The Subject Line

Share this post

🇺🇦உக்ரைன் எல்லையில் என்ன செய்கிறார் புடின்?

www.thesubjectline.in

Discover more from The Subject Line

செய்திகளை ஸ்மார்ட்டாகத் தெரிந்துகொள்ள உதவும் தமிழ் நியூஸ்லெட்டர். இனி உங்களின் தினசரி நியூஸ் டயட்... தினமும் காலை 7 மணிக்கு உங்கள் இன்பாக்ஸில்!
Over 3,000 subscribers
Continue reading
Sign in

🇺🇦உக்ரைன் எல்லையில் என்ன செய்கிறார் புடின்?

இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: டெஸ்ட் தொடரிலிருந்து விலகும் ரோஹித் | நஞ்சப்பா சத்திரம் மக்களை பாராட்டிய இந்திய ராணுவம் | CBSE வினாத்தாள் சர்ச்சை | போலி சர்ட்டிஃபிகேட் மூலம் தப்பித்த இந்தியாவின் முதல் ஓமிக்ரான் நோயாளி |⏱ Reading Time: 5 Mins

ஞா.சுதாகர்
Dec 14, 2021
Share this post

🇺🇦உக்ரைன் எல்லையில் என்ன செய்கிறார் புடின்?

www.thesubjectline.in
Share

ஹாய், ஹலோ… வணக்கம் 👋

ராணுவ தளவாடங்களோடு, சுமார் 90,000 வீரர்களை உக்ரைன் - ரஷ்ய எல்லையில் நிறுத்திவைத்திருக்கிறார் புடின். இது விரைவில் 1,75,000 ஆகலாம் என அஞ்சுகிறது உக்ரைன். அது நடந்துவிட்டால், அடுத்து ரஷ்யா நிச்சயம் உக்ரைனில் ஊடுருவி அதைக் கைப்பற்றிவிடும் எச்சரிக்கிறது அமெரிக்கா. அடுத்தடுத்து ரஷ்யாவின் ஆயுதங்கள் எல்லையில் குவிக்கப்படும் நிலையில், இன்னும் சில நாள்களில் அங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என பரபரப்புடன் பார்க்கிறது உலகம். என்ன செய்கிறார் ரஷ்ய அதிபர் புடின்? ஏன் பதற்றம் கொள்கிறது அமெரிக்கா?

என்ன பிரச்னை அங்கே?

அதைத் தெரிந்துகொள்ள கொஞ்சம் உக்ரைனின் கடந்தகாலம் பற்றியும் பார்க்கவேண்டும்.

Image Courtesy: Aljazeera
  • பல நூற்றாண்டுகளாக ரஷ்யாவோடு கலாசார ரீதியாக, அரசியல்ரீதியாக ஒருங்கிணைந்த நாடு உக்ரைன். ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவின் ஒரு அங்கமாக இருந்த நாடும் கூட. 1991-ல் சோவியத்திலிருந்து பிரிந்ததற்குப் பிறகே சுதந்திர நாடானது. ஆனாலும்கூட ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்கம் செலுத்தி வந்தது.

  • இதில்தான் பிரச்னை எழுந்தது. உக்ரைன் புவியியல் ரீதியாக ஒரே நாடாக இருந்தாலும், அதற்குள்ளே கிழக்கு உக்ரைன் - மேற்கு உக்ரைன் என அரசியல்ரீதியாக வேறுபாடுகள் இருந்தன. கிழக்கு உக்ரைன் மக்களில் அதிகம்பேர் ரஷ்யர்கள்; ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து உக்ரைன் இருக்கவேண்டும் என நினைப்பவர்கள்.

  • மேற்கு உக்ரைனில் இருப்பவர்கள், பெரும்பாலும் உக்ரைனைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். உக்ரைன் மேற்கத்திய நாடுகளுடனும், ஐரோப்பிய யூனியனுடனும் இணைந்து செயலாற்ற வேண்டும் என நினைப்பவர்கள்.

  • அப்படித்தான், 2014-ல் உக்ரைன், ஐரோப்பிய யூனியனில் இணையும் ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போதைய அதிபர் அதை விட்டுவிட்டு, ரஷ்யாவின் தலைமையிலான Eurasian Economic Union-ல் இணையவே கடுப்பான மக்கள் போராட்டங்களில் குதித்தனர். விளைவாக, கிளர்ச்சி வெடித்து அப்போதைய அதிபர் நாட்டைவிட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

  • இப்படி உக்ரைன் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மேலை நாடுகளுடன் இணையவேண்டுமா அல்லது தொடர்ந்து ரஷ்யாவின் நிழலிலேயே இருக்கவேண்டுமா என்பதுதான் பல ஆண்டுகளாக அங்கு முக்கிய பிரச்னையாக இருக்கிறது.

ரஷ்யாவுக்கு உக்ரைன் ஏன் முக்கியம்? 🇷🇺

சோவியத்திலிருந்து உக்ரைன் பிரிந்ததலிருந்தே, அந்நாட்டின் மீது மேலை நாடுகளுக்கு ஒரு கண். உக்ரைனை தங்களோடு கூட்டுசேர்த்துக் கொண்டு, கிழக்கு ஐரோப்பாவில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவேண்டும் என்பது அவர்கள் கணக்கு.

  • வரலாற்றின் பல ஆண்டுகளாக தன்னுடன் நல்லுறவுகொண்ட தேசம்; புவியியல் ரீதியாக தன் எல்லையில் இருக்கக்கூடிய தேசம்; அதிகமான ரஷ்யர்கள், ரஷ்ய மொழி பேசும் மக்கள் வசிக்கக்கூடிய கலாசார தொடர்பு தேசம்; இவ்வளவு காரணங்களைச் சொல்கிறது ரஷ்யா, உக்ரைனை விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்க!

  • இதனால்தான் இந்த நாட்டை ஆளுக்கொரு பக்கமாக இழுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

``உக்ரைன் எங்களுடன் NATO அமைப்பில் இணைந்து பணியாற்றலாம். இதன்மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவின் பலம்வாய்ந்த ராணுவ பாதுகாப்பு, பிற ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு உள்பட அனைத்தும் உக்ரைனுக்கு கிடைக்கும்” என அந்நாட்டை தங்கள் பக்கம் இழுக்கின்றன மேலை நாடுகள்.

``ரஷ்யாவின் எல்லையில் இருக்கும் ஒரு நாட்டில், அமெரிக்க, ஐரோப்பிய ஆயுதங்களும், வீரர்களும் வந்திறங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கதே அல்ல; அது எங்களுக்கான நேரடி அச்சுறுத்தல். அதுவும் எங்கள் நட்பு நாட்டை உங்களுடன் கூட்டுசேர்ப்பதா?” என இதை எதிர்க்கிறார் புடின்.

உக்ரைன் அரசு என்ன சொல்கிறது? 🗺

உக்ரைன் NATO-வில் முழு உறுப்பினராக சேருமா, சேராதா என்ற கேள்வி இதற்கு முன்பே பல ஆண்டுகளாக இருப்பதுதான். ஆனால், இப்போது திடீரென ரஷ்யா தீவிரம் காட்டுவதற்கு காரணம், உக்ரைனின் தற்போதைய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி.

  • இவர் ரஷ்யாவின் ஆதிக்கத்தை தொடர்ந்து எதிர்ப்பவர்; 2019-ல் பதவியேற்றது முதலே அமெரிக்காவின் ஆதரவைப் பெற தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் ஜெலன்ஸ்கி. மேலும், உக்ரைன் NATO-வில் இணையும் பணிகளும் வேகமெடுத்திருக்கின்றன.

  • இதையடுத்துதான், ``இனிமேல் பேச்சுவார்த்தைகள் வேலைக்கு ஆகாது” என படைகளைத் தயார்ப்படுத்த தொடங்கிவிட்டார் புடின்.

  • உக்ரைனை NATO-வில் இணைப்பது, NATO படைகளை உக்ரைனில் குவிப்பது என மேலை நாடுகள் ஏதேனும் செய்தால், அந்நாட்டை ராணுவ ரீதியாகக் கைப்பற்றவும் தயாராகிவிட்டார்.

அமெரிக்காவால் ரஷ்யாவைத் தடுக்க முடியுமா? 🇺🇸

நிச்சயம் முடியாது. அதற்கு இரண்டு காரணங்கள்.

  1. புடின் உண்மையில் உக்ரைன் மேலை நாடுகளுடன் கூட்டு சேர்வதை மட்டும்தான் எதிர்க்கிறாரா அல்லது 2014-ல் கிரைமியாவை அந்நாட்டுடன் இணைத்ததுபோல, உக்ரைனை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறாரா என்பது யாருக்கும் தெரியவில்லை. எனவே அவரின் அடுத்த மூவ் என்பதே தெரியாமல் யாராலும் எதுவும் செய்யமுடியாது.

  2. இரண்டாவது, ரஷ்யாவின் படைகளை அமெரிக்காவோ, NATO படைகளோ எதிர்த்தால் அது ரஷ்யாவுடன் நேரடி ராணுவ மோதலுக்கு வழிவகுக்கும். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய மிகப்பெரிய மோதலுக்கு அது வழிவகுக்கும். அதனால், பிற நாடுகளுக்கும் எந்த லாபமும் இல்லை. எனவேதான், அண்மையில் புடினை எச்சரித்த, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ``ரஷ்யா உக்ரைனில் ஊடுருவினால் இந்தமுறை கடுமையான பின்விளைவுகள் இருக்கும். ஆனால், ராணுவரீதியாக அது இருக்காது” என்றே ஓப்பனாக தெரிவித்துவிட்டார்.

எனவே, புடினுக்கு ராணுவ அழுத்தங்கள் சுத்தமாக இல்லை. நினைத்தால், நாளையே உக்ரைனை மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரலாம். ஆனால், அரசியல் அழுத்தங்கள் நிறையவே உள்ளன.

Cat Carry GIF - Cat Carry Cute - Discover & Share GIFs
  • மீண்டும் ரஷ்யா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலிருந்து பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது அந்நாட்டிற்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

  • ஒருவேளை, எல்லையில் சண்டை தொடங்கி, உக்ரைன் அமைதியாக சரணடையாமல் போர் நடந்தால், அது இருதரப்பிலும் சேதத்தை உண்டாக்கலாம். அல்லது அனைத்து எச்சரிக்கையையும் மீறி, உக்ரைன் NATO-வில் இணையலாம். இவையெல்லாம் புடினுக்கு அவப்பெயரும்கூட.

அடுத்து என்ன நடக்கும்? ⚠️

- ஆப்கனில் அண்மையில் சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து பலவீனமாகக் காட்சியளிக்கிறது அமெரிக்கா. எனவே வெறும் எச்சரிக்கைகளை வைத்து மட்டும்தான், அதனால் ரஷ்யாவை இப்போதைக்கு மிரட்ட முடியும்.

- பல்வேறு உள்நாட்டு சிக்கல்களால் தவித்துக்கொண்டிருக்கின்றன ஐரோப்பிய நாடுகள். இதில் உக்ரைன் பிரச்னை கூடுதல் சிக்கல் என நினைக்கின்றன அவை.

- ரஷ்யாவின் பிடியிலிருந்து விலக தவித்துக்கொண்டிருக்கிறது உக்ரைன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த துடிக்கிறார் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி.

``NATO-வில் இணைந்தாலோ, NATO-வின் படைகள் உக்ரைனில் இறங்கினாலோ, எச்சரிக்கை கோட்டை (Red Line) தாண்டுகிறீர்கள் என அர்த்தம்” என அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்து, தயக்கமின்றி எல்லைகளில் படைகளைக் குவித்து வருகிறார் புடின்.

அந்தக் கோட்டில் இனி அடுத்த அடியை யார் எடுத்து வைக்கிறார் என்பதைப் பொறுத்தே, இந்தப் பிரச்னையின் திசை தீர்மானிக்கப்படும்!

Share The Subject Line


இந்தியா

  1. திரும்பப் பெறப்பட்ட சி.பி.எஸ்.இ கேள்வி: 📝

    10-ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வின் வினாத்தாளில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வியில், ``பெண்களின் விடுதலை, இன்றைய தலைமுறை பிள்ளைகளைன் சீரழிவிற்கு காரணமாக அமைந்துவிட்டது” என்பதுபோன்ற பொருள்தரும் சர்ச்சைக்குரிய வரிகள் இடம்பெற்றிருந்தன. இதற்கு பல்வேறு கட்சியினரும், அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பியிருந்தார். இதையடுத்து, இந்தக் கேள்வியை திரும்பப்பெறுவதாகவும், அதற்கு முழு மதிப்பெண்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது சி.பி.எஸ்.இ.

  2. பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற பஞ்சாப் பெண்: 👑

    இஸ்ரேலில் நடந்த பிரபஞ்ச அழகி போட்டியில், மகுடம் சூடியிருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சாந்து. இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்தப் பட்டத்தை 1994-ல் சுஷ்மிதா சென்னும், 2000-ல் லாரா தத்தாவும் வென்றிருந்தனர். அதற்குப் பின் 21 ஆண்டுகள் கழித்து, இந்தியர் ஒருவர் இப்போது வென்றிருக்கிறார்.

  3. உயர்ந்த சில்லறை பணவீக்கம்: 📈

    நாட்டின் சில்லறைப் பணவீக்கம், மூன்று மாதங்களில் இல்லாத அளவாக நவம்பர் மாதத்தில் 4.91% ஆக கணக்கிடப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களின் விலையேற்றத்தால் இது தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

  4. ``எங்களுக்கு எதுவும் தெரியாது” - கைவிரித்த அதிகாரிகள்

    பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு கடந்த ஞாயிரன்று ஹேக் செய்யப்பட்டது. இதுகுறித்து நேற்று நாடாளுமன்றத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை நிலைக்குழு உறுப்பினர்கள், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, ``பிரதமர் அக்கவுன்ட் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை. அடுத்தநாள் செய்திகளில்தான் அந்த சம்பவம் குறித்து நாங்கள் தெரிந்துகொண்டோம்” எனத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, ``எங்கள் தரப்பில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை” என ட்விட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

  5. போலி சர்ட்டிஃபிகேட் மூலம் தப்பித்த தென்னாப்பிரிக்க நபர்:

    பெங்களூருவுக்கு வந்திருந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர்தான், இந்தியாவில் முதல் ஓமிக்ரான் தொற்று உறுதியான நபர் என சில நாள்களுக்கு முன்பு செய்திகள் வந்ததில்லையா? அந்த நபர், கொரோனா பாதிக்கப்பட்டிருந்தபோதே, போலி RT-PCR டெஸ்ட் ரிசல்ட்களைக் கொடுத்து, அதிகாரிகளை ஏமாற்றி, குவாரன்டனைலிருந்து தப்பித்து, தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றிருப்பது நேற்று தெரியவந்திருக்கிறது. இதையடுத்து பெங்களூருவில் ஹோட்டல் ஊழியர், சுகாதாரத்துறை அதிகாரி மற்றும் லேப் டெக்னீஷியன்கள் இருவர் என 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 🤦‍♂️

தமிழகம்

  1. நஞ்சப்பா சத்திரம் மக்களைப் பாராட்டிய இந்திய ராணுவம்:

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப் பணிகளில் உதவியதற்காக நஞ்சப்பா சத்திரம் மக்களையும், உள்ளூர் அதிகாரிகளையும், நேற்று வெலிங்க்டனில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டினார் தக்‌ஷின் பாரத் ராணுவப்படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அருண். அவர்களுக்கு நிவாரண தொகையையும் வழங்கியவர், அடுத்த ஓராண்டிற்கு அம்மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

உலகம்

  1. சர்ச்சையில் தென்கொரியாவின் திட்டம்:

    வரும் ஜனவரி மாதம் முதல், பூஷியான் நகரில் facial recognition தொழில்நுட்பம் கொண்ட சுமார் 11,000 சிசிடிவி கேமராக்களை அமைத்து, அதில் கிடைக்கும் டேட்டாவை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆராய்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்காணிக்கப் போவதாகக் கூறி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது தென் கொரியா. அவர்கள் மாஸ்க் அணிந்துள்ளனரா, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்ற விவரங்களையெல்லாம் இது கண்காணிக்குமாம். மக்களின் பிரைவசிக்கான அச்சுறுத்தல் என இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.


  • தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 657

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 12

  • இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️👇

Source: IMD Chennai
  • வரும் ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் தொடங்கவிருக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக கலைவாணர் அரங்கத்தில் நடந்துவந்த சட்டசபை, இந்தமுறை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே நடக்கவிருக்கிறது.

  • இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், நேற்று முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார்.

  • தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்துப் பேசவிருக்கிறார். விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பாகவும், பா.ஜ.க-விற்கு எதிரான அணியை அமைப்பது தொடர்பாகவும் சந்திர சேகர ராவ் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • உத்தரப்பிரதேச தேர்தல் வருவதையொட்டி, அம்மாநிலத்தில் அடிக்கடி அரசு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்வில் பங்கேற்று வருகிறார் பிரதமர் மோடி. அதன் ஒருகட்டமாக, வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தையும், கங்கை நதியையும் இணைக்கும் புதிய வழித்தட திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

    Twitter avatar for @TIME
    TIME @TIME
    Elon Musk (@elonmusk) is TIME's 2021 Person of the Year #TIMEPOY ti.me/3s5IBKX
    Image
    12:39 PM ∙ Dec 13, 2021
    111,812Likes17,720Retweets
  • `டைம்’ பத்திரிகையின் 2021-ம் ஆண்டுக்கான மனிதராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் எலான் மஸ்க். மனித குலத்தை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் வகையிலான தொழில்நுட்பங்களில் எலான் மஸ்க் நிகழ்த்திய அசாத்திய பாய்ச்சலுக்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

  • உலகில் முதல்முறையாக, ஓமிக்ரான் வேரியன்ட்டால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியின் இறப்பை பதிவு செய்திருக்கிறது பிரிட்டன். இதையடுத்து, அடுத்த ஒரு மாதத்திற்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருக்கிறார்.

  • தசைநார் கிழிவு காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என அறிவித்திருக்கிறது பி.சி.சி.ஐ. இதையடுத்து, இந்திய அணியின் துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என கேள்வி எழுந்துள்ளது.


- தமிழகத்தின் புதிய கட்டுப்பாடுகள் / விலக்குகள்:

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது, டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்ட நாட்களான டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரு நாள்களும் கடற்கரைகளுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள், வரும் ஜனவரி 3, 2022 முதல் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- தொடங்கும் புத்தக காட்சி

45-வது சென்னை புத்தக காட்சி வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடக்கவிருக்கிறது. நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தக காட்சியை ஜனவரி 6-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.


On This Day - Dec 14

- அணுசக்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் புளூட்டோனியம் தனிமம், அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறியப்பட்ட தினம், 1940

- தேசிய எரிசக்தி சேமிப்பு தினம்


📣 Note: The Subject Line (TSL) நியூஸ்லெட்டரின் இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. ✅


அவ்வளவுதான்!

The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞

திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!

Have a Nice day! ☕️

The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:

Telegram | Twitter | Facebook | Insta

Share this post

🇺🇦உக்ரைன் எல்லையில் என்ன செய்கிறார் புடின்?

www.thesubjectline.in
Share
Comments
Top
New
Community

No posts

Ready for more?

© 2023 The Subject Line
Privacy ∙ Terms ∙ Collection notice
Start WritingGet the app
Substack is the home for great writing