🗳 ஏன் உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா இல்லை?
Today Edition Highlights: காங்கிரஸில் விழுந்த இன்னொரு விக்கெட் | தடுப்பூசி குறித்து ஜோகோவிச் சொன்னது என்ன? | கனடாவில் அமலான நெருக்கடி நிலை | பின்வாங்கியதா ரஷ்யா? | Reading Time: ⏱ 4 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
வரும் பிப்ரவரி 19-ம் தேதி நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் நோட்டா (NOTA) ஆப்ஷனும், வாக்களித்ததை சரிபார்க்க உதவும் விவிபாட் இயந்திரங்களும் இருக்காது எனத் தெரிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்.
முதன்முதலாக தமிழகத்தில் 2013-ம் ஆண்டு ஏற்காடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில்தான் நோட்டா அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் அனைத்து தேர்தல்களிலும், வாக்காளர்கள் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனில் நோட்டாவை தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ``இந்த விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல்களுக்கு (சட்டமன்ற / நாடாளுமன்ற) மட்டுமே பொருந்தும். உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துபவை மாநில தேர்தல் ஆணையங்களே. எனவே உள்ளாட்சித் தேர்தல்களிலும் நோட்டாவைக் கொண்டுவர வேண்டும் என்ற கட்டாயமில்லை.” என்கின்றனர் தேர்தல் ஆணைய அதிகாரிகள்.
``ஒருவேளை உள்ளாட்சித் தேர்தல்களிலும் நோட்டாவைக் கொண்டுவர வேண்டுமெனில், தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளில், மாநில அரசின் ஒப்புதலுடன் திருத்தம் கொண்டுவரவேண்டும். இப்போது ஏற்கெனவே உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடுவின்படி மிகக்குறுகிய காலத்தில் தேர்தலை நடத்துவதால், இந்த தேர்தலில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை. இந்த தேர்தல் முடிந்துதான் அதுபற்றி பரிசீலிக்கவேண்டும்” எனவும் `தி இந்து’ பத்திரிகையிடம் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள்.
இந்தக் காரணம் சரிதானா?
நோட்டாவை இடம்பெறச் செய்யவேண்டும் என்பது, மாநில தேர்தல் ஆணையத்திற்கு கட்டாயம் இல்லைதான். அதேபோல அதை இடம்பெறச் செய்ய தடையும் இல்லை. மாநில அரசின் உதவியில்லாமல், தேர்தல் ஆணையமேகூட அதைச் செய்யலாம் என்கின்றது மகாராஷ்டிர மாநில தேர்தல் ஆணையம்.
அப்படித்தான் மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தலில் நோட்டா இடம்பெற்றிருக்கிறது.
ஆனால், தமிழக தேர்தல் ஆணையம் தயங்குகிறது. தற்போது நோட்டா இல்லாததால், யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லையெனில், 49-O போல தனி படிவம் ஒன்றை வாங்கி, அவர்கள் எதிர்ப்பை பதிவுசெய்யவேண்டும். ஆனால், இது வாக்காளரின் ரகசியத்தை பாதிக்கும் செயல் என விமர்சிக்கப்படுகிறது.
மிகவும் குறைவான வாக்காளர்கள் கொண்ட ஊராட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளில், நோட்டா வாக்குகள் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்ற அச்சமும்கூட, மாநில தேர்தல் ஆணையம் தயங்குவதற்கு ஒரு காரணம்.
1. படைகளைப் பின்வாங்கிய ரஷ்யா?
``பிப்ரவரி 16-ம் தேதி ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கப்போகிறது” எனச் சொல்லி உலகம் முழுவதையும் நேற்று அலெர்ட் செய்திருந்தார் உக்ரைன் அதிபர். ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், ரஷ்ய - உக்ரைன் எல்லையும் பயிற்சி பெற்றுக்கொண்டிருந்த சில படைகள், திரும்பப்பெறப்பட்டுள்ளன எனத் தெரிவித்திருக்கிறது ரஷ்யா.
கடந்த இரண்டு நாள்களாக பதற்றம் அதிகரித்துக்கொண்டே வந்தநிலையில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு கொஞ்சம் பதற்றத்தை தணித்திருக்கிறது. இருப்பினும், ``ரஷ்யாவின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம்; ஆனால், அதுகுறித்து இன்னும் உறுதியான ஆதாரங்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை” எனச் சொல்லியிருக்கிறார் ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்யா தாக்குதல் நடத்த இன்னும் நிறைய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்திருக்கிறார்.
ஏன் மோதத் தயாராகிறது ரஷ்யா? மேலைநாடுகளின் கூட்டமைப்பான NATO-வில் அண்டைநாடான உக்ரைன் சேரவே கூடாது என்பதுதான் ரஷ்யாவின் முக்கிய கோரிக்கை. ஆனால், இந்தக் கோரிக்கையை மேலை நாடுகள் மறுக்கவே, தற்போது மல்லுக்கட்ட தயாராகிவருகிறது.
2. நெருக்கடி நிலையை அமல்படுத்திய கனடா
கட்டாய கோவிட் தடுப்பூசி விதிமுறைகளை எதிர்த்து கனடாவின் தலைநகரில் நூற்றுக்கணகான டிரக் டிரைவர்கள் 2 வாரங்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
போராட்டத்தைக் கைவிடச் சொல்லி, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பலமுறை கேட்டுக்கொண்டும் போராட்டம் கட்டுக்குள் வராதரால், அங்கு நெருக்கடி நிலையை அமல்படுத்தியிருக்கிறார் ஜஸ்டின்.
இதன்மூலம், இனிமேல் போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் வங்கிக்கணக்குகளை முடக்கப்படும். அவர்களின் வாகன இன்ஷூரன்ஸ்களும் ரத்து செய்யப்படும்.
1988-ம் ஆண்டுக்குப் பிறகு இப்படி கனடாவில் நெருக்கடி நிலை சட்டம் அமல்படுத்துவது இதுவே முதல்முறை.
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற விவசாயப் போராட்டங்களின்போது, ``கனடா எப்போதும் அமைதியான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும்” எனத் தெரிவித்திருந்தார் ஜஸ்டின். இதோடு ஒப்பிட்டு, தற்போது கனடாவில் போராட்டங்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 1,325 (நேற்று முன்தினம்: 1,634) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 303 (341) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 14 (17) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 27,409 (34,113) 🔻
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை விசாரிக்க சி.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்திருந்த நிலையில், நேற்று, முதல் தகவல் அறிக்கையைப் (FIR) பதிவு செய்திருக்கிறது சி.பி.ஐ. இதில், பள்ளியின் விடுதிக்காப்பாளர் சகாயமேரி குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து விரைவில் வழக்கில் சி.பி.ஐ விசாரணை தொடங்குகிறது.
அரசு கருவூலத்திலிருந்து ₹139.35 கோடி ரூபாயை கையாடல் செய்ததற்காக, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 5-வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கு இது. இவருக்கான தண்டனை விவரங்கள் வரும் பிப்ரவரி 21-ம் தேதி அறிவிக்கப்படவிருக்கின்றன. இதற்கு முன்பு 4 மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மொத்தம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருந்தார் லாலு. தற்போது, பெயிலில் வெளியே இருக்கிறார்.
நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் Sansad TV-யின் யூடியூப் பக்கம் நேற்று ஹேக் செய்யப்பட்டது. இதையடுத்து யூடியூப் நிறுவனம் சேனலை சஸ்பெண்ட் செய்ய, பின்னர் அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து சேனல் மீட்கப்பட்டது.
முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவருமான அஷ்வனி குமார் நேற்று அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். ஜோதிராதித்யா சிந்தியா, ஜிதின் பிரசாதா, ஆர்.பி.என் சிங் வரிசையில், அண்மைக் காலங்களில் காங்கிரஸிலிருந்து விலகும் முக்கிய தலைவர்களில் 4-வது நபர் அஷ்வனி குமார். ராஜினாமாவுக்குப் பிறகு ஊடகங்களில் பேசிய அவர், ``குறைந்துவரும் காங்கிரஸின் வாக்கு சதவீதம், மக்கள் செல்வாக்கு ஆகியவை அக்கட்சி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதை உணர்த்துகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் கடந்தாண்டு குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டவரும், நடிகருமான தீப் சித்து நேற்று சாலை விபத்தில் பலியானார். நண்பருடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது டிரக்கில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.
எதிர்காலத்தில் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்க கோவிட் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டால், அவற்றிலிருந்து விலக நேரிடலாம் எனத் தெரிவித்திருக்கிறார் ஜோகோவிச். தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத காரணத்தால், அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் வெளியேற்றப்பட்டார் ஜோகோவிச். இந்நிலையில், ``நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல; சிறுவயதில் அவற்றை எடுத்திருக்கிறேன். மேலும், தடுப்பூசிக்கு எதிராகப் பிரசாரம் செய்பவனும் கிடையாது. தனிநபர்களுக்கு அவர்களின் உடல்மீது இருக்கும் உரிமை தொடர்பான விஷயமாகவே இதைப் பார்க்கிறேன். அந்த உரிமையானது, டென்னிஸ் சாம்பியன்ஷிப்களைவிடவும் எனக்கு முக்கியம்” என பி.பி.சி-க்கு பேட்டியளித்திருக்கிறார் ஜோகோவிச்.
- LIC பாலிசிதாரர்கள் கவனத்திற்கு: அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் IPO-வில் பாலிசிதாரர்களுக்கு 10% வரை சலுகை விலையில் ஒதுக்க முடிவு செய்துள்ளது LIC. ஆனால், இதன்கீழ் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், இந்த மாதம் 28-ம் தேதிக்குள் LIC இணையதளத்தில் PAN விவரங்களை அப்டேட் செய்யவேண்டும் எனக் கூறியிருக்கிறது. கூடவே டீமேட் கணக்கும் அவசியம்.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️