🎾 எங்கே போனார் பெங் ஷூவாய்? 🇨🇳
In Today's Edition: காணாமல்போன சீன டென்னிஸ் சூப்பர்ஸ்டார் | இந்த ஆண்டும் சுவாசிக்கத் திணறும் டெல்லி | சர்ச்சையான ஶ்ரீநகர் என்கவுன்ட்டர் | காஷ்மீர் காங்கிரஸில் விரிசல் | Reading Time: 5 Mins.
ஹாய், ஹலோ… வணக்கம்!👋
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக இன்று முதல் 3 நாள்களுக்கு தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யவிருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, வேலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கும்,
காஞ்சிபுரம், திருநெல்வேலி, செங்கல்பட்டு, தூத்துக்குடியில் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ⛈
எனவே பார்த்து பத்திரமா இருங்க மக்களே..!
❶ எங்கே போனார் பெங் ஷூவாய்? 🎾
இந்திய அரசியல் தலைவர் மீது, புகார் தெரிவிக்கும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் அடுத்த சில நாள்களுக்கு எங்கிருக்கிறார் என்றே தெரியாமல், காணாமல் போனால் எப்படி இருக்கும்? அப்படியொரு அதிர்ச்சி சம்பவம்தான் சீனாவில் நடந்துவருகிறது.
காணாமல் போனவர், சீன டென்னிஸ் வீராங்கனை, பெங் ஷூவாய்.
அவர் புகார் சொன்னது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஜாங் காலி மீது.
யார் இந்த பெங் ஷூவாய்?
சீனாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனையாக விளங்குபவர் 35 வயதாகும் பெங் ஷூவாய். 2014-ல் உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் இரட்டையர் பிரிவில் நம்பர் 1-ஆக வந்தபோது பெங்கை தேசமே கொண்டாடியது.
இவர் கடந்த நவம்பர் 2-ம் தேதி சீனாவின் சமூக வலைதளமான வெய்போவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஜாங் காலி (75), பல ஆண்டுகள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெங் உருக்கமாக பதிவிட, ``ஒரு முன்னணி வீராங்கனைக்கே இந்த நிலையா?” எனப் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த பதிவானது சென்சார் செய்யப்பட்டு, சமூக வலைதளங்களிலிருந்து நீக்கப்பட்டது. ஆனாலும், அதன் ஸ்கிரீன்ஷாட்கள் விரைவாக சமூக வலைதளங்களில் வைரலாயின.
பெங்கிற்கு நடந்தது என்ன?
பெங் அந்தப் பதிவில் சொன்ன விஷயங்கள்: 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜாங் காலியும், அவரது மனைவியும் பெங்கை வீட்டிற்கு அழைத்திருக்கின்றனர். அப்போது, அங்கு வைத்து பெங்கை வன்கொடுமை செய்திருக்கிறார் ஜாங்.
2012-ம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைக்குழு உறுப்பினராக ஜாங், தேர்வு செய்யப்படும் வரை இந்தக் கொடுமை தொடர்ந்திருக்கிறது. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின், 3 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் பெங்கை வீட்டிற்கு அழைத்து துன்புறுத்தியிருக்கிறார் ஜாங்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மிக உருக்கமாகப் பகிர்ந்துள்ள பெங், ``இவற்றிற்கு எந்த ஆதாரம் இல்லாவிட்டாலும்கூட, இதனால் எனக்குப் பின்விளைவுகள் வரும் என்றாலும்கூட உன்னைப் பற்றிய உண்மையை நான் சொல்லியே தீருவேன்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதுவரைக்கும் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஜாங் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இந்தப் பதிவிற்குப் பின் பெங் ஷூவாய் என்ன ஆனார் என்றும் யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்துதான் ஜோக்கோவிச் உள்பட பல முன்னாள், இந்நாள் டென்னிஸ் வீரர்கள் பெங்கிற்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில்தான், பெங்கின் பாதுகாப்பு குறித்து நேற்று, ``அவரும் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன்” எனக் கவலை தெரிவித்திருக்கிறார் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா.
எங்கே இருக்கிறார் பெங்?
இதுவரைக்கும் உறுதியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை.
ஆனால், உலக டென்னிஸ் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி, ஸ்டீவ் சைமன்ஸ் அண்மையில் `நியூயார்க் டைம்ஸ்’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ``பல்வேறு இடங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி அவர் பத்திரமாக இருக்கிறார். அவர் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அநேகமாக அவர் பீஜிங்கில் இருக்கலாம். ஆனால், எங்களால் அவரைத் தொடர்புகொள்ள முடியாததால், இதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகளை சீன அரசாங்கம் நேர்மையுடன் விசாரிக்கவேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவிலும் #MeToo இயக்கம் வலுப்பெற்று வந்தது. இந்நிலையில், பெங்கின் இந்தக் குற்றச்சாட்டுகள் சீனாவில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
❷ சுவாசிக்கத் திணறும் டெல்லி; யார்தான் காரணம்?
டெல்லியில் காற்று மாசுபாடு வழக்கம்போல இந்த ஆண்டும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியிருக்கிறது.
``அரசாங்கம் ஒவ்வொரு விஷயத்திலும், நீதிமன்றமே உத்தரவுகளைப் பிறப்பிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. சிறிய விஷயங்களைக் கூட செய்வதில்லை” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மேலும், விரைவாக டெல்லியின் முக்கியமான காற்று மாசுபடுத்தும் காரணிகளான கட்டுமானப் பணிகள், போக்குவரத்து, தொழிற்சாலைகள், மாசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் உத்தரவிட்டிருக்கிறார்.
புது குழப்பம்
இரண்டு நாள்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர், விவசாயிகள் வைக்கோல்களை எரிப்பது காற்று மாசுபாடு பிரச்னைக்கு 10% மட்டுமே காரணம் எனக் கூறியிருந்தார். இது ஊடகங்களிலும் வெளியானது. இந்நிலையில், ``இது தவறான தகவல் எனவும், மத்திய அரசு விவசாயிகளின் வாக்கு வங்கிக்காக (விரைவில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வேறு) நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறது” எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இதுகுறித்து நேற்று நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, ``10% என்பது தவறானது; விவசாயிகள் வைக்கோலை எரிப்பது டெல்லியின் காற்று மாசுபாட்டிற்கு 35 முதல் 40% வரை காரணம் என்பதே அரசின் பிரமாணப் பத்திரத்தில் இருக்கிறது” என விளக்கமளித்தார்.
இந்நிலையில் புதிய உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்காமல், நவம்பர் 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
இந்தியா
விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் போராடிய விவசாயிகளின் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி அறிவித்துள்ளார்.
போலி என்கவுன்ட்டர் நடந்ததா ஶ்ரீநகரில்?: கடந்த திங்கள்கிழமை மாலை ஶ்ரீநகரில் நடந்த என்கவுன்ட்டர் ஒன்றில் 4 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 2 பேர் தீவிரவாதிகள் என்றும், ஒருவர் அவர்களுக்கு உதவியவர் என்றும், மற்றொருவர் மட்டுமே அப்பாவி எனவும் ஶ்ரீநகர் காவல்துறை தெரிவித்திருந்தது. அந்த 4-வது நபர் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலின்போது இடையில் சிக்கி இறந்துவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் காவல் துறையினரே அவற்றைக் கைப்பற்றி அப்புறப்படுத்தினர். இது அவர்களின் உறவினர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும், சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் அல்டாப் அகமது பட் என்பவர் அப்பாவி என்றும், காவல்துறையினர்தான் அவரைக் கொன்றுவிட்டனர் என்றும், அவர்களின் உடல்களை உறவினர்களிடம் வழங்கவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இதுகுறித்து கண்ணீருடன் விவரிக்கும் அவருடைய மகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அசெர் அறிக்கை: கடந்த 3 ஆண்டுகளில் தேசிய அளவில் தனியார் பள்ளிகளிலிருந்து விலகி, அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் (6 - 14 வயதினர்) சேர்ந்திருக்கும் சதவீதம் அதிகரித்திருப்பது நேற்று வெளியான அசெர் அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. அதிகப்படியான மாணவர்கள் தனியாரில் இருந்து அரசுப்பள்ளிகளில் சேர்ந்தவர்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் (13.2%) முதல் இடத்தையும், கேரளா (11.9%) இரண்டாம் இடத்தையும் வகிக்கின்றன. தமிழகம் (9.6%) மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்த மாற்றம் மாணவர்கள் மற்றும் மாணவிகள் என இரு தரப்பிலும் நடந்துள்ளது. ஆனால், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுபவர்களில் மாணவர்களின் எண்ணிக்கையே அதிகம் இருக்கிறது.
தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையில் புதிய மைல்கல்: முதல்முறையாக இந்தியாவில் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசியும் எழுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கை (18 வயதுக்கு மேற்பட்டோர்), ஒரே ஒரு டோஸை மட்டும் எடுத்துக்கொண்டவர்களின் எண்ணிக்கையைத் தாண்டியிருக்கிறது. முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை இது உணர்த்துகிறது.
ஒரு டோஸ் மட்டும் எடுத்துக்கொண்டவர்கள்: 37.5 கோடி பேர்
இரண்டு டோஸ்களும் எடுத்துக்கொண்டவர்கள்: 38 கோடி பேர்
ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை: அக்டோபர் 3-ம் தேதி லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதியான ராகேஷ் குமார் ஜெயினை நியமித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
UAPA சட்டத்திற்கு எதிராக வழக்கு: UAPA சட்டத்தின் சில பகுதிகளை ரத்துசெய்யக்கோரி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.எஸ் அதிகாரிகள் சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. ``இந்த சட்டத்தின்கீழ் பதியப்படும் வழக்குகளில், வெறும் 2.19% பேரே தண்டிக்கப்படுகின்றனர். இந்த சட்டத்தின்கீழ் போடப்படும் வழக்குகள் பலவும் தவறான நோக்கத்திலேயே போடப்படுவதை இது உணர்த்துகிறது” என மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ்க்கு சிக்கல்: ஜம்மு காஷ்மீர் காங்கிரஸைச் சேர்ந்த 4 முன்னாள் அமைச்சர்கள், 3 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 20 மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் அண்மையில் காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய 23 பேர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்துக்கு நெருக்கமானவர்கள். அண்மைக்காலத்தில் ஜம்மு காஷ்மீரில் எந்தவொரு தேர்தலிலும் காங்கிரஸ் ஜொலிக்காததாலும், உள்ளூர் தலைமை சரியில்லாததாலும் இந்த முடிவை எடுத்திருப்பதாக ராஜினாமா செய்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில், ஜம்முவில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இது காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஸ்டாண்ட் அப் காமெடியன் மீது புகார்: இந்தியாவைச் சேர்ந்த ஸ்டாண்ட் அப் காமெடியனான வீர் தாஸ், அமெரிக்காவில் அண்மையில் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ செய்திருந்தார். `I come from two Indias’ என்ற அந்த ஷோவின் வீடியோவை யூடியூபிலும் அப்லோடு செய்திருந்தார். அதில், இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், விவசாயிகள் போராட்டம், கொரோனா கால சவால்கள் எனப் பலவற்றையும் பேசியிருந்தார். அதிலிருந்து ஒரு சில பகுதிகளை மட்டும் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிடவே, வலதுசாரிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், டெல்லி காவல்துறையில் வீர் தாஸ் மீது புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
``இந்தியாவை வெளிநாட்டில் வைத்து வீர் தாஸ் அவமானப்படுத்திவிட்டார்” என ஒரு பக்கம் கண்டனங்களும், மறுபக்கம் ``இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான மிரட்டல்” என பாலிவுட் பிரபலங்கள், அரசியல்வாதிகள் மத்தியில் வீர் தாஸ்க்கு ஆதரவும் குவிந்துவருகிறது. ``இந்தியாவில் பெண்களை பகலில் கடவுளாக வணங்குவோம்; ஆனால், இரவில் பாலியல் வன்கொடுமை செய்வோம்” என வீர்தாஸ் பேசிய சில வசனங்கள்தான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றன. ஆனால், ``எடிட் செய்யப்பட்டு பரப்பப்படும் சில நிமிட காட்சிகளால் ஏமாறாதீர்கள்” என விளக்கம் கொடுத்திருக்கிறார் வீர் தாஸ்.
ஆப்கன் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை முடிவு செய்ய குழு: ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் தலைமையில் புதிய அரசாங்கம் அமைந்திருப்பதையடுத்து, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடனான உறவை எப்படி எதிர்காலத்தில் எடுத்துச்செல்வது என்பது குறித்து ஆராயவும், கிரிக்கெட் விவகாரங்களில் அரசுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஒரு முடிவுக்கு வரவும் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளது ஐ.சி.சி.
வெள்ள நிவாரண நிதி: தமிழக அரசு சார்பில், வெள்ள நிவாரண நிதியாக 2629 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது. வெள்ளச்சேதங்களை விரைவில் மத்திய குழு பார்வையிடவிருக்கிறது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த, தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு, தமிழக அரசு சார்பில் இந்தக் கோரிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்.
புதிய தலைமை நீதிபதி: அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டுவந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அவர் இங்கு வந்து பொறுப்பேற்கும் பட்சத்தில், சீனியாரிட்டி அடிப்படையில் அவரே சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார். அதுவரைக்கும் தலைமை நீதிபதிக்கான பணிகளை, மற்றொரு மூத்த நீதிபதியான துரைசாமி கவனித்துக்கொள்ளவிருக்கிறார்.
உருக்கமான கடிதம்: சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, மிக உருக்கமான கடிதத்துடன் பலருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, நேற்று தமிழகத்திலிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார்.
காரணமின்றி கைது செய்யப்பட்டனரா பழங்குடி இளைஞர்கள்?: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்துவரும் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறையினர், காவல்நிலையம் அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததாக எழுந்திருக்கும் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்பதற்கும் காவல்துறையினரின் தரப்பிலிருந்து இன்னும் சரியான பதில் அளிக்கப்படவில்லை.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர:







