The Subject Line

Share this post
🗳 BJP, TDP - இந்த இரண்டு கட்சிகளும் சிக்காதது ஏன்?
www.thesubjectline.in

🗳 BJP, TDP - இந்த இரண்டு கட்சிகளும் சிக்காதது ஏன்?

இன்றைய TSL-ன் பிற அப்டேட்ஸ்: அன்னை தெரசாவின் அறக்கட்டளைகளுக்கு என்ன சிக்கல்? | அடுத்த ஆண்டு சென்னைக்கு வரும் 5ஜி | RBL வங்கிக்கு என்னாச்சு? | சென்னையில் தொடங்கும் `நம்ம ஊரு திருவிழா' | Reading Time: ⏱ 5 Mins

ஞா.சுதாகர்
Dec 28, 2021
Share this post
🗳 BJP, TDP - இந்த இரண்டு கட்சிகளும் சிக்காதது ஏன்?
www.thesubjectline.in

ஹாய், ஹலோ… வணக்கம் 👋

அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா பற்றியும், அதில் சொல்லப்பட்டிருந்த ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பற்றியும் ஏற்கெனவே TSL-ல் பார்த்திருந்தோம். இதனால் என்னவெல்லாம் பிரச்னைகள் ஏற்படலாம் எனவும் அப்போது பார்த்தோம். அதுதொடர்பாக, நேற்று Article 14 தளத்தில் வெளியான ஒரு எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை பற்றிதான் இன்று பார்க்கப்போகிறோம்.

- ஆதார் தகவல்கள் இதற்கு முன்பு பா.ஜ.க (புதுச்சேரி), தெலுங்குதேசம் (ஆந்திரா) கட்சிகளால் எப்படி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன,

- இந்த முறைகேடுகள் குறித்து செய்திகள் வந்தபின்கூட ஏன் UIDAI, தேர்தல் ஆணையம் போன்றவை கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை,

- தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரை இணைப்பது என்பது எப்படி கட்சிகளுக்கு சாதகமாக அமையும் போன்ற முக்கியமான விஷயங்களை அலசுகிறது இந்தக் கட்டுரை. அதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஹைலைட்ஸை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

புதுச்சேரி பா.ஜ.க-வின் தில்லுமுல்லு

  • புதுச்சேரியைச் சார்ந்த அரசியல் செயற்பாட்டாளரான ஆனந்த் என்பவருக்கு மார்ச் 2021-ல் மொபைலுக்கு ஒரு மெசேஜ் வருகிறது. பா.ஜ.க-வின் தேர்தல் விளம்பரம் அது. வழக்கமான விளம்பரங்களுக்கும், அந்த மெசேஜூக்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. காரணம, ஆனந்த் அந்த மெசேஜை க்ளிக் செய்ததும், நேராக அவருடைய பூத் பெயர்கொண்ட வாட்ஸ்அப் குழுவிற்கு அழைத்துச் சென்றது.

  • அப்போதுதான், ஆனந்திற்கு அதன் ஆபத்து புரிகிறது. எப்படியோ மக்களின் மொபைல் எண்களை தொகுதி வாரியாக, பூத் வாரியாகப் பிரித்து பிரசாரம் செய்கின்றனர் என நினைக்கிறார். இவ்வளவு துல்லியமாக எப்படி இது சாத்தியம்? ஆதார் டேட்டா மீது சந்தேகம் வருகிறது. காரணம், அவருக்கு SMS வந்த எண், ஆதாரோடு இணைக்கப்பட்ட மொபைல் எண். இதைப் பிறரின் மொபைல் எண்களையும் வைத்து உறுதி செய்கிறார். ஆதார்தான் வில்லன் என உறுதியானதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.

  • மக்களின் பிரைவசியை மீறுவது, மொபைல் எண்கள் மூலம் டிஜிட்டல் வழியாக வாக்குக்கு பணம் கொடுக்க வாய்ப்பு இருப்பது, ஆதார் தகவல்களை பா.ஜ.க திருடியது என மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

  • இதை விசாரித்த நீதிமன்றம், இந்தக் குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை இருப்பதாகக் கூறி, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது.

  • புதுச்சேரி சைபர் செல், தேர்தல் ஆணையம் இரண்டுமே விசாரணை நடத்தின. ஆனந்த் கூறியது போல, பா.ஜ.க பிரசாரத்திற்கு மக்களின் மொபைல் எண்களைப் பயன்படுத்திய உண்மைதான் என சைபர் செல் சொன்னது. இந்தப் பிரசாரங்களின் செலவினங்களை தேர்தல் செலவு அறிக்கையில்கூட அக்கட்சி குறிப்பிடவில்லை என தேர்தல் ஆணையம் கண்டுபிடித்தது. அந்த மொபைல் எண்கள் ஆதாரிலிருந்து எடுக்கப்பட்டவையா என மட்டும் அப்போது தெரியவில்லை.

  • பா.ஜ.க-வோ, ``எங்களுடைய தொண்டர்கள் மக்களிடம் சென்று சேகரித்த எண்களுக்கு மட்டுமே நாங்கள் SMS அனுப்பினோம்” என்றது. ஆனால், அப்படி சேகரித்ததற்கு எந்த ஆதாரத்தையும் அக்கட்சி சமர்ப்பிக்கவில்லை.

  • உடனே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இதுகுறித்து ஆதார் ஆணையமும் (UIDAI), தேர்தல் ஆணையமும் கூடுதல் விசாரணை நடத்தி முழு அறிக்கையை 6 வாரங்களில் தாக்கல் செய்யவேண்டும் என ஏப்ரல், 2021-ல் சொன்னது. ஆனால், அந்த வழக்கு அதற்குப் பிறகு விசாரணைக்கே வரவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதியான சஞ்சீப் பானர்ஜியும் மேகாலயாவிற்கு மாற்றப்பட்டுவிட்டார்!

கிரிஜா நியமனம் சரியே!' - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு | madras HC gives  nod for Girija Vaidyanathan's appointment in NGT
Madras High Court

தெலுங்கு தேசம் கட்சி செய்த `பகீர்’ சம்பவம்

  • இதேபோல 2018-ல் ஆந்திராவில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் ஆதார் தகவல்களை வைத்து, வாக்காளர்களை பகுதிவாரியாகப் பிரித்து பிரசாரம் செய்தது. சுமார் 7.8 கோடி பேரின் ஆதார் தகவல்கள் இதற்காக களவாடப்பட்டன. ஆனால், இந்த விஷயத்தில் பா.ஜ.க-வை விட இன்னொரு படி மேலே போனது அக்கட்சி.

  • ஆதார் தகவல்களோடு சேர்த்து, ஆதாரோடு இணைக்கப்பட்ட மக்களின் பிற டேட்டாபேஸையும் சேர்த்து சுட்டது. இதன்மூலம் மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பது வரை தெரிந்துகொண்டு அவர்களை டார்கெட் செய்தது. கூடவே எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்தே நீக்கும் வேலையையும் செய்திருக்கிறது. இதை சிறப்பு புலனாய்வுக்குழு உறுதி செய்திருக்கிறது. இந்த சம்பவத்தில் ஆதார் தகவல்கள் தவறாகக் கையாளப்பட்டத்தை ஆதார் ஆணையமே ஒப்புக்கொண்டது.

ஆனால், இந்த இரண்டு சம்பவங்களிலும் அதிர்ச்சியான விஷயம் என்ன தெரியுமா?

நாட்டின் முக்கியமான டேட்டாபேஸாக கருதப்படும் ஆதாரை இரண்டு ஆளுங்கட்சிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆனால், இதுவரைக்கும் நாட்டில் நேர்மையாக தேர்தல்களை நடத்தவேண்டிய தேர்தல் ஆணையமோ, மக்களின் தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய ஆதார் ஆணையமோ எவ்வித உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை!

இந்த நிலையில்தான், இந்தப் பணிகளை இன்னும் எளிமையாக்கும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு என்பது தேவையா எனக் கேட்கிறது அந்தக் கட்டுரை. நாம் அனைவரும் அரசிடம் தொடர்ந்து கேட்க வேண்டிய கேள்வியும் கூட.

நன்றி: குமார் சம்பவ், Article 14


  1. சிறார்களுக்கான தடுப்பூசி வழிகாட்டல்:

    15 முதல் 18 வயது வரையிலான சிறார்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60+ வயதினர் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளவும் வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு.

    • இதன்படி, சிறார்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும். கோவாக்சின் மட்டுமே போடப்படும்.

    • சிறார்கள், பெற்றோர்களின் கோவின் அக்கவுன்ட் மூலமாக ஜனவரி 1-ம் தேதி முதல் தடுப்பூசிகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

    • முன்களப் பணியாளர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஜனவரி 10-ம் தேதி முதல் 3-வது டோஸ் வழங்கப்படும். 2-வது டோஸ் எடுத்து 9 மாதம் ஆனவர்களுக்கே இந்த பூஸ்டர் டோஸில் முன்னுரிமை வழங்கப்படும். கோவின் அக்கவுன்ட் மூலமாகவே இதையும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

  2. RBL வங்கிக்கு என்னாச்சு?

    நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, RBL வங்கியின் மதிப்பு நேற்று பங்குச்சந்தையில் கடுமையாக சரிந்திருக்கிறது. வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான விஷ்வவீர் அஹூஜா, தன் பதவிக்காலம் முடிய இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் திடீரென விடுமுறையில் சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த வங்கியின் நிர்வாகக் குழுவில் இணை இயக்குநர் ஒருவரை சிறப்பு விதியின்கீழ் நியமித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. வங்கியின் நிதிநிலைமையில் பெரிய பிரச்னை இல்லை என்றாலும்கூட, ரிசர்வ் வங்கியின் இந்த திடீர் நடவடிக்கைகள் மற்றும் RBL நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் ஆகியவை வாடிக்கையாளர்களை பதற்றமடையச் செய்திருக்கின்றன.

  3. அன்னை தெரசா அறக்கட்டளைகளுக்கு என்ன சிக்கல்?

    • 1950-ம் ஆண்டு அன்னை தெரசாவால், ஏழைகளுக்கு உதவ தொடங்கப்பட்ட அறக்கட்டளைதான், மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டீ (Missionaries of Charity). கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அறக்கட்டளையின் கிளைகள் நாடு முழுவதும் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோருக்கு தினசரி உணவு, மருத்துவ உதவி ஆகியவற்றை வழங்கி வருகின்றன. வெளிநாட்டிலிருந்து வரும் நன்கொடைகளே இந்த அறக்கட்டளை இயங்க பெருமளவில் உதவி வந்தன. இப்படி வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற வேண்டுமானால், அதற்கு இந்திய அரசிடம் FCRA அனுமதி வேண்டும். இந்த அனுமதியை அண்மையில் Missionaries of Charity-க்கு ரத்து செய்திருக்கிறது மத்திய அரசு. இதன்மூலம், அந்த அறக்கட்டளை தன்னுடைய வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் சிக்கியிருக்கிறது.

    • மத்திய அரசின் இந்த முடிவுக்கு கிறிஸ்தவ அமைப்பினரும், எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில்தான் குஜராத்தில் உள்ள Missionaries of Charity அமைப்பினர் மீது, சிறுமிகளை கட்டாயம் மதமாற்றம் செய்வதாக, அம்மாநில காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், அறக்கட்டளை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தது. இந்நிலையில் தற்போது, அந்த அறக்கட்டளைக்கு மீண்டும் இப்படியொரு நெருக்கடி முளைத்திருக்கிறது.

  4. கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்:

    கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலமாகிய கடந்த 3 நாள்களில், நாடு முழுவதும் ஆங்காங்கே, அடுத்தடுத்து நடந்த மதவெறுப்பு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

    • உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில், ஒரு மிஷனரி பள்ளியின் அருகே, சான்டா கிளாஸின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன.

    • அசாமில் இரண்டு வலதுசாரி இளைஞர்கள், அங்கிருந்த ஒரு சர்ச்சில் புகுந்து, பிரார்த்தனைக்கு இடையூறு ஏற்படுத்தி, அங்கிருந்த இந்துக்களை வெளியேறச் சொல்லியிருக்கின்றனர்.

    • ஹரியானாவில், கிறிஸ்துமஸூக்கு முதல்நாள் நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தை, வலதுசாரி கும்பலைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.

    • அதே ஹரியானாவில், அம்பாலா மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் தினத்தின் அதிகாலையில், புனித ரெடீமர் சர்ச்சில் உள்ள இயேசு சிலையை 2 பேர் உடைத்திருக்கின்றனர்.

    இந்துக்களை கிறிஸ்தவர்கள், மதம் மாற்றுகிறார்கள் என்ற பரப்புரையின் அடிப்படையிலேயே இந்த வன்முறை சம்பவங்கள் அனைத்தும் அரங்கேறியிருக்கின்றன. Persecution Relief என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2014-ம் ஆண்டு முதலே நாடு முழுக்க கிறிஸ்தவர்களுக்கு எதிரான மதவெறுப்புக் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இது 2016-19 காலகட்டத்தில் 60% உயர்ந்திருக்கிறது என்கிறது அந்த அமைப்பு.

  5. ஓமிக்ரான்: நேற்றைய அப்டேட்

    இந்தியா முழுவதும் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 578-ஐ தொட்டிருக்கிறது. இதில் 151 பேர் இதுவரை குணமாகி வீடு திரும்பியிருக்கின்றனர். கேரளா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இரு மாநிலங்களும் நேற்று இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

  6. சரிந்து விழுந்த வீடுகள்

    சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில், ஒரு பிளாக்கில் இருந்த 24 வீடுகள் நேற்று சரிந்து விழுந்தன. விரிசல் விழத்தொடங்கியதுமே மக்கள் வெளியேறத் தொடங்கியதால், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாற்று வீடுகளும் விரைவில் வழங்கப்படவிருக்கின்றன. சென்னையில் இதேபோல சுமார் 23,000 வீடுகள் இடிக்கவேண்டிய நிலையில் உள்ளனவாம்.

  7. அடுத்த ஆண்டு வரும் 5ஜி

    இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலத்தை வரும் ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது தொலைத்தொடர்பு துறை. இதில் ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பின்னர் இந்நிறுவனங்கள் 5ஜி பரிசோதனைகளை மேற்கொண்டு வரும், குருகிராம், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, மும்பை, சண்டிகர், டெல்லி, ஜாம்நகர், அகமதாபாத், லக்னோ, காந்தி நகர் மற்றும் புனே ஆகிய நகரங்களில் முதன்முதலில் 5ஜி சேவைகள் கிடைக்கத்தொடங்கும்.

  8. பிரிட்டன் ராணிக்கு கொலை மிரட்டல்

    ஜாலியன் வாலாபாக் படுகொலைகளுக்காக பிரிட்டன் ராணியை பழிவாங்கப்போவதாக, வில் அம்புடன் மிரட்டல் விடுத்த இந்திய வம்சாவளியைத் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராணி தங்கியிருந்த விண்ட்சர் கோட்டையின் பாதுகாப்பை மீறி உள்ளே நுழைய முயற்சி செய்தபோது, இவரைக் கைது செய்திருக்கின்றனர்.


  • தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 605

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 9

  • 2019-20 ஆண்டில் சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான மாநிலங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது நிதி ஆயோக். இதில் தொடர்ந்து 4-வது ஆண்டாக கேரளா முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் தமிழகமும், மூன்றாவது இடத்தில் தெலங்கானாவும் இருக்கின்றன. பெரிய மாநிலங்களில் கடைசி இடம் பிடித்திருப்பது உத்தரப்பிரதேசம்.

  • முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, வேலூர் சிறையில் 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, நேற்று ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.

  • வரும் ஜனவரி மாதம் 14, 15, 16 ஆகிய 3 நாள்களிலும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, சென்னையில் 7 இடங்களில், `நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்காக 91 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளியில் தலித் சத்துணவு ஊழியரான சுனிதா என்ற பெண் சமைக்கும் உணவை ஆதிக்க சாதியின மாணவர்கள் புறக்கணித்ததாக கடந்த வாரம் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சுனிதா ஊழியர் பணியிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் ஆதிக்க சாதியிலிருந்தே ஒரு பெண் சத்துணவு ஊழியர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், புதிய சத்துணவு ஊழியரின் உணவை உண்ண, தலித் மாணவர்கள் மறுத்துள்ளனர். பேச்சுவார்த்தைக்குப் பின், இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

  • 2021-ம் ஆண்டுக்கான முதுகலை நீட் கலந்தாய்வை விரைந்து நடத்தக்கோரியும், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக நிலுவையில் இருக்கும் வழக்கை விரைந்து விசாரிக்க கோரியும், நேற்று டெல்லியில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டம் இன்னும் தீவிரமாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.

  • கொரோனா தொற்றை 12 நொடிகளில் கண்டறியும் வகையில் புதிய கிட் ஒன்றை வடிவமைத்து அதற்கு காப்புரிமையும் பெற்றிருக்கிறார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப்பேராசிரியர் ஆரோக்கிய தாஸ். இந்த கிட்களை வணிக ரீதியில் உற்பத்தி செய்ய ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடனும் ஒப்பந்தம் போட்டுள்ளார்.


On This Day - Dec 28

- இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட தினம், 1885

- ரத்தன் டாடா பிறந்தநாள், 1937

- தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமான தினம், 2020


🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!


அவ்வளவுதான்!

The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞

திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!

Have a Nice day! ☕️

The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:

Telegram | Twitter | Facebook | Insta

Share this post
🗳 BJP, TDP - இந்த இரண்டு கட்சிகளும் சிக்காதது ஏன்?
www.thesubjectline.in
Comments
TopNewCommunity

No posts

Ready for more?

© 2023 The Subject Line
Privacy ∙ Terms ∙ Collection notice
Start WritingGet the app
Substack is the home for great writing