📚 OBC-க்கு 27% - ஏன் இந்த இடஒதுக்கீடு முக்கியமானது?
Today Edition Highlights: இன்று முதல் பூஸ்டர் டோஸ் | ஜோகோவிச்சுக்கு வந்த சோதனை | CoWIN-ல் அரசு செய்யப்போகும் அப்டேட் | பொங்கல் பரிசுக்கு புகார் பெட்டி | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
மருத்துவப் படிப்புகளில் (MBBS / BDS / MD / MS / Diploma / MDS), அகில இந்திய தொகுப்பில் (AIQ) OBC பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு செல்லும் என கடந்த வெள்ளிக்கிழமையன்று மிக முக்கியமான தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
மேலும், முன்னேறிய பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான (EWS) 10% இடஒதுக்கீட்டையும் இந்த ஆண்டு மருத்துவ கவுன்சிலிங்கில் பின்பற்றலாம் எனவும், அதே சமயம் EWS இடஒதுக்கீட்டிற்கான தகுதிகள் மற்றும் வருமான வரம்பு (ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் என்பது) ஆகியவை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. EWS விவகாரம் மீதான இறுதி விசாரணை மார்ச் மாதம் நடக்கவுள்ளது.
இந்த தீர்ப்பின் மூலம், முதல்முறையாக மருத்துவப் படிப்புகளின் அகில இந்திய தொகுப்பிலும் OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த தீர்ப்பு ஏன் முக்கியமானது?
1986-க்கு முன்பு வரையிலும் அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளின் இடங்களும், அந்தந்த மாநிலங்கள் மூலமாகவே நிரப்பப்பட்டன. இதில் அந்தந்த மாநில மாணவர்களே பயன்பெற்றனர். மாநிலங்களின் இடஒதுக்கீடும் முழுமையாகப் பின்பற்றப்பட்டன. ஆனால், இது 1984-ல் மாறியது.
இந்த விதிமுறையால், பிற மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில் தகுதிவாய்ந்த மாணவர்கள் படிக்கமுடியாமல் போவதாக நினைத்த உச்சநீதிமன்றம், All India Quota (AIQ) எனும் அகில இந்திய தொகுப்பை உருவாக்கச் சொன்னது. அது 1986-ல் உருவானது. இந்த தொகுப்பில் அகில இந்திய அளவில் எந்த மாநில மாணவர்கள் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
இந்த அகில இந்திய தொகுப்பிற்கு மாநில அரசுகள், மருத்துவ UG (MBBS / BDS) படிப்புகளுக்கு 15% மற்றும் PG (MD / MS) படிப்புகளுக்கு 50% இடங்களை அளித்து வருகின்றன. இவற்றில் ஒழுங்காக இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்பதுதான் பிரச்னை.
1986-ல் அகில இந்திய தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டபோது, அதில் எந்த இடஒதுக்கீடும் பின்பற்றப்படவில்லை. 2007-ல்தான் முதன்முதலாக உச்சநீதிமன்றம் SC பிரிவினருக்கு 15% மற்றும் ST பிரிவினருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது. அப்போதும் OBC பிரிவினருக்கு எதுவும் வழங்கப்படவில்லை.
பின்னர், அதே ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட, மத்திய கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீடு சட்டத்தில், அனைத்து மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வழிசெய்யப்பட்டது. ஆனால், அதிலும் மருத்துவப் படிப்புகளில் AIQ இடங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இப்படி 1986-லிருந்து 2020 வரை, 30 ஆண்டுகளுக்கும் மேலாக OBC மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில்தான், 2020-ல் ஜூன் மாதம், அகில இந்திய தொகுப்பில் 50% இடங்களை OBC பிரிவினருக்கு வழங்க வேண்டும் என தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அப்போதைய தமிழக அரசும் இதில் தன்னை இணைத்துக்கொண்டது.
அந்த வழக்கின் விளைவாக, OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க கமிட்டி அமைக்குமாறும், 2021-22 ஆண்டு முதல் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துமாறும் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
பிரச்னை முடிந்ததா?
இல்லை. 2021-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றம் சொன்னதுபோல, மத்திய அரசு OBC இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. உடனே, இதுகுறித்து ஜூலை 19, 2021-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது தி.மு.க. உடனடியாக சென்னை நீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாக கண்டித்ததுடன், 2021-ம் ஆண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்துதான் ஜூலை 29-ம் தேதி மத்திய அரசு, OBC பிரிவினருக்கு அகில இந்திய தொகுப்பில் 27% இடங்கள் வழங்குவதாகவும், இதனால் நாடு முழுவதும் UG படிப்பில் 1,500 மாணவர்களும், PG படிப்புகளில் 2,500 மாணவர்களும் பயனடைவார்கள் எனவும் அறிவித்தது.
ஆனால், தி.மு.க OBC பிரிவினருக்கு 50% கேட்டிருந்தது. அதில் மத்திய அரசு 27% மட்டுமே அளித்தது. இதுகுறித்து தி.மு.க தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டபோதும்கூட, சென்னை உயர்நீதிமன்றம் இந்த 27%-ஐ நீட்டிக்க மறுத்துவிட்டது. இப்படித்தான் 35 ஆண்டுகள் கழித்து, அகில இந்திய தொகுப்பிலும் (AIQ) OBC இடஒதுக்கீடு அமலானது. ஆனால், இதிலும் ஒரு சிக்கல்.
என்ன சிக்கல்?
கடந்தாண்டு ஜூலை மாதம் AIQ-வில் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை மட்டும் மத்திய அரசு அமல்படுத்தவில்லை. EWS பிரிவினருக்கும் 10% இடஒதுக்கீட்டையும் அறிமுகம் செய்தது. இந்நிலையில், OBC, EWS ஆகிய இரண்டு இடஒதுக்கீட்டையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அப்போது EWS இடஒதுக்கீட்டின் வருமான வரம்பு உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குள்ளானது.
இந்த விசாரணைகள்தான், கடந்த 4 மாதங்களாக நடந்துவந்தன. இந்த விசாரணைகள் முடியும் வரை, இந்தாண்டு மருத்துவப்படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங்கையும் மத்திய அரசு தள்ளிப்போடவே, அதுதான் அண்மையில் டெல்லியில் நடந்த பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்திற்கும் காரணமானது.
இந்நிலையில்தான், இந்த வழக்குகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்சநீதிமன்றம். அதில், ``OBC இடஒதுக்கீடுக்கு எந்த தடையுமில்லை” என க்ரீன் சிக்னல் காட்டிவிட்டது. மார்ச் மாத விசாரணைக்குப் பிறகே EWS நிலவரமும் தெரிய வரும்.
அடுத்து என்ன?
கவுன்சிலிங்தான். இதுவரைக்கும் மத்திய மாநில அரசுகள் நடத்தாமல் வைத்திருக்கும் இந்த கடந்தாண்டு கவுன்சிலிங்கை விரைவில் தொடங்கவிருக்கின்றன. முதுகலை நீட் (NEET PG) கவுன்சிலிங் ஜனவரி 12-ம் தேதி தொடங்கும் என அறிவித்திருக்கிறார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர். தமிழக அரசின் கவுன்சிலிங்கும் இரண்டு வாரங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தீர்ப்பு OBC மாணவர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டாலும்கூட, 50% இடஒதுக்கீடு கிடைத்தால்தான் முழு வெற்றி கிடைக்கும் என்கிறது தி.மு.க தரப்பு. மேலும், அகில இந்திய தொகுப்புக்கு பதிலாக 100% சீட்டுகளையும் மாநில அரசுகளே நிரப்பிக்கொள்ளும் நடைமுறை வரவேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
கடந்தாண்டு வரை மருத்துவப்படிப்புகளில் சுமார் 1700 சீட்டுகளை தமிழக அரசு, அகில இந்திய தொகுப்புக்காக கொடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்
- உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். பிப்ரவரி 10-ம் தேதி வாக்குப்பதிவுடன் தொடங்கும் தேர்தல், மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையுடன் முடிவடைகிறது. இதன்படி,
உத்தரப்பிரதேசம் - 7 கட்டங்கள்,
மணிப்பூர் 2 கட்டங்கள்,
பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
- மொத்தம் 690 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள மக்கள், இந்த தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர்.
திரும்ப வழங்கப்பட்ட அனுமதி
- அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட, Missionaries of Charity (MoC) அறக்கட்டளைகளின் FCRA அனுமதியை கடந்த டிசம்பர் 25-ம் தேதி திடீரென ரத்து செய்திருந்தது மத்திய உள்துறை அமைச்சகம். இத்துடன், சுமார் 6,000 தொண்டு நிறுவனங்களின் அனுமதிகள் ஜனவரி 1-ம் தேதி முதல் ரத்தாகியிருந்தன.
- இதனால், வெளிநாட்டு நிதியுதவிகளை இந்த தொண்டு நிறுவனங்கள் பெறமுடியாமல் போயின. அரசின் இந்தச் செயலுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று எவ்வித காரணமும் சொல்லாமல், சத்தமின்றி MoC-யின் FCRA அனுமதியை நீட்டித்திருக்கிறது உள்துறை அமைச்சகம். ஆனால், வேறு எந்த தொண்டு நிறுவனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; இந்த திடீர் மாற்றத்திற்கான காரணமும் தெரியவில்லை.
ஜோகோவிச்சுக்கு வந்த சோதனை
- இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸில் விளையாடுவதற்காக அங்கு போய் இறங்கிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கு சோதனை மேல் சோதனை. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதி.
- ஆனால், ஜோகோவிச்சோ தடுப்பூசி போட்டுக்கொண்டவரல்ல. மேலும், ``கடந்த டிசம்பர் 16-ம் தேதிதான் எனக்கு கொரோனா வந்தது; அதனால்தான் தடுப்பூசி போடவில்லை” எனவும் சொல்லிப் பார்த்தார். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஆஸ்திரேலியா செம ஸ்ரிக்ட்டாக ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்துவிட்டது. இதனால், கடந்த 3 நாள்களாக ஹோட்டலில்தான் க்வாரன்டீனில் இருக்கிறார்.
- இந்த விசா விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார். அதில் சாதகமாக தீர்ப்பு வந்தால், ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் விளையாடலாம். இல்லையெனில், உடனே நாடு திரும்ப வேண்டியதுதான்.
பாகிஸ்தானின் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி
பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்றத்தில் பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கிறார் ஆயிஷா மாலிக். இவருடைய நியமனத்தை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிசெய்துவிட்ட நிலையில், நாடாளுமன்ற குழுவின் பரிசீலனைக்காக மட்டும் வெயிட்டிங்! அதுவும் நடந்துவிட்டால், முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுவிடுவார் ஆயிஷா.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 12,895 (நேற்று முன்தினம்: 10,978)
- அதிகபட்சமாக, சென்னையில்: 6,186 (5,098)
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 12 (10)
இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு: 1,59,632 (1,41,986)
- இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 3,623 (3,071)
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️ 👇
நீட் தேர்வுக்கு எதிரான அனைத்து கட்சிக்கூட்டம் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்தது. இதில் பா.ஜ.க-வைத் தவிர, மற்ற அனைத்து கட்சியினரும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தனர். சட்ட ஆலோசனைக்குப் பிறகு, நீட்-டிற்கு எதிரான நடவடிக்கைகளை அனைத்துக்கட்சியினரும் மேற்கொள்வது எனவும், மற்ற மாநிலங்களிடையேயும் நீட் தேர்வின் பாதகங்களை கொண்டுபோய் சேர்த்து ஒருமித்த கருத்தை உருவாக்குவது எனவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக காவல்துறை வரலாற்றில் உளவுத்துறையின் முதல் பெண் ஐ.ஜி-யாக பொறுப்பேற்றிருக்கிறார் ஆசியம்மாள்.
மும்பை நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக 22,222 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றில் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 11,912. இவற்றில் இதுவரை கொரோனா காரணமாக 17% படுக்கைகள் நிரம்பியுள்ளன. இந்த நோயாளிகளில் கிட்டத்தட்ட 96% பேர் ஒரு டோஸ் தடுப்பூசிகூட எடுத்துக்கொள்ளாதவர்கள்தானாம்.
இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், சுமார் 400 நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு தீவிரப்படுத்தப்படவிருக்கின்றன.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் 5 மாநிலங்களிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே, இந்த 5 மாநிலங்களிலிருப்பவர்கள் மட்டும் கோவின் இணையதளத்திலிருந்து தடுப்பூசிச் சான்றிதழை டவுன்லோடு செய்தால், அதில் மோடி படம் இடம்பெறாதவாறு, CoWIN-ல் மாற்றங்கள் செய்யவிருக்கிறதாம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
இஸ்லாமிய பெண்களை இழிவாக சித்திரித்த Bulli bai App-ஐ உருவாக்கியது தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதேபோல கடந்த ஆண்டு `Sully Deals’ என்ற App-ஐ உருவாக்கியவர்கள் மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆம்கரேஷ்வர் தாக்கூர் என்ற 26 வயது இளைஞனைக் கைது செய்திருக்கிறது டெல்லி போலீஸ்.
வேகமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் நேற்று ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. விரைவில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பேசுவது குறித்தும், அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.
- இன்று முதல் பூஸ்டர் டோஸ்கள்: முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் நாடு முழுக்க பூஸ்டர் டோஸ்கள் (3-வது டோஸ்) வழங்கப்படுகின்றன. நீங்களோ அல்லது உங்களைச் சார்ந்தவர்களோ இந்தப் பிரிவில் வந்தால், இன்று முதல் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளலாம்.
இன்றைய தேதிப்படி, தமிழகத்தில் சுமார் 35 லட்சம் பேர் இந்த பூஸ்டர் டோஸ்கள் பெறத் தகுதியுடையவர்கள். ஆனால், இவர்களின் சுமார் 4 லட்சம் பேரே, இரண்டாவது டோஸ் எடுத்து 39 வாரங்களை நிறைவு செய்திருப்பதால், அவர்கள் மட்டுமே இன்று பூஸ்டர்கள் பெற முடியும். அதாவது, 14 ஏப்ரல் 2021-க்கு முன்பு 2 டோஸையும் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும்.
- பொங்கல் பரிசு புகார் பெட்டி:
பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் குறைபாடுகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுதொடர்பான புகார்களை 1800 599 3540 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்திருக்கிறார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.
- ஆன்லைனில் ஆற்றுமணல்: www.tnsand.in என்ற தளம் மூலமாக, ஒரு யூனிட் மணலை 1,000 ரூபாய்க்கு முன்பதிவு செய்து வாங்குவதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இதில் பொதுமக்கள் மணல் வாங்க விண்ணப்பிக்கலாம். வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மணல் தற்போது 8,000 முதல் 8,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: