🚨 தொடங்கும் ஓமிக்ரான் அலை; அலர்ட் ஆகவேண்டிய நேரம் வந்தாச்சு!
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: பெட்ரோல் விலையை 25 ரூபாய் குறைத்ததா ஜார்க்கண்ட்? | நேரடி ஒளிபரப்பாகும் தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் | ரிலையன்ஸ் அரியணை ஏறும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள் | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
ஓமிக்ரான் வேரியன்ட் முதன்முதலில் கண்டறியப்பட்டு, ஒரு மாதம் கடந்துவிட்டது. இதுவரைக்கும் ஓமிக்ரான் பற்றி நமக்கு தெரிந்தவற்றில், மிக முக்கியமானவை இரண்டு.
அதன் அதிவேக பரவுன் திறன்
இரண்டு டோஸ் தடுப்பூசிகளால் அல்லது முந்தைய கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட எதிர்ப்புசக்தியைத் தாண்டியும், தொற்று ஏற்படுத்தும் திறன்.
இந்த இரண்டுமே மிகவும் ஆபத்தான விஷயம் என்பதால்தான், உலக நாடுகளை உடனே அலர்ட்டாகச் சொன்னது WHO. இருப்பினும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நாடுகளில் ஓமிக்ரான் அலை வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது. இந்த அலையின் அறிகுறிகள் இந்தியாவிலும் நேற்று தென்படத் தொடங்கியிருக்கிறது. எனவே, மூன்றாம் அலைக்கான நாட்கள் வெகு தொலைவில் இல்லை!
என்ன நடக்கிறது உலகில்?
டிசம்பர் 20 முதல் 26-ம் தேதி வரையிலும் உலகில் 49.9 லட்சம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. இது அதற்கு முந்தைய வாரத்தை விடவும் 11% அதிகம். இதில் அமெரிக்காவில்தான் அதிகபட்சமாக 39% வரை பாதிப்புகள் உயர்ந்துள்ளன.
இதேபோல, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட நாடுகளில் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது கொரோனா. அதாவது, உலகம் முழுக்க மீண்டும் ஒரு அலை தொடங்கியிருக்கிறது.
``டெல்டா, ஓமிக்ரான் ஆகிய இரு வேரியன்ட்களுமே இணைந்து பரவுவதால், உலகம் முழுவதும் கொரோனா உச்சத்தை தொட்டு, சுனாமி போல பெரியளவில் தொற்றுகளை ஏற்படுத்தலாம்” என இதுகுறித்து எச்சரித்திருக்கிறார் WHO-வின் இயக்குநர் டெட்ரோஸ்.
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியாவிலும் நேற்று கொரோனாவிற்கு ஏறுமுகம்தான். நேற்றைய காலை நிலவரப்படி, இந்தியாவில் 9,195 தொற்றுகள் உறுதியாகியிருந்தன. இது கடந்த 3 வாரங்களில் அதிகம்.
முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில், கடந்த 7 நாள்களில் 77% அதிக தொற்றுகள் உறுதியாகியிருக்கின்றன.
ஓமிக்ரான் தொற்றுகளின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும், இந்தியாவில் ஜீனோம் பகுப்பாய்வு செய்யப்படும் மாதிரிகளில் சுமார் 60% ஓமிக்ரான் மாதிரிகளாகவே இருக்கின்றன. எனவே விரைவில், இந்தியாவிலும் டெல்டா வேரியன்ட் ஆதிக்கத்தை, ஓமிக்ரான் விஞ்சிவிடும்.
நாட்டின் முக்கிய நகரங்களிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
மும்பையில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகள் - 2,510. இது முந்தைய தினத்தைவிட 80% அதிகம். முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டால் 400% அதிகம்.
டெல்லியில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகள் - 923. முந்தைய வாரத்தோடு ஒப்பிட்டால், 600% அதிகம்.
பெங்களூருவில் 400; முந்தைய வாரத்தைவிட 80% அதிகம்.
சென்னையில் 294; முந்தைய வாரத்தைவிட 100% அதிகம்.
இப்படி இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதால், இன்னும் சில நாள்களில் (அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள்) தினசரி கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை மிக அதிக அளவில் எகிறும் எனக் கணித்திருக்கின்றனர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். ஆனால், இந்த புதிய அலை, இரண்டாம் அலை போல நீண்ட நாள்களுக்கு நீடிக்காமல், விரைவில் முடிந்துவிடும் எனவும் கணித்திருக்கின்றனர்.
தமிழகத்தின் நிலை என்ன?
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 739. (நேற்று முன்தினம் - 619); உயிரிழப்புகள்: 8 (நேற்று முன்தினம் - 06)
தமிழகத்தில் பதிவான ஓமிக்ரான் பாதிப்புகள் - 45 (நேற்று ஒருநாளில் மட்டும் 11)
இப்போதைக்கு பிற மாநிலங்களைப் போல பெரியளவில் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும், கடற்கரைகளில் அன்று மக்கள் கூடுவதற்கும் மட்டும் இதுவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அடுத்து என்ன ஆகும்?
தொற்றுப்பரவல் விகிதமும் இந்தியாவில் உயர்ந்து வருவதால், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இனி தொடர்ந்து உயரவே வாய்ப்பு அதிகம்.
இவ்வளவு நாள்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி அளித்த தைரியத்தில் இருந்திருப்போம். ஆனால், ஓமிக்ரான் அதற்கும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதால், 2 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே போதாது. பூஸ்டர் டோஸ்கள் எடுத்துக்கொள்ளும் வரையிலும், மீண்டும் மாஸ்க், சமூக இடைவெளி போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தி, அலர்ட்டாக இருப்பதே, இந்த ஓமிக்ரான் அலையைக் கடக்க நம் முன் இருக்கும் ஒரே வழி!
இந்தியா
பெட்ரோல் விலையில் 25 ரூபாய் மானியம் ⛽️
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், வரும் ஜனவரி 26-ம் தேதி முதல் அம்மாநிலத்தில் டூவிலர்களில் பெட்ரோல் போடுபவர்களுக்கு லிட்டருக்கு 25 ரூபாய் மானியம் (விலைக்குறைப்பு அல்ல!) வழங்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். இதன்படி, ஒரு குடும்பத்தில் (ரேஷன் கார்டு அடிப்படையில்) 10 லிட்டர் வரை, இந்த சலுகை விலையில் டூவிலர்களுக்கு பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். இதற்கான தொகை (10 லிட்டர் x 25) 250 ரூபாய் அந்தக் குடும்ப தலைவரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
தவறாக நடந்த ரெய்டு? 🔎
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் நடந்த ரெய்டு ஒன்று அங்கு அரசியலில் ஹாட் டாபிக்காக மாறியிருக்கிறது. அதைவிடவும், அதில் நடந்த ட்விஸ்ட் இன்னும் சுவாரஸ்யம்!
அம்மாநிலத்தில், வாசனை திரவிய வியாபாரியாக வலம் வருபவர் பியூஷ் ஜெயின். இவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை ஜி.எஸ்.டி அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனையில், 194 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 23 கிலோ தங்க நகைகள் சிக்கியிருக்கின்றன. தேர்தல் நேரத்தில் நடந்த இந்த ரெய்டும், அதில் சிக்கிய இவ்வளவு பணமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தவே, இதை வைத்து சமாஜ்வாதி கட்சிக்கு நெருக்கடி அளித்தது பா.ஜ.க.
பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, சமாஜ்வாதிக்கு நெருக்கமான, வாசனை திரவியம் தயாரிக்கும் வியாபாரியிடம் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டு, அக்கட்சியை தாக்கிப் பேசினார். இதற்கு அடுத்து நடந்ததுதான் ட்விஸ்ட்.
மோடிக்கு பதிலளித்த சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், ``எங்கள் கட்சி சார்பாக வாசனை திரவியம் தயாரிப்பவர் புஷ்பராஜ் ஜெயின். ஆனால், அதிகாரிகள் ரெய்டு நடத்தியதோ, பியூஷ் ஜெயின் வீட்டில்; அதுவும் அவர் பா.ஜ.க-விற்குத்தான் நெருக்கமானவர். இப்படி ஆள்மாற்றி ரெய்டு நடத்திவிட்டு எங்களைக் குறைசொல்வதா?” எனக் கொளுத்திப் போட்டிருக்கிறார். இந்த ஆள்மாற்றக் குழப்பங்களாலும், கைப்பற்றப்பட்ட கட்டுக்கட்டான பணத்தாலும் உ.பியில் இந்த சம்பவம் `டாக் ஆப் தி டவுனாக’ மாறியிருக்கிறது.
ஆனால் அதிகாரிகளோ, ``தவறுதலாக எல்லாம் ரெய்டு நடக்கவில்லை; பியூஷ் ஜெயினை குறிவைத்துதான் ரெய்டு நடத்தினோம்” எனத் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழகம்
நேரடி ஒளிபரப்பாகும் தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் 📺
வரும் ஜனவரி 5-ம் தேதி, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரின் தினசரி கேள்வி நேரம் மற்றும் கடைசி நாள் நிகழ்வுகள் இரண்டும் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கின்றன.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வதை, தன் தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டிருந்தது தி.மு.க. ஆனால், கடந்த கூட்டத்தொடரானது கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்டதால், நேரலை செய்வதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. இந்தமுறை ஜார்ஜ் கோட்டையில் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், முதல்கட்டமாக தினசரி கேள்வி நேரம் மற்றும் கடைசி நாள் நிகழ்வுகள் மட்டும் நேரலை செய்யப்படவிருக்கின்றன.
மூன்று மாதங்களாக முடிவெடுக்காத எடுக்காத ஆளுநர்: 📁
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது சட்டமாக மாற வேண்டுமெனில், தமிழக ஆளுநர் அந்த மசோதாவை பரிசீலித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், மூன்று மாதங்களாகியும் ஆளுநர் இதுவரை மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து, தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கும், ``இன்னும் பரிசீலனையில்தான் இருக்கிறது" என பதில் அளித்திருக்கிறது ராஜ் பவன்.
ஃபாக்ஸ்கான் நிலவரம் 🏭
ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கான தங்குமிடத்தில் போதிய வசதிகள் இல்லாததாலும், அங்கு பணியாற்றும் 150-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஃபுட் பாய்ஸன் பிரச்னையால் பாதிக்கப்பட்டதாலும், இரு வாரங்களுக்கு முன்பு 250-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஶ்ரீபெரும்புதூரில் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, அவர்கள் ஊருக்கு அனுப்பப்பட்டு, தொழிற்சாலை பணிகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டு குறித்து, தொழிற்சாலைகளில் ஆய்வு செய்த ஆப்பிள் நிறுவனம், அங்கு ஊழியர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு தரமான உணவு உண்ணும் இடம் மற்றும் தங்கும் வசதிகள் இல்லை எனக்கூறி, ஃபாக்ஸ்கான் நிறுவனத்தை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளது. இதனால், அந்நிறுவனம் பிரச்னைகளை சரிசெய்யும் வரை ஆப்பிளிடமிருந்து புதிய ஆர்டர்கள் வராது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஃபாக்ஸ்கான் நிறுவனமும், தொழிற்சாலை நிர்வாகத்தை மாற்றியமைக்கவும், ஊழியர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துவிட்டு, அதன்பிறகே தொழிற்சாலையைத் திறக்கவும் முடிவு செய்திருக்கிறது.
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️
ஐக்கிய அரபு அமீரகத்துடன் (UAE), இந்தியாவின் பொருளாதார கூட்டுறவை விரிவுபடுத்துவதற்காக வரும் ஜனவரி 6-ம் தேதி, பிரதமர் மோடி UAE செல்லவிருந்தார். ஆனால், ஓமிக்ரான் அலை காரணமாக, தற்போது இந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதுகலை நீட் கவுன்சிலிங்கை விரைவாக நடத்தச் சொல்லி, டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் நடத்தும் போராட்டம் நேற்று 13-வது நாளாகத் தொடர்ந்தது. மத்திய அரசிடமிருந்து திருப்தியான பதில் வராததால், போராட்டம் இன்றும் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விரைவில் முகேஷ் அம்பானி, தன் வாரிசுகளுக்கு ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தின் நிர்வாகத்தைப் பகிர்ந்தளிக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. இதை நேற்று முன்தினம் நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில், முகேஷ் அம்பானியே முதல்முறையாக வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ``அந்தப் பணிகள் விரைவில் முடிந்து, அவர்கள் ரிலையன்ஸின் பொறுப்புகளுக்கு வரவேண்டும். பிள்ளைகள் சாதிப்பதை நாங்கள் காண வேண்டும்” எனவும் தெரிவித்திருக்கிறார் அவர்.
இந்தியாவின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இந்திய விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில், அயல்நாட்டு இசைகளுக்குப் பதில் இந்திய இசையையே ஒலிக்கச்செய்யுமாறு, விமான நிறுவனங்களுக்கும், விமான நிலைய நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்தியிருக்கிறது விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம்.
புத்தாக்கம் (Innovation) மற்றும் தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் சிறந்து விளங்கும் இந்திய கல்வி நிறுவனங்களுக்கான, அட்டல் ரேங்கிங்கை நேற்று வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. இதில், சென்னை ஐ.ஐ.டி நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சென்னையில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழக அரசின் ஜீனோம் பகுப்பாய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதுவரை கொரோனா மாதிரிகள் பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய இடங்களில் இருந்த ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஜீனோம் பகுப்பாய்வுகள் செய்யப்பட்டு வந்தன. இப்போது தமிழகத்திலேயே பகுப்பாய்வு மையம் இயங்கவிருப்பதால், இனி விரைவில் புதிய வேரியன்ட்களின் முடிவுகளைப் பெற்று, நாம் விரைந்து செயலாற்ற முடியும்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு கடன் பெற்றவர்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என செப்டம்பர் மாதம், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்து, அதற்கான அரசாணையும் பின்னர் வெளியிடப்பட்டது. இதன்படி 48,84,726 (~49 லட்சம்) பயனாளிகளின் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன; அதில், 35,37,693 (~35 லட்சம்) பேரின் நகைக்கடன்கள், தள்ளுபடி பெற தகுதியில்லாதவை என நேற்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு.
- ஜனவரி 1-ம் தேதி விவசாயிகளுக்கான நிதியுதவி:
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்கீழ், தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் வீதம், 3 தவணைகளில், ஆண்டுதோறும் 6,000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இதில், அடுத்த ஆண்டுக்கான முதல் தவணை வரும் ஜனவரி 1-ம் தேதி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவிருக்கிறது.
- குறைந்த சமையல் எண்ணெய் விலை:
மத்திய மற்றும் மாநில அரசுகளின் சலுகைகளைத் தொடர்ந்து, முன்னணி பிராண்ட்களின் சமையல் எண்ணெய்கள், 10 முதல் 15 சதவீதம் வரை விலை குறைந்திருக்கின்றன.
On This Day - Dec 30
- விளாடிமிர் லெனின் தலைமையில், சோவியத் யூனியன் உதயமான தினம், 1922
- `இயற்கை வேளாண் விஞ்ஞானி’ என அழைக்கப்படும் கோ. நம்மாழ்வார் நினைவு தினம், 2013
- `புயலிலே ஒரு தோணி’ நாவலை எழுதிய எழுத்தாளர் ப.சிங்காரம் நினைவு தினம், 1997
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: