👩🏻💻 பெண்ணின் திருமண வயதை ஏன் உயர்த்துகிறது அரசு?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: யுனெஸ்கோ கௌரவம் பெற்ற மேற்கு வங்கத்தின் துர்கா பூஜை | சர்ச்சைக்கு பதில் சொல்லாத கங்குலி | அரசியலிலிருந்து விலகிய மெட்ரோ மேன் | புதிய பொறுப்பில் ஜெனரல் நரவனே |⏱ Reading Time: 4 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
பெண்ணின் திருமண வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்தும் முடிவுக்கு நேற்று ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. இனி அடுத்து குழந்தை திருமண தடுப்புச்சட்டம், இந்து திருமணச் சட்டம் உள்ளிட்ட திருமணச் சட்டங்களில் இந்தப் புதிய முடிவுக்கு ஏற்ப திருத்தங்களைச் செய்து, அவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால், பெண்ணின் சட்டபூர்வ திருமண வயது 21 ஆக உயர்ந்துவிடும். இது இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு சார்பில், மூத்த அரசியல்வாதியான ஜெயா ஜெட்லி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில்தான் இந்த முடிவுக்கு ஓகே சொல்லியிருக்கிறது மத்திய அமைச்சரவை.
எதற்காக இதைச் செய்கிறது மத்திய அரசு?
2020-ம் ஆண்டு பொது பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன்முதலாக அந்த உரையில் பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிப்பது குறித்து குறிப்பிட்டார். இந்த முடிவுக்கு, அவர் அப்போது முக்கிய காரணங்களாக குறிப்பிட்டது,
பெண்களின் பிள்ளைபெறும் வயதை உயர்த்தி, நாட்டின் பேறுகால மரணங்களை (Maternal mortality rate - MMR) குறைப்பது.
பெண்களிடம் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் ரத்தச்சோகை பிரச்னையைக் குறைப்பது ஆகிய இரண்டும்தான்.
இதுபோக மத்திய அரசுக்கு இன்னும் சில நோக்கங்களும் இருக்கின்றன. அவை,
ஆண் - பெண் இருவருக்கும் சமமான திருமண வயதை நிர்ணயம் செய்து சமத்துவத்தை உறுதி செய்வது
இளம் வயது பிரசவம், பச்சிளம் குழந்தைகளின் மரணங்களை குறைப்பது
பிரசவத்திற்குப் பிந்தைய தாய் மற்றும் சேயின் உடல்நலன் & மனநலனை உறுதிசெய்வது
பெண்கள் உயர்கல்வி முடித்துவிட்டு, அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்வதை உறுதிசெய்வது.
எல்லாமே நல்ல நோக்கங்கள்தானே? ஆனாலும், நிபுணர்கள் பலர் அரசின் இந்த முடிவை எதிர்க்கின்றனர்.
என்ன காரணம்?
அவர்கள் சொல்லும் முக்கியமான காரணம், ``அரசு சொல்லும் இந்த நோக்கங்கள் அனைத்தும் பெண்ணின் திருமண வயதை உயர்த்துவதால் மட்டுமே நடக்காது; மாறாக, இந்த முடிவு, இந்தியாவில் பல்வேறு சமூக காரணிகளால் 21 வயதுக்கு முன்பே திருமணம் செய்யும் பெண்களையும், அவர்களின் பெற்றோர்களையும் குற்றவாளிகளாக மட்டுமே ஆக்கும்” என்பதே. மேலும்,
``ஆண் - பெண் இருவருக்கும் குறைந்தபட்ச திருமண வயது ஒன்று நிர்ணயிக்க காரணமே, அவர்கள் சிறார் பருவத்தில் இருக்கும்போது (18 வயதுக்கு கீழ்) எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மட்டும்தான். அதன்பின்னர் திருமணத்திற்குள் நுழைவது, பிள்ளை பெற்றுக்கொள்வது போன்றவற்றிற்கெல்லாம் நம் நாட்டில் நிறைய சமூக, பொருளாதார சிக்கல்களே முக்கியமான காரணிகளாக இருக்கின்றன.
2019-21 தேசிய குடும்பநல சர்வே (NFHS-5) யின்படி, இந்தியாவில் 20-24 வயது பெண்களில் 23.3% பேர் 18 வயதுக்கு முன்பே திருமணம் ஆனவர்கள்; இது 2015-16-ல் 26.8%. ஏற்கெனவே 18 வயதுக்கு முன்பு திருமணத்தை தடுக்கும் குழந்தை திருமண தடுப்புச்சட்டம் உள்ளிட்டவை இருந்துமே இவை ஏன் நடக்கின்றன? காரணம், சமூக மற்றும் பொருளாதார காரணிகளே.
உதாரணமாக, பெண் கல்விக்கு தடையாக இருப்பவற்றில், ஊரில் போதிய பள்ளி, கல்லூரி வசதிகள் இல்லாதது, கல்வி நிலையங்களுக்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இருப்பது, கல்விக்காக அதிக தொகை செலவிட வேண்டியிருப்பது, அரசின் உதவிகள் கிடைக்காமல் இருப்பது போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இவற்றை சரிசெய்து, ஒரு பெண் உரிய வேலைவாய்ப்பு பெறுவதை அரசு உறுதிசெய்தாலே, அவர் பொருளாதார சுதந்திரம் பெறவும், பெற்றோர்களால் இளம்வயதிலேயே திருமணத்திற்குள் தள்ளப்படுவதை தடுக்கவும் முடியும்.
இதன்மூலம் அவர் இளம்வயதிலேயே பிள்ளை பெற்றுக்கொள்ளும் நிலையும் வராது; அதனால் ஏற்படும் உடல்நல/மனநல பாதிப்புகளும் வராது.
இந்த மாற்றங்களுக்கும் திருமண வயது சட்டங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரிது. இதை அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும், வசதிகளை உறுதிசெய்யும் அரசின் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் மூலம்தான் இட்டு நிரப்பமுடியும்.
மாறாக, இப்படி சட்டங்கள் மூலம் தடுக்க நினைப்பது, பசியை ஒழிக்க நினைத்து, நாட்டில் பசியோடு இருக்கும் அனைவருக்கும் தண்டனை கொடுப்பது போன்றது” என்கின்றனர் நிபுணர்கள்.
என்னதான் தீர்வு?
சில முக்கிய அம்சங்களை அரசு அமைத்த ஜெயா ஜெட்லி தலைமையிலான குழுவே சுட்டிக்காட்டியிருக்கிறது.
பெண்களுக்கு போதிய கல்வி, போக்குவரத்து வசதிகளை உருவாக்கித் தருவது
பள்ளிகளில் பாலியல் கல்வியை சேர்ப்பது
திறன்சார்ந்த பயிற்சிகளை பெண்களுக்கு வழங்கி, சுயதொழில்முனைவோர்களை உருவாக்குவது
நாடு முழுக்க திருமண வயதை உயர்த்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது
``இவற்றையெல்லாம் அரசு செய்துவிட்டுதான், திருமண வயதை உயர்த்தவேண்டும். இவைகளின்றி வெறும் சட்டம் மட்டுமே பயனளிக்காது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தத்தான் இந்த திட்டமா?
மேற்கண்ட நோக்கங்களின்றி, பெண்ணின் திருமண வயதை மத்திய அரசு உயர்த்துவதற்கு முக்கிய காரணமாக பலராலும் நம்பப்படுவது, வேகமாக வளர்ந்துவரும் நாட்டின் மக்கள் தொகை. அதைக் கட்டுப்படுத்தவே அரசு இப்படியொரு முடிவு எடுத்திருக்கிறது என விமர்சனங்களும் எழுந்தன. ஆனால், இதை மறுத்திருக்கிறார் ஜெயா ஜெட்லி. பெண்களின் நலன் சார்ந்து மட்டும்தான் திருமண வயதை உயர்த்த பரிந்துரைத்துள்ளோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
அரசு அடுத்து என்ன செய்யவிருக்கிறது என்பது விரைவில் தெரியும்.
இந்தியா
புதிய பொறுப்பில் ஜெனரல் நரவனே
இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியின் மரணத்தையடுத்து, இன்னும் அந்தப் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், அதற்கடுத்த மூத்த பதவியான, முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக, நேற்று நியமிக்கப்பட்டிருக்கிறார் தற்போதைய ராணுவப்படை தளபதி எம்.எம்.நரவனே.
ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கு அனுமதி
விரைவில் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வரும் நிலையில், தேர்தல் கமிஷன் பரிந்துரைத்த 4 மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை. அதில், ஒன்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது. வாக்காளர் பட்டியலில், ஒருவரே இரண்டு தொகுதிகளிலும் இருப்பது போன்ற பிழைகளைக் களைவதற்கு ஆதார் பயன்படும் என்கிறது தேர்தல் கமிஷன். ``இது கட்டாயமல்ல. வாக்காளர்கள் தாமாக முன்வந்து செய்துகொள்ளக்கூடிய வகையில்தான் இது இருக்கும்” என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
அறிக்கை தாக்கல் செய்த நாடாளுமன்ற கூட்டு குழு
தனிநபர்களின் டேட்டாவை பாதுகாப்பதற்காக, 2019-ம் ஆண்டு Personal Data Protection Bill (PDPB)-ஐ கொண்டுவந்தது மத்திய அரசு. இதன் சாதக, பாதகங்களை ஆய்ந்து அறிக்கை தர இது நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்த குழு 2 ஆண்டுகள் கழித்து, நேற்றுதான் தன் இறுதி அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது. இதையடுத்து இந்த மசோதா விரைவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, சட்டமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள பள்ளியின் சீருடை சர்ச்சை
கேரள மாநிலம் பாலுசேரியில் உள்ள அரசுப்பள்ளியில், 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மாணவிகள் இருபாலருக்கும் பொதுவான பேன்ட் - சர்ட் உடையை சீருடையாக மாற்றி Gender Neutral Uniform-ஐ அறிமுகம் செய்திருக்கிறது கேரள கல்வித்துறை. இதற்கு மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்து வரவேற்புகள் குவிந்தாலும், எம்.எஸ்.எஃப், யூத் லீக் போன்ற முஸ்லிம் மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ``இதுபோன்ற முடிவை அனைவரையும் கலந்தாலோசிக்காமல் எடுத்தது தவறு; மாணவர்கள் மீது இப்படி பிறரின் உடைத்தேர்வை திணிக்கக்கூடாது” என விமர்சித்துள்ளன.
தமிழகம்
வன்னியர் இடஒதுக்கீடு; தொடரும் தடை
வன்னியர்களுக்கு கல்வி & வேலைவாய்ப்பில் 10.5% இடஒதுக்கீடு வழங்கிடும் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், அந்த தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டனர். இதுவரைக்கும் சுமார் 75,000 மாணவர்கள் இந்த சட்டம் மூலம் இடஒதுக்கீடு பெற்றிருக்கின்றனர். ``இதுவரை நடந்த மாணவர் சேர்க்கையை எதுவும் செய்யவேண்டாம் எனவும், இனிமேல் இந்த சட்டத்தின் கீழ் மறு உத்தரவு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படக்கூடாது” என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருக்கின்றனர். இனி அடுத்து, பிப்ரவரி மாதம் 15-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 627
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 12
இன்று மற்றும் அடுத்த இரு நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️👇
ஏற்கெனவே இரண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் வலதுசாரி யூடியூபர் மாரிதாஸ், நேற்று மூன்றாவது வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். கொரோனா பரவலையும் இஸ்லாமிய சமூகத்தினரையும் இணைத்து தவறாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட புகாரில், நெல்லையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அம்மாநில பா.ஜ.க-வில் இணைந்து தேர்தலைச் சந்தித்து தோல்வியடைந்தார் `மெட்ரோமேன்’ ஶ்ரீதரன். நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த இவர், தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 3 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஒதுக்கப்படும். ஆனால், 2021-22-ம் ஆண்டுக்கான நிதி இதுவரையிலும் ஒதுக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், முதல்கட்டமாக 50% தொகையான 352 கோடி ரூபாயை நேற்று விடுவித்திருக்கிறது தமிழக அரசு.
``கேப்டன் பதவியிலிருந்து என்னை விலகச்சொல்லி யாரும் கேட்கவில்லை” என விராட் கோலி பத்திரிகையாளர்களிடம், கங்குலி சொன்னதற்கு நேர்மாறாக சொன்ன பதில் பெரிய சர்ச்சையானது. இதுகுறித்து ஊடகங்கள் கங்குலியிடம் விளக்கம் கேட்டதற்கு, ``நாங்கள் அறிக்கை விடப்போவதுமில்லை; ஊடகங்களை சந்திக்கப்போவதுமில்லை; இந்தப் பிரச்னையை எங்களிடம் விட்டுவிடுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலத்தின் பிரசித்திபெற்ற பண்டிகை கொண்டாட்டமான, துர்கா பூஜையை, தன் கலாசார பாரம்பர்யங்களுக்கான பட்டியலில் இணைத்திருக்கிறது யுனெஸ்கோ.
🔴 BREAKING Durga Puja in Kolkata has just been inscribed on the #IntangibleHeritage list. Congratulations #India 🇮🇳! 👏 ℹ️ich.unesco.org/en/RL/00703 #LivingHeritageஇதன்மூலம் இந்தியாவிலிருந்து யுனெஸ்கோ கௌரவம் பெற்ற கலாசார அம்சங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு முன்பு 2017-ல் கும்பமேளா சேர்க்கப்பட்டிருந்தது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும் 🤗
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: