பிரமிட் விற்பனையை நிறுவனங்கள் கைவிட வேண்டும்.
அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட Missionaries of Charity அறக்கட்டளையின் லைசென்ஸை, அரசு புதுப்பிக்காததால், அந்த அறக்கட்டளை வெளிநாட்டு நிதிகளைப் பயன்படுத்த முடியாமல் இருப்பதாக நேற்று பார்த்தோம் அல்லவா? இப்படி அரசால், Missionaries of Charity மட்டுமல்ல; நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 22,000 அறக்கட்டளைகளில் 10 - 15% அறக்கட்டளைகள் அரசால், அனுமதி புதுப்பிக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.
நடப்பு கல்வியாண்டில் நிச்சயம் 10 மற்றும் 12-ம் வகுப்பினருக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தாலோ, ஒருவர் அடுத்த 10 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விதிகளை 5 நாள்களாக குறைத்திருக்கிறது அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு மையம்.
ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் தகுதி வாய்ந்த அரசுப்பணியாளர்கள் அனைவருக்கும், அகவிலைப்படியை 14% உயர்த்தி, 31% ஆக வழங்க உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தன்னுடைய லேண்ட் க்ரூஸர் மற்றும் ரேஞ்ச் ரோவர் கார்களின் வரிசையில் புதிதாக மெர்சிடீஸ் மேபக் 350 காரையும் இணைத்துள்ளார் பிரதமர் மோடி. குண்டு துளைக்காத ஜன்னல்களையும், ஆயுத தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறனும் படைத்தது இந்த மேபக். பிரதமருக்காக பிரத்யேக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள இந்தக் காரின் விலை என்னவென்று உறுதியாகத் தெரியவில்லை. 12 கோடி ரூபாய்க்கு மேலே இருக்கலாம் என்று மட்டும் கணிக்கப்பட்டுள்ளது.
GST-யில் நடக்கும் மாற்றங்கள்
வரும் ஜனவரி 1-ம் தேதி ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் சில மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன. அதன்படி,
உடைகள், காலணிகள் போன்றவற்றின் விலை உயர்கிறது. இவற்றிற்கு 5% விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி, ஜனவரி 1-ம் தேதி முதல் 12% ஆக உயர்கிறது.
ஓலா, உபெர் போன்றவற்றில் ஆட்டோ ரிக்ஷா புக் செய்தால், ஜனவரி 1-ம் தேதி முதல் 5% அதற்கு ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படவிருக்கிறது.
இதுவரை ஸ்விக்கி, ஜொமேட்டோ போன்றவற்றில் ஆர்டர் செய்தால், அந்த உணவுக்கான ஜி.எஸ்.டி-யை அந்தக் கடை உரிமையாளர்கள் வசூலித்து வந்தனர். ஆனால், இனி ஜனவரி 1-ம் தேதி முதல் ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள்தான் இந்த ஜி.எஸ்.டி-யை ஒட்டுமொத்தமாக வசூலித்து அரசுக்கு கட்டவேண்டும். வரி ஏய்ப்பைத் தடுக்க இந்த ஏற்பாடாம்.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: