🇺🇦 ரஷ்யா - உக்ரைன் பிரச்னை: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
Today Edition Highlights: சரிந்த உலக பங்குச்சந்தைகள் | செமிகண்டக்டர் பிசினஸில் இறங்கும் வேதாந்தா | ஏன் ரெய்னாவுக்கு நோ சொன்னது CSK? | Reading Time: ⏱ 5 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 20-ம் தேதி நிறைவடைகின்றன. இந்தப் போட்டிகள் முடிவதற்குள்ளாகவே ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது எனக் கூறி, தன்னாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறச் சொல்லியிருக்கிறது அமெரிக்கா. பிரிட்டன், எஸ்டோனியா, லத்திவியா, நார்வே ஆகிய நாடுகளும் இதேபோல தங்கள் நாட்டு மக்களை அறிவுறுத்தியிருக்கின்றன.
உக்ரைன் எல்லைகளில் குவிக்கப்பட்டிருக்கும் ரஷ்ய படைவீரர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்திலிருந்து 1,30,000 ஆக உயர்ந்திருக்கிறது. முன்பைவிட, பெரியளவில் முகாம்களையும் அமைத்திருக்கிறது ரஷ்யா.
``எனவே இன்னும் சில நாள்கள்தான்” என எச்சரிக்கின்றன மேலை நாடுகள். ஆனால், ரஷ்யாவோ அமைதி காக்கிறது.
ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து, அதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் நேரடியாக தலையிட்டால் நிச்சயம் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மிகப்பெரிய மோதலாக இது இருக்கும். ஐரோப்பாவின் அமைதி குலையும். உலகப் பொருளாதாதத்தில் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தும்.
இவற்றைத் தாண்டி இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா?
நிச்சயமாக. மாணவர்கள், ஊழியர்கள் என சுமார் 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உக்ரைனில் வசிக்கின்றனர். இவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது முதல் பணி. இது மட்டுமே உக்ரைன் பிரச்னையால் இந்தியா சந்திக்கும் நேரடி சவால். ஆனால், மறைமுகமாக இன்னும் பல சவால்கள் இந்தியாவுக்கு காத்திருக்கின்றன. அவை என்ன?
மொத்தம் 3 முக்கிய சவால்கள்.
1. ரஷ்யாவுடனான நட்பு
2016 - 20 காலகட்டத்தில் இந்தியா இறக்குமதி செய்த பாதுகாப்பு தளவாடங்களில் சுமார் 50% ரஷ்யாவிலிருந்து வந்தவை. இந்திய விமானப்படையில் இருக்கும் 71% ஜெட் விமானங்களும் ரஷ்யாவிலிருந்து வந்தவை அல்லது ரஷ்ய உதவியுடன் தயாரிக்கப்பட்டவையே. அண்மையில் இந்தியா வந்து சேர்ந்த ஏவுகணை பாதுகாப்பு தொழில்நுட்பமும் (S-400 ட்ரையம்ப்) ரஷ்யாவுடையதே.
இவற்றை இங்கு குறிப்பிடக் காரணம், நம் நாட்டின் பாதுகாப்பு படைகளில் ரஷ்யாவின் ஆதிக்கம் எவ்வளவு இருக்கிறது என்பதை உணர்த்தவே!
இதுமட்டுமன்றி, சர்வதேச அளவில் பல விவகாரங்களில் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பனாகவும் இருக்கிறது ரஷ்யா. இந்த உறவுக்கு, உக்ரைன் பிரச்னையால் சிக்கல் ஏற்படலாம்.
இப்போதுவரை, `உக்ரைனில் அமைதி நிலவவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு’ எனச் சொல்லி, அமெரிக்கா - ரஷ்யா இருவர் பக்கமும் சாயாமல் இருக்கிறது இந்தியா. ஆனால், நாளையே உக்ரைன் பிரச்னை உச்சம் தொடும்பட்சத்தில் ஏதேனும் ஒரு பக்கம் சாய்ந்தாக வேண்டும்; இல்லையெனில், இரண்டு பக்கமும் அதிருப்தியைச் சந்தித்தாக வேண்டும். சரி, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை ஆதரித்தால் என்னாகும்?
2. அமெரிக்காவுடன் உரசல்?
வேறென்ன? அமெரிக்காவுடனான உறவு இன்னும் சிக்கலாகும். ஆசியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் சூழலில், அதை எதிர்கொள்வதற்காக Quad அமைப்பில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது அமெரிக்கா.
தீராத எல்லைப் பிரச்னை, இலங்கை - பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் ஆதிக்கம் என சீனாவால் நெருக்கடியை சந்திக்கும் இந்தியாவுக்கு, அமெரிக்காவின் நட்பு எப்போதும் விட இப்போது மிக அவசியம்.
மேலும், ரஷ்யாவுடன் ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளும் நாடுகளின்மீது CAATSA (Countering America's Adversaries Through Sanctions Act) சட்டத்தின்படி, அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கும். ரஷ்யாவுடனான S-400 ட்ரையம்ப் ஒப்பந்தத்தைக் காரணம்காட்டி இந்தியா மீதும் பொருளாதாரத் தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியாவுடனான நட்புறவு காரணமாக அதைத் தள்ளி வைத்திருக்கிறது. ஒருவேளை உக்ரைன் விவகாரத்தில் இந்தியா, ரஷ்யா பக்கம் சாய்ந்தால், இந்தப் பொருளாதாரத் தடைக்கு வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.
இந்த S-400 ட்ரையம்ப்-ன் முக்கியத்துவம் குறித்த TSL Explainer
3. சீனாவின் ஆதிக்கம்
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை அந்நாட்டின்மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும். இது இயல்பாகவே, ரஷ்யாவை சீனாவை நோக்கித் தள்ளும்.
இப்படி, அமெரிக்காவை பொது எதிரியாகக் கருதும் இரண்டு நாடுகளும் ஒன்றிணைவது அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாட்டுக்கும் பின்னடைவே.
ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் இணைந்து சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த உருவாக்கிய Quad அமைப்பும் நீர்த்துப்போகும். பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் மீது கவனம் செலுத்திவந்த அமெரிக்கா, மீண்டும் ஐரோப்பாவில் ரஷ்யா மீதே அதிக கவனம் செலுத்தவேண்டிய சூழல் உருவாகும்.
மேலும், ஒருவேளை இந்தியா அமெரிக்காவை ஆதரித்தால், அதனால் ஒருபக்கம் ரஷ்யாவின் நட்பையும் இழந்து, மறுபக்கம் சீனா ஆதாயமடையவும் வழி செய்தது போலாகி விடும்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்பட்சத்தில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்கிற 3 காய்களை இந்தியாவை எப்படி நகர்த்துகிறது என்பதைப் பொறுத்தே, உலக அரங்கில் இதன் முடிவும் பின்விளைவுகளும் தெரியவரும்.
இந்த மூன்றுமே இந்தியாவின் தேச பாதுகாப்பு, வர்த்தகம், வெளியுறவுக்கொள்கை என மூன்று முக்கியமான விஷயங்களுடன் தொடர்புடையவை என்பதால், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை உற்றுநோக்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் விவகாரம் குறித்த முதல்கட்ட TSL Explainer
1. சரிந்த பங்குச்சந்தை; உயரும் தங்கம் விலை
உக்ரைனில் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா ஊடுருவலாம் என்ற அமெரிக்காவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நேற்று பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன.
இந்தியாவில் சென்செக்ஸ் 1,747 புள்ளிகளும், நிஃப்டி 532 புள்ளிகளும் சரிந்தன. மொத்தம் 2897 பங்குகளின் விலைகள் நேற்று இறக்கம் கண்டன. நேற்றைய வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை நிலவரம் 👇
Sensex - 56405.84
Nifty - 16842.80
கச்சா எண்ணெய் விலை உயர்வு, எகிறும் பணவீக்கம், வெளியேறும் வெளிநாட்டு முதலீடு எனப் பல நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை முதலீடுகளை பாதுகாப்பான பாண்டுகளை நோக்கியும், தங்கத்தை நோக்கியும் திருப்பிவிடுகின்றனர்.
இதனால், தங்கம் விலையும் உயர்ந்துள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு சவரன் விலை, கடந்த வெள்ளிக்கிழமையன்று 39,808 ரூபாயாக இருந்தது. ஆனால், திடீரென 800 ரூபாய்க்கும் மேல் உயர்ந்து சனிக்கிழமையன்று 40,648 ரூபாயைத் தொட்டது. நேற்று அதிலிருந்து சற்று இறங்கி 40,488 ரூபாய்க்கு வர்த்தகமானது.
2. உயரும் பணவீக்கம்
நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் (CPI) கடந்த ஜனவரி மாதம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த 6% என்ற வரம்பைக் கடந்து, 6.01% ஆக பதிவாகியுள்ளது.
உணவுப் பொருள்களின் தொடர் விலை உயர்வு காரணமாக, இந்தளவுக்கு பதிவாகியுள்ளது. கடந்த மாதமும் விலைவாசி தொடர்ந்து உயர்ந்துவந்ததை இது உணர்த்துகிறது.
இதேபோல தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்களில் நிர்ணயிக்கப்படும் மொத்த விலையின் பணவீக்கம் (WPI) இதே ஜனவரி மாதத்தில் 12.96% ஆக பதிவாகியிருக்கிறது. பொருள்களின் உற்பத்திச் செலவு இன்னும் குறையவில்லை என்பதை இது உணர்த்துகிறது. எனவே இன்னும் விலைவாசி கட்டுக்குள் வரவில்லை.
3. ஹிஜாப் வழக்கு அப்டேட்ஸ்
கர்நாடகாவில் மாணவிகள் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய அனுமதிக்கோரிய வழக்கு நேற்று அம்மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மாணவிகள் தரப்பிலிருந்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மற்றபடி வழக்கில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை. இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
அதேசமயம், கர்நாடகாவின் சில இடங்களில் மாணவிகள் மட்டுமன்றி, ஆசிரியர்களையும் பள்ளி வாயிலிலேயே வைத்து புர்காவை நீக்கச் சொன்ன சம்பவம் சர்ச்சையாகியிருக்கிறது.
வழக்கு விசாரணை முடியும் வரை, மாணவர்கள் மட்டும்தான் எந்தவொரு மத அடையாளம் தொடர்பான உடைகளையும் அணியக்கூடாது என்றது உயர்நீதிமன்றம். ஆனால், இந்த சம்பவங்களில் ஆசிரியர்களையும் புர்காவை நீக்கச்சொல்லி பள்ளி நிர்வாகங்கள், வாயில்களிலேயே வைத்து வற்புறுத்தியது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மட்டுமே கர்நாடகாவில் நேற்று திறக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நாளை முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் திறக்க உத்தரவிட்டுள்ளது கர்நாடகா அரசு. கல்வி நிலையங்களுக்கு அருகில் காவல்துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 1,634 (நேற்று முன்தினம்: 2,296) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 341 (461) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 17 (11) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 34,113 (44,877) 🔻
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றிய உத்தரவை எதிர்த்து தமிழக டி.ஜி.பி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக டி.ஜி.பி-யின் கோரிக்கை குறித்து பதிலளிக்குமாறு மாணவியின் பெற்றோர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 3 வாரங்களுக்குள் அவர்கள் இதற்கு விளக்கமளிக்கவேண்டும். அதேசமயம், சி.பி.ஐ இந்த வழக்கு விசாரணையைத் தொடர தடையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
நவம்பர் 2021 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயலாற்றிவந்த முனீஷ்வர்நாத் பண்டாரி, நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். இந்தாண்டு செப்டம்பருடன் இவரின் பதவிக்காலம் முடிகிறது.
தேசப் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகக் கூறி 54 செயலிகளுக்கு நேற்று தடைவிதித்துள்ளது மத்திய அரசு. சீனாவுடன் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலையடுத்து கடந்தாண்டு ஜூன் மாதம் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளையும், பின்னர் செப்டம்பரில் 118 செயலிகளையும் தேசப்பாதுகாப்பை காரணம் காட்டி தடைசெய்திருந்தது இந்தியா. தற்போது மீண்டும் அதேபோல 54 செயலிகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
இந்த வருடத்தின் முதல் மிஷனை வெற்றிகரமாக முடித்திருக்கிறது இஸ்ரோ. EOS - 04, the INS-2TD, INSPIREsat-1 ஆகிய 3 செயற்கைக்கோள்களை நேற்று வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியிருக்கிறது. அனைத்து காலநிலைகளிலும் பூமியின் தெளிவான படங்களை எடுத்தல், புவியின் பல்வேறு பரப்புகளின் வெப்பநிலையைக் கணக்கிடுதல் ஆகிய பணிகளுக்காக இந்த செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
ஏன் இந்தமுறை ரெய்னாவை ஏலத்தில் எடுக்கவில்லை என்பதற்கு விடைசொல்லியிருக்கிறார் CSK-வின் CEO காசி விஸ்வநாதன். ``கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பாக விளையாடிவந்த வீரர் ரெய்னா. ஆனால், ஒரு வீரரை டீமில் எடுப்பதற்கு ஃபார்ம் மிக முக்கியம். நாம் எது மாதிரியான டீமை கட்டமைக்கிறோம் என்பதும் முக்கியம். அதைவைத்துப் பார்க்கையில் தற்போதைய அணிக்கு ரெய்னா சரியாகப் பொருந்தமாட்டார். அதனால்தான் அவரை எடுக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.
துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த இல்கர் ஐசியை, ஏர் இந்தியாவின் புதிய CEO-வாக நியமித்திருக்கிறது டாடா குழுமம்.
இந்தியாவில் உள்நாட்டு செமிகண்டக்டர் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக 76,000 கோடி மதிப்பீட்டில் PLI திட்டத்தை அறிவித்திருந்தது மத்திய அரசு. தற்போது அந்த திட்டத்தின்கீழ் முதல் நிறுவனமாக வேதாந்தா குழுமம், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தோடு சேர்ந்து இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது. தமிழகத்தில் செமிகண்டக்டர் உற்பத்தியைத் தொடங்கச்சொல்லி தமிழக அரசும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் உள்பட பல நிறுவனங்களுக்கு இதற்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
On This Day, Feb 15
- உலகப் புகழ்பெற்ற வானியல் அறிஞரான கலிலியோ கலிலி பிறந்தநாள், 1564
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️