💉 உயிரைக் காப்பாற்றியிருக்கின்றனவா தடுப்பூசிகள்?
Today Edition highlights: ஓமிக்ரானின் புதிய திரிபு | ஒயிட்வாஷ் ஆன இந்திய அணி | இன்று விசாரணைக்கு வரும் தஞ்சை மாணவி வழக்கு | தமிழக அரசைக் குற்றம்சாட்டிய நிதின் கட்கரி | Reading Time: ⏱ 6 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
கொரோனாவிற்கு எதிரான தடுப்பு முயற்சிகளில், மக்களின் உயிரைக் காக்க, நமக்கு மலையளவு கைகொடுத்தவை தடுப்பூசிகளே.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் இதுவரை 72% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொண்டுள்ளனர். 94% பேர் குறைந்தது ஒரு டோஸாவது எடுத்துக்கொண்டுள்ளனர். இவற்றின் பலனாகவே, ஓமிக்ரானால் ஏற்பட்டிருக்கும் இந்த மூன்றாவது அலையில், உயிரிழப்புகள் குறைவாக இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளார் கோவிட் கட்டுப்பாட்டுக் குழு தலைவர் வி.கே.பால்.
எதை வைத்து அப்படிச் சொன்னார்?
மத்திய சுகாதாரத்துறைச் செயலாளரான ராஜேஷ் பூஷண் இரண்டு நாள்களுக்கு முன்பு கொடுத்த டேட்டா இது…
இரண்டாவது அலை சமயமான,
👉 ஏப்ரல் 30, 2021 அன்று இந்தியாவில் கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை: 3,86,452,
இறப்புகள்: 3,059, அன்று சிகிச்சையில் இருந்த மொத்த நோயாளிகள்: 31,70,228,
அப்போது இரண்டு டோஸ்களும் எடுத்துக்கொண்ட மக்கள் விகிதம்: 2%
இதுவே இந்த மூன்றாவது அலையில்,
👉 ஜனவரி 20, 2022 அன்று தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை: 3,17,532 ⬇️
இறப்புகள்: 380 ⬇️, சிகிச்சையில் இருக்கும் மொத்த நோயாளிகள்: 19,24,051 ⬇️,
இரண்டு டோஸ்களும் எடுத்துக்கொண்ட மக்கள் விகிதம்: 72% ⬆️
இதனால்தான், ``தடுப்பூசிகள் உயிரிழப்புகளைப் பெருமளவில் குறைத்திருக்கின்றன” என்றார் அவர்.
இதே இரண்டு நாள்களுக்கு தமிழகத்தின் டேட்டா இது 👇
👉 ஏப்ரல் 30, 2021 அன்று கொரோனா பாதிப்பு: 18,692, இறப்பு: 113
👉 ஜனவரி 20, 2022 அன்று கொரோனா பாதிப்பு: 28,561 ⬆️, இறப்பு: 39 ⬇️
தமிழகத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் எடுத்துக்கொண்டவர்களின் விகிதம்: 65%, ஒரு டோஸ் எடுத்துக்கொண்டவர்கள்: 89%
தமிழக டேட்டா சொல்லும் தகவல்
இதேபோல அண்மையில் தமிழக அரசும் ஒரு டேட்டாவைத் தந்திருக்கிறது. அதன்படி, அக்டோபர் 2021 மற்றும் ஜனவரி 16, 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 80% பேர் தடுப்பூசியே எடுத்துக்கொள்ளாதவர்கள் அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே எடுத்துக்கொண்டவர்கள்.
இந்தக் காலகட்டத்தில் பதிவான 1,411 மரணங்களில், 68% பேர் ஒரு டோஸ் தடுப்பூசிகூட எடுத்துக்கொள்ளாதவர்கள். 811 பேர் இணை நோய்களைக் கொண்டிருந்த 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ⚠️ (அதிக ரிஸ்க் உள்ள பிரிவினர்).
இதேபோல ஒரு டோஸ் மட்டுமே எடுத்துக்கொண்டு உயிரிழந்தவர்களிலும் 135 பேர் இணை நோய்களைக் கொண்டிருந்த 50 வயதுக்கு மேற்பட்டவர்களே.
50 வயதுக்கு கீழேயுள்ளவர்களிடையேயும் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றனதான். ஆனால், ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது. எனவே எந்த வயதினராக இருந்தாலும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் இருப்பது ரிஸ்க்தான்!
தகவல் உதவி: The Hindu
ஆனால், இந்த மூன்றாவது அலையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்களே?
காரணம் இதுதான்.
கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கினால் ஏற்படுவது தொற்று (Infection). அந்த வைரஸ் நம் உடலில் உண்டாக்கும் நோய்தான் கோவிட் 19 (Disease). இந்த நோய் தீவிரமானால் ஏற்படுவதுதான் உயிரிழப்பு. இதில் தடுப்பூசிகளின் நோக்கம், இந்த உயிரிழப்பைத் தடுப்பதே.
உதாரணமாக, டெல்டா வேரியன்ட்டுக்கு எதிராக கோவிஷீல்டின் திறன்: தொற்றுக்கு எதிராக 63%, நோய்க்கு எதிராக 85%
அதுவும் ஓமிக்ரான் போல, புதுப்புது வேரியன்ட்கள் வரும்போது, தொற்றிற்கு எதிராக செயலாற்றும் திறன் குறையலாம். இருப்பினும், தடுப்பூசிகள் உயிரிழப்பைத் தடுக்கவல்லவையே.
அதனால்தான், இந்த மூன்றாவது அலையில் நிறைய தொற்றுகள் ஏற்பட்டாலும், உயிரிழப்புகள் குறைவாக இருக்கின்றன. மேலும், டெல்டாவை விட ஓமிக்ரான் ஓரளவு குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துவதும் மற்றொரு காரணம்.
✍️ கூடுதல் தகவல்: மேக்ஸ் ஹெல்த்கேர் குழுமமும், இந்தியா முழுக்க இருக்கும் தன்னுடைய 17 மருத்துவமனைகளில் நடத்திய ஓர் ஆய்வு முடிவை அண்மையில் பகிர்ந்துள்ளது. அதன்படி, அந்த மருத்துவமனைகளில் கடந்த டிசம்பர் முதல் இதுவரை, கொரோனா பாதிப்பால் இறந்தவர்களில் 60% பேர் ஒரு டோஸ் கூட தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள்.
1. ஓமிக்ரான் பற்றி 2 அப்டேட்ஸ்:
``இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றானது சமூகப் பரவல் நிலையை அடைந்துவிட்டது. பல மெட்ரோ நகரங்களில் தற்போது இதுவே அதிகம் ஆதிக்கம் செலுத்தும் வேரியன்ட்டும் கூட.” எனத் தெரிவித்துள்ளது Indian SARS-CoV-2 Genomics Consortium (INSACOG)
மத்திய அரசின் இந்த INSACOG அமைப்புதான், கொரோனா வேரியன்ட்டுகளை ஜீனோம் பகுப்பாய்வு மூலம் ஆராய்ந்து உறுதி செய்து வருகிறது.
இன்னொரு ஓமிக்ரான் வெர்ஷன்?
ஓமிக்ரானின் திரிபான (sub-lineage) BA.2 வைரஸ் உலகில் சுமார் 40 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இப்போதைக்கு இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. இதுபோல, ஒவ்வொரு வைரஸூம் உருமாறும்போது புதிய திரிபுகளை உருவாக்குவது இயல்புதான்.
இவற்றின் பண்புகளில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டு, அது ஓமிக்ரானை விடவும் வீரியமாக இருந்தால்தான் பிரச்னை. இதுகுறித்து பிரிட்டன் உள்பட பல நாட்டு விஞ்ஞானிகளும் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த BA.2 வேரியன்ட் அதிகபட்சமாக பிலிப்பைன்ஸில் 6,411 தொற்றுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 530 தொற்றுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழக அரசு ஒத்துழைப்பதில்லையா?
இரு தினங்களுக்கு முன்னர் ஒரு தனியார் ஊடகத்தின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக அரசின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். ஏன் தென்னிந்தியாவில் அதிகம் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை எனக் கேட்டதற்கு பதிலளித்த அவர்,
``தமிழ்நாட்டில் சில நிர்வாகச் சிக்கல்களால் எங்கள் பணிகளைத் தொடர முடியவில்லை; இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வர் இருவரையும் வலியுறுத்திவிட்டோம். தமிழக அரசு ஒத்துழைத்தால், நாங்கள் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதியளிக்க தயாராகவே இருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டு குறித்து இன்னும் அரசு தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை.
3. இன்று வழக்கு விசாரணை
தஞ்சாவூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
பள்ளி விடுதியில் தங்கிப்படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ம் தேதி அன்று தற்கொலை செய்ய முயன்று, அதனால் உடல்நலன் பாதிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து ஜனவரி 15-ம் தேதி FIR பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஜனவரி 16-ம் தேதி மாஜிஸ்திரேட் முன்னிலையில் அந்த மாணவியின் வாக்கு மூலமும் பெறப்பட்டது.
அதில், அந்தப் பள்ளியின் விடுதிக்காப்பாளர் சகாயமேரி, தன்னை பல்வேறு பணிகளைச் செய்யச்சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும், சரியாக உணவு வழங்காமல் இருந்ததாகவும் அந்த மாணவி குற்றம்சாட்டியிருந்தார். பின்னர் அடுத்த 3 நாள்களில் (ஜனவரி 19) அந்த மாணவி உயிரிழந்தார். சகாயமேரியும் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஜனவரி 20-ம் தேதி சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வெளியானது. அதில் அதே பள்ளியைச் சேர்ந்த ரகேல் மேரி என்பவர், தன் குடும்பத்தினரையும் மதம் மாறச்சொல்லி வற்புறுத்தியதாகவும், அதனால்கூட தான் துன்புறுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அந்த ரகேல் மேரி மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், தமிழகத்தில் மதமாற்ற தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும் எனவும் தமிழக வலதுசாரி அமைப்புகள் மற்றும் பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்துவந்தனர்.
மதமாற்றம் காரணமா?
ஆனால், காவல்துறையினர் மதமாற்றம் காரணமாகத்தான் அந்த மாணவி உயிரிழந்தார் என்பதை மறுத்துவந்தனர். காரணம், அந்த மாணவி அளித்த வாக்குமூலத்தில் அவர் அப்படி குறிப்பிடவில்லை. மாணவி உயிரிழப்பதற்கு முன்புவரை அவரின் பெற்றோரும் அந்தக் குற்றச்சாட்டை வைக்கவில்லை. ஆனால், இறுதியாக ஜனவரி 20-ம் தேதி அந்த வீடியோ வெளியானதும்தான் பிரச்னை அந்தக் கோணத்தில் சென்றது.
இந்நிலையில், காவல்துறையினர் அந்த வீடியோ எடுத்த நபரைத் தேடிவந்தனர். உடற்கூராய்வு முடிந்தபின், மாணவியின் உடலை வாங்கவும் அவரின் பெற்றோர்கள் மறுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பெற்றோர் மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள உத்தரவிட்டது. மேலும், மாணவியின் பெற்றோர் தஞ்சை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகி, வாக்குமூலத்தைப் பதிவுசெய்யவேண்டும் எனவும், அந்த வீடியோ குறித்தும் தற்கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
மாணவியின் வாக்குமூலத்தில் ரகேல் மேரி பெயர் இல்லாததால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்டம் குறித்த விசாரணை இன்று 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 30,580 (நேற்று முன்தினம்: 30,744) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 6,383 (6,452) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 40 (33) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 3,33,533 (3,37,704) 🔻
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் கேடர் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக இதுவரை 10 மாநில முதலமைச்சர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேற்று தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். 💡 இந்தப் பிரச்னை குறித்து விரிவாக அறிந்துகொள்ள → TSL Explainer
தமிழ்நாடு தொல்லியல் துறையின் முதல் இயக்குநரும், தமிழகத்தின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களுக்கு உயிர்கொடுத்தவருமான முனைவர் நாகசாமி நேற்று மறைந்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் 875 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் துணைக்குடியரசுத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தாண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளை மார்ச் 27-ம் தேதி, இந்தியாவிலேயே தொடங்க திட்டமிட்டுள்ளது பி.சி.சி.ஐ. பார்வையாளர்கள் இன்றி, மகாராஷ்டிர மாநிலத்திலேயே 4 மைதானங்களில் மொத்தப் போட்டிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு 2 அணிகள் அதிகம் பங்கேற்பதால், போட்டிகளின் எண்ணிக்கையும் 60-லிருந்து 74 ஆக உயர்கிறது. மெகா ஏலம் பிப்ரவரி 12 -13 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 - 0 என ஒயிட்வாஷ் ஆகியிருக்கிறது இந்திய அணி 😐. நேற்று கேப்டவுனில் நடந்த மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா 10 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 283 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, தென்னாப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- குயின்டைன் டிகாக் - 124 (130) ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
- இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 65 (84), ஷிகர் தவான் 61 (73), தீபக் சஹார் 54 (34) ரன்கள் எடுத்திருந்தனர்.
டெல்லியில் குடியரசு தின நிறைவு விழா (ஜனவரி 29) அன்று, இறுதியாக இசைக்கப்படும் `Abide with me’ பாடல் இந்தாண்டு, பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. 1950-ம் ஆண்டு முதல் குடியரசு தினவிழாவில் இடம்பெறும் இந்தப் பாடல், மகாத்மா காந்திக்கு அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் பிடித்தமான பாடலும்கூட. ஆனால், இந்த ஆண்டு இந்திய இசைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருப்பதால், இந்தப் பாடல் நீக்கப்படுவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஸ்காட்லாந்து கவிஞரால் எழுதப்பட்ட இந்தப் பாடல், உலகளவில் ராணுவங்களில் புகழ்பெற்றது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளையொட்டி, நேற்று டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவரின் ஹோலோகிராம் சிலையைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோலோகிராம் சிலை அமைப்பு, விரைவில் கிரானைட் சிலை தயாரானதும் மாற்றப்பட்டுவிடும்.
அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனான மிராம் டரோனை சீன ராணுவம் கடத்திவிட்டதாக கடந்த வாரம் புகார் தெரிவித்திருந்தார் அம்மாநில பா.ஜ.க எம்.பி தபிர் காவ். இதையடுத்து, அந்தச் சிறுவனைக் கண்டுபிடித்து திருப்பியனுப்பும்படி இந்திய ராணுவம் சீன ராணுவத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று சீனா அந்த சிறுவனைக் கண்டுபிடித்துவிட்டதாகவும், உரிய நெறிமுறைகளின்படி அவர் திருப்பியனுப்பப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது இந்திய ராணுவம். சிறுவனைக் கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை சீனா மறுத்திருந்தது.
நியூசிலாந்தின் பிரதமரான ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு வரும் வாரத்தில் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், குறுக்கே ஓமிக்ரான் வந்து நியூசிலாந்தில் அது வேகமாகப் பரவ, நேற்று முதல் அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடுகள் உண்டு. இதையடுத்து தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்திருக்கிறார் ஜெசிந்தா.
கிரிப்டோகரன்சிகளில் முன்னணி கரன்சியான பிட்காயினின் மதிப்பானது கடந்த நவம்பர் மாதம் $69,000 ஆக உச்சம் தொட்டது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று $40,000-க்கு கீழ் இறங்கி, தற்போது $35,700-த்தில் வந்துநிற்கிறது. கடந்தாண்டு ஜூலைக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய சரிவு இது. அமெரிக்க மத்திய வங்கி சேமிப்பிற்கான வட்டி விகிதங்களை உயர்த்தவிருப்பது, ரஷ்யா கிரிப்டோகரன்சிகளுக்கு தடைவிதிக்க முடிவு செய்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
On This Day - Jan 24
- தேசிய பெண் குழந்தைகள் தினம்
- இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை ஹோமி ஜஹாங்கீர் பாபா நினைவு தினம், 1966
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: