

Discover more from The Subject Line
🫁 'எலிகள் சொன்ன' ஓமிக்ரான் உண்மைகள்
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: எலான் மஸ்க் படையில் அசோக் எல்லுசாமி | தடுப்பூசிகளின் காலாவதி தேதி சர்ச்சை | சத்யபால் மாலிக்கை பா.ஜ.க எச்சரிக்காதது ஏன்? | புதிய சாதனை படைத்த ஆப்பிள் | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
ஓமிக்ரான் வேரியன்ட், டெல்டா வேரியன்ட்டைவிடவும் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துவதாகவும், அதே சமயம் விரைவாகப் பரவுவதாகவும் இதற்கு முன்பு TSL-ல் பார்த்தோம் இல்லையா? தற்போது, ஏன் ஓமிக்ரான் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்பதற்கு எலிகளை வைத்து நடத்திய ஆய்வுகளில் விடை கிடைத்துள்ளது.
ஏன் குறைவான பாதிப்பை ஏற்படுத்துகிறது ஓமிக்ரான்?
நம்முடைய சுவாச மண்டலத்தை இரண்டாகப் பிரிக்கலாம். வாய், மூக்கு, தொண்டை போன்றவை மேல் சுவாச மண்டலம். மூச்சுக்குழல், நுரையீரல் போன்றவை கீழ் சுவாச மண்டலம்.
இதில், ஓமிக்ரான் வகை வைரஸானது, கீழ் சுவாச மண்டலமான நுரையீரலில் மிகக்குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. பெர்லின், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் உள்பட அண்மையில் பல இடங்களிலும், எலிகளை வைத்து நடந்த சோதனைகளில் இது உறுதியாகியிருக்கிறது.
இதற்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகளுமேகூட, ஓமிக்ரான் டெல்டாவைவிட குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது எனக் கூறின. ஆனால், அவை ஏன் அப்படி நடக்கின்றன எனக் கூறவில்லை.
மேலும், தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் அலை உச்சத்திலிருந்தபோதும், மருத்துவமனையில் சேர்ந்திருந்த நோயாளிகளிடம் ஓமிக்ரான் குறைவான பாதிப்பையே ஏற்படுத்தியிருந்தது. ஆனால், முதல்கட்டமாக அதிகளவில் இளைஞர்களிடம் மட்டுமே ஓமிக்ரான் பரவியதால் இப்படி நடக்கிறதா அல்லது முந்தைய கொரோனா பாதிப்பினாலோ, தடுப்பூசியினாலோ மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றிருப்பதால் இப்படி நடக்கிறதா என்பது குறித்து அப்போது உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், தற்போது இந்த இரண்டு சந்தேகங்களுக்கும் விடைசொல்லியிருக்கின்றன அண்மைய ஆராய்ச்சிகள்.
ஏன் நுரையீரலில் வலுவிழக்கிறது ஓமிக்ரான்?
ஓமிக்ரான் குறித்து விஞ்ஞானிகள் அச்சப்படக் காரணமே, இது சுமார் 50 முறை உருமாற்றம் அடைந்திருந்ததுதான். இதனால், இதன் வீரியம் தீவிரமாக இருக்கலாம் எனக் கணித்திருந்தனர். ஆனால், தற்போது எலிகளிடையே நடத்தப்பட்ட சோதனைகளில் அப்படியில்லை எனத் தெரியவந்திருக்கிறது.
ஓமிக்ரான் தாக்கிய எலிகளை ஆராய்ச்சி செய்தபோது, அதன் மூக்கு பகுதியில் வைரஸின் எண்ணிக்கை அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், இத்துடன் ஒப்பிடுகையில் நுரையீரல் பகுதியில் 10-ல் ஒருமடங்கு அல்லது அதற்கும் குறைவான அளவே ஓமிக்ரான் வைரஸ் எண்ணிக்கை இருந்திருக்கிறது.
பொதுவாக கொரோனா மூக்கு, தொண்டைப் பகுதிகளை பாதித்தால் பிரச்னையில்லை. விரைவில் குணமடைந்துவிடலாம். ஆனால், வைரஸ் நுரையீரலை அடையும்பட்சத்தில் அது நம்மை உயிரிழப்பு வரை கொண்டுசெல்லலாம். ஓமிக்ரான் விஷயத்தில் அது நடக்கவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.
``பெரும்பாலான நுரையீரல் செல்கள் TMPRSS2 என்ற புரதத்தைக் கொண்டிருக்கும். இதற்கு முந்தைய கொரோனா வேரியன்ட்கள் நுரையீரலுக்குள் நுழைந்தபோது, இந்தப் புரதம்தான், கொரோனா வைரஸ் செல்களுக்குள் நுழைய உதவி செய்திருக்கிறது. ஆனால் ஓமிக்ரானை, இது அப்படி அனுமதிக்கவில்லை. எனவேதான், நுரையீரல் பகுதியில் ஓமிக்ரானால் பல்கிப்பெருக முடியவில்லை என்கிறார்” கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானி ரவீந்திர குப்தா.
அப்படியெனில் இனி அச்சப்பட வேண்டாம்தானே?
அப்படி சொல்லிவிட முடியாது. ஏனெனில், இந்த ஆராய்ச்சிகள் ஏன் ஓமிக்ரான் நுரையீரலை விட்டுவைக்கிறது என்பதற்கு மட்டுமே விடைசொல்லியிருக்கின்றன. இதுவும்கூட முதல்கட்ட ஆய்வுகள்தான். இதைத் தொடர்ந்து குரங்குகள் மற்றும் மனிதர்களிடமும் ஆய்வு நடத்தியபின்புதான் 100% ஒரு முடிவுக்கு வரமுடியும். இதுபோக,
ஏன் ஓமிக்ரான் இவ்வளவு வேகமாகப் பரவுகிறது?
காற்றில் ஓமிக்ரானால் எந்தளவு திறம்பட பரவ முடிகிறது?
50 முறை உருமாறிய ஓமிக்ரானுக்கு, வேறு ஏதேனும் ஆபத்தான குணங்கள் இருக்கின்றனவா?
உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் இன்னும் விடை தெரியவில்லை.
முதன்முதலாக ஓமிக்ரான் வேரியன்ட் உறுதிசெய்யப்பட்ட தென்னாப்பிரிக்காவில், புதிய கொரோனா அலை உச்சம்தொட்டு, தற்போது அங்கு தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துவருகிறது. விளைவாக அங்கு இரவு நேர ஊரடங்கு தளர்வுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த அலையில், டெல்டாவை விடவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விகிதம் குறைந்திருப்பதையும் அந்நாடு உறுதி செய்திருக்கிறது. இவையெல்லாம் நமக்கு ஆறுதல் அளிக்கும் செய்திகள்.
ஆனால், இந்தியாவில் இப்போதுதான் கொரோனா எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்துகொண்டிருக்கிறது. இனிதான் இதன் தாக்கத்தையே நாம் உணரப்போகிறோம். எனவே, நாம் மிகவும் உஷாராகத்தான் இருக்கவேண்டும்.
ஏற்கெனவே பார்த்ததுபோல, ஓமிக்ரான் மேல் சுவாச மண்டலமான வாய், மூக்கு, தொண்டையைத்தான் அதிகம் பாதிக்கிறது. அங்கிருந்து விரைவாகப் பரவவும் செய்கிறது. எனவே, நம்மிடமிருந்து பிறருக்கு கொரோனா பரவாமல் இருக்கவும், பிறரிடமிருந்து நமக்குப் பரவாமல் இருக்கவும் மாஸ்க் என்னும் ஆயுதம் நமக்கு மிக முக்கியம்.
முந்தைய கொரோனா பாதிப்புகளிலிருந்து உருவான ஆன்டிபாடிகள்கூட, ஓமிக்ரானைத் தடுப்பதில்லை என்பதால், தடுப்பூசிகளும் மிக முக்கியம்.
எனவே, இந்தியாவிலும் ஓமிக்ரான் அலை ஓயும் வரை, அலர்ட் ஆக இருக்கவேண்டியது அவசியம்.
இந்தியா
கால்வான் பள்ளத்தாக்கில் என்ன நடக்கிறது?
- இந்திய - சீன எல்லைகளில் 10 இடங்களில் புத்தாண்டு தினத்தன்று இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளைப் பகிர்ந்துகொண்டனர். இதில், இருநாட்டிற்குமிடையே எல்லைப் பிரச்னை நிலவும் 3 இடங்களும் அடக்கம். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சீன வீரர்கள் கால்வான் பள்ளத்தாக்கிலிருந்து கொடியேற்றுவது போலவும், வாழ்த்துவது போலவும் வீடியோக்களை வெளியிட்டிருக்கின்றன சீன ஊடகங்கள்.
- சர்ச்சைக்குரிய வகையில், இந்தியாவின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ குறித்து, மத்திய அரசு இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இதுகுறித்த மௌனத்தைக் கலைக்குமாறு, ராகுல் காந்தி அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
- இதுதவிர பாங்காங் ஏரியின் இருகரைகளுக்கிடையே புதிய பாலம் ஒன்றையும் சீனா கட்டிவருவது நேற்று தெரியவந்திருக்கிறது. இது இரண்டு சீன ராணுவ முகாம்களுக்கு இடையே இருந்த சுமார் 200 கி.மீ தூரத்தை, 500 மீட்டராக குறைக்க உதவுமாம்.
5000 பக்க குற்றப்பத்திரிகை:
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்ட வழக்கில், உ.பி மாநில சிறப்பு புலனாய்வுக் குழு நேற்று 5,000 பக்க குற்றப்பத்திரிகையை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆசிஷ் மிஷ்ரா, இதில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். தற்போது ஆசிஷ் மிஷ்ரா சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேகாலயா ஆளுநரின் விமர்சனத்துக்கு பா.ஜ.க-வின் பதில் என்ன?
- மேகாலயா மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், பா.ஜ.க-வின் நிலைப்பாடுகளுக்கு மாறாக அவ்வப்போது கருத்து தெரிவிப்பது வழக்கம். ஆனால், நேற்று நேரடியாக பிரதமரையே விமர்சித்து விட்டார். ``விவசாயிகள் போராட்டம் தொடர்பாக அவரிடம் பேசியபோது, பிரதமர் மோடி மிகவும் ஆணவத்துடன் நடந்துகொண்டார். 500 விவசாயிகள் இறந்திருக்கிறார்களே எனக் கேட்டதற்கு, `அவர்கள் எனக்காகவா இறந்தார்கள்?’ என்றார். நான் சண்டைபோட்டுவிட்டு வந்துவிட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார்.
- இவ்வளவு பெரிய விமர்சனத்தை மோடி மீது வைத்தும்கூட, அக்கட்சி சார்பிலிருந்து இதுவரை சத்யபால் கருத்துக்கு எவ்வித எதிர்வினையும் வரவில்லை. உத்தரப்பிரதேச தேர்தல் முடியும் வரைக்கும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என பா.ஜ.க முடிவு செய்திருப்பதுதான் அதற்கு காரணமாம்.
கோவாக்சின் சர்ச்சை
- 15 - 18 வயது வரையிலான சிறார்களுக்கு நேற்று முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கோவாக்சின் மட்டுமே இப்போதைக்கு ஒரே சாய்ஸ். இந்நிலையில், சில இடங்களில் 9 மாதங்களில் காலாவதியாகும், கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் 12 மாதத்திற்கு நீட்டித்து லேபிளை மாற்றி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
- ஆனால், ``ஆரம்பத்தில் தடுப்பூசியின் காலாவதி தேதியை நிர்ணயிக்க போதுமான டேட்டா இல்லாததால், குறைந்த அளவாக 9 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது 12 மாதங்களுக்குப் பிறகும் கோவாக்சின் செயல்திறனுடன் இருப்பதால், காலாவதி தேதி 12 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவுகள் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடமும் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. எனவே அச்சப்படத் தேவையில்லை” என நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதை மத்திய அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், கோவிஷீல்டுக்கும் 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக காலாவதி தேதி உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
`எல்லாரையும் அனுமதியுங்கள்!’
பெண்ணின் திருமண வயதை 21 வயதாக உயர்த்துவது குறித்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவில் 31 உறுப்பினர்களில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம்பெற்றிருந்தது நேற்று சர்ச்சையானது. இந்நிலையில், அந்த ஒரே ஒரு உறுப்பினரான திரிணமுல் காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ், ``ராஜ்ய சபாவில் 29 பெண் எம்.பி-க்களும், லோக் சபாவில் 81 பெண் எம்.பி-க்களும் உள்ளனர். ராஜ்ய சபா விதிகளைப் பயன்படுத்தி அவர்கள் அனைவரும் இந்த நிலைக்குழுவிடம் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய அனுமதிக்கவேண்டும்” என நிலைக்குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கோலி ஆப்சென்ட்:
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி, நேற்று ஜோஹன்னஸ்பெர்க்கில் தொடங்கியது. இதில், முதுகு பிடிப்பு காரணமாக விராட் கோலி விளையாடததால், கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்து, முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கே.எல்.ராகுல் மட்டுமே அதிகபட்சமாக 50 ரன்கள் அடித்தார்.
- தென்னாப்பிரிக்கா சார்பில் ரபாடா, ஒலிவியர் 3 விக்கெட்டுகளும், ஜேன்சன் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் தனது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா 14 ரன்களில், முகமது ஷமியிடம், மார்க்ரம் விக்கெட்டை இழந்தது. முதல்நாள் ஆட்டமுடிவில், தென்னாப்பிரிக்கா - 35/1
டீன் எல்கர் - 11 (57)
கீகன் பீட்டர்சன் - 14 (39)
தமிழகம்
சிறார்களுக்கான தடுப்பூசிகள்
நேற்று இந்தியா முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கின. இந்தப் பிரிவினரில் இந்தியா முழுவதும் நேற்று 41 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்களுக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2,34,175 சிறார்களுக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் படையில் அசோக் எல்லுசாமி
டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் கார் புராஜெக்டின் இன்ஜீனியரிங் பிரிவில் தலைமைப் பொறுப்பை வகிப்பவர் அசோக் எல்லுசாமி. இவர் இன்ஜீனியரிங்கை (ECE) முடித்தது சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில்தான். 2015-ல் முதன்முதலாக ஆட்டோபைலட் டீமைத் தொடங்குவது குறித்து எலான் மஸ்க் ட்விட்டரில் விண்ணப்பங்களை வரவேற்க, அப்போது அதன் மூலம் முதல் நபராக தேர்வானவர்தான் இந்த அசோக். இந்த சம்பவத்தை எலான் மஸ்க் நேற்று ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 1728
- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 6
இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு: 33,750
- இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 1700
கடந்த மாதம் 30-ம் தேதி, புதுக்கோட்டையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் பயிற்சியின்போது, வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் புகழேந்தியின் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. சிறுவனுக்கு 5 நாள்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை புகழேந்தி உயிரிழந்தார்.
இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஊத்துக்குளியில் குவாரிகள் மூடப்பட்டிருப்பதால், அங்கிருந்து கிரைண்டர்கள் தயாரிப்பதற்கான கற்கள் கிடைக்காமல், கோவை வெட் கிரைண்டர் தயாரிப்பாளர்கள் சிக்கலில் தவிக்கின்றனர். இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கோவை வெட் கிரைண்டர்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
ஜியோமார்ட், வால்மார்ட் நிறுவனங்களுக்கு வழங்கும் மொத்த விலையிலேயே தங்களுக்கும் பொருள்களை வழங்காவிடில், தமிழ்நாடு, குஜராத், ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் மற்றும் கோல்கேட் நிறுவனங்களின் பொருள்களை விற்பனை செய்வதை இன்று முதல் நிறுத்த அகில இந்திய நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் அமைப்பு ஆலோசித்து வருகிறது. ஏற்கெனவே மகாராஷ்டிராவில் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹிந்துஸ்தான் யுனிலிவரின் சில பொருள்களை விற்பனை செய்வதை நிறுத்த முடிவு செய்திருக்கின்றனர்.
கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக, இந்தியாவின் வேலைவாய்ப்பினை விகிதம் 7.9% ஆக உயர்ந்திருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) தெரிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது கடந்த ஆண்டு ஏப்ரல் - செப்டம்பர் மாதங்களுக்கு இடையே நடைபெற்றிருக்கவேண்டும். ஆனால், கொரோனாவால் அந்தப் பணிகள் டிசம்பர் 31, 2021 வரை ஒத்திவைக்கப்பட்டன. தற்போது மீண்டும் அந்தப் பணிகள் ஜூன் 30, 2022 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிய பெண்களை Github இணையதளத்தில் இழிவாக சித்திரித்தது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், மும்பை போலீஸார் பெங்களூரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரை நேற்று கைது செய்திருக்கின்றனர். இன்னும் இவரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது இஸ்ரேல்.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதல்முறையாக சந்தை மதிப்பில் 3 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டு சாதனை படைத்திருக்கிறது ஆப்பிள். ஆகஸ்ட் 2018-ல் ஒரு ட்ரில்லியன் டாலர்களையும், ஆகஸ்ட் 2020-ல் 2 ட்ரில்லியன் டாலர்களையும் இந்நிறுவனம் கடந்திருந்த நிலையில், தற்போது இந்தப் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
- Consumer Electronic Show 2022:
ஒவ்வோர் ஆண்டும் கூகுள், இன்டெல், LG, சாம்சங் என முன்னணி டெக் நிறுவனங்கள் தங்களின் அடுத்தகட்ட தொழில்நுட்ப கேட்ஜெட்களை லாஸ் வேகாஸில் நடக்கும், Consumer electronic show 2022-ல் (CES2022) காட்சிப்படுத்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக கூகுள், இன்டெல், அமேசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவில்லை. இருப்பினும் HP, LG, சாம்சங், சோனி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்கள் காட்சிப்படுத்தவிருக்கும் முக்கியமான கேட்ஜெட்கள் குறித்து CES2022-ன் இந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
On This Day - Jan 04
- உலக பிரெய்லி தினம். விழிச்சவால் கொண்டவர்கள் தகவல் தொடர்புக்காக பயன்படுத்தும் பிரெய்லி முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
- உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளர் ஐசக் நியூட்டன் பிறந்தநாள், 1643
- பத்திரிகையாளரும், பிரபல திரைப்படத் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.வாசன் பிறந்தநாள், 1904
- `காந்தியப் பொருளாதார’ அறிஞர் ஜே.சி.குமரப்பா பிறந்தநாள், 1892
- பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞானி பிறந்தநாள், 1954
- விஞ்ஞானி ஜி.டி.நாயுடு நினைவுநாள், 1974
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: