👀 அரசு உளவு பார்ப்பது மட்டும் சரியா?
In Today's Edition: பிரைவசி விவகாரத்தில் அத்துமீறுகிறதா அரசு? | மம்தாவின் டெல்லி விசிட் | ஒரே இரவில் மேகாலயாவில் எதிர்க்கட்சியான திரிணமுல் காங்கிரஸ் | விண்கல்லை அழிக்க நாசா அனுப்பிய விண்கலன் | Reading Time: 4 Mins ⏳
ஹாய், ஹலோ… வணக்கம் ☕️
📣 Note: இன்றைய The Subject Line (TSL) நியூஸ்லெட்டரைப் படிக்கிறதுக்கு நன்றி; இந்த மெயில் உங்களின் Promotions Tab-ல வந்திருந்தா, அதை அப்படியே Move பண்ணி, Primary Tab-க்கு மாத்திடுங்க. இதன்மூலம் தினமும் TSL-ஐ நீங்க மிஸ் பண்ணாம படிக்கமுடியும். ஒருவேளை இந்த மெயில் உங்க நண்பர்கள் மூலம் வந்திருந்தா, தினமும் உங்க இன்பாக்ஸிற்கு நேரடியாக வர, சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. Happy Reading! 😊
இன்றைய Weather Alert: ⛈
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கனமழை மற்றும் மிக அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களின் விவரம் மற்றும் நாளைய வானிலை முன்னெச்சரிக்கை 👇
The Personal Data Protection Bill - அத்துமீறுகிறதா அரசு?
வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அரசு தாக்கல் செய்யவிருக்கும் கிரிப்டோகரன்சிகளுக்கான ஒழுங்குமுறை மசோதா, நாடு முழுக்க பலத்தை எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. அந்தளவுக்கு இல்லையெனினும், அதே அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு மசோதாவும் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் நம் அனைவரின் வாழ்விலும் தாக்கல் செலுத்தப்போகிற அதன் பெயர், The Personal Data Protection Bill, 2019.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட இந்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அந்தப் பணிகள் அனைத்தும் முடிந்து, தற்போது இறுதி வடிவம் தயார் செய்யப்பட்டு, விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதில் இருக்கும் சில அம்சங்கள் காரணமாக, இந்த மசோதாவில் நிறைய திருத்தங்கள் செய்யவேண்டும் என போர்க்கொடி உயர்த்துகின்றனர் எதிர்க்கட்சியினரும், பிரைவசி ஆர்வலர்களும்.
அப்படி என்ன சர்ச்சை?
அதைப் புரிந்துகொள்வதற்கு முன்னர் இந்த மசோதாவின் வரலாறையும், இதன் முக்கியத்துவத்தையும் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
2017-ம் ஆண்டு, 9 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, பிரைவசி (தனியுரிமை) என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை எனத் தீர்ப்பளித்தது. இந்த உரிமையை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசை ஒரு சட்டத்தையும் இயற்றச் சொன்னது.
இன்றைக்கு பல தனியார் நிறுவனங்களும் (உதாரணம்: ஃபேஸ்புக், பேடிஎம்), பல அரசு அமைப்புகளும் (உதாரணம்: ஆதார், காவல்துறை, LIC) நம்முடைய தரவுகளைச் சேமித்து வைத்து, அவற்றைப் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றன. நமக்கு இவை வழங்கும் சேவைகளும் இதில் அடக்கம். ஆனால்,
- இந்த நிறுவனங்கள் நம் தரவுகளை ஒரு மூன்றாம் நபருக்கு நம் அனுமதியின்றி விற்றாலோ,
- நாம் அனுமதியளித்தவற்றிற்கு தவிர, வேறு எதற்காகவாவது பயன்படுத்தினாலோ
- இந்த தரவுகளை யாரேனும் ஹேக் செய்தாலோ, அவர்களைத் தண்டிக்கும் சட்டவிதிமுறைகள் நம்மிடம் இல்லை. எனவே, அப்படியொரு சட்டத்தை உருவாக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஶ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒரு குழு அமைத்தது அரசு. அந்தக் குழுவும் 2018-ல் ஒரு வரைவு மசோதாவை தாக்கல் செய்தது.
அந்த மசோதாவில் இருந்தது என்ன?
மக்களின் தரவுகளை அரசோ, தனியார் நிறுவனங்களோ கையாள நிறைய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் அதில் இடம்பெற்றிருந்தன.
தேர்தல் ஆணையம் போல, Data Protection Authority (DPA) என்ற தன்னாட்சி அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் மூலம் இந்தப் பிரச்னைகள் கண்காணிக்கப்படும் எனவும் சொன்னது.
கூடவே, தனியார் நிறுவனங்கள் மட்டுமன்றி, அரசுமே உரிய சட்ட வழிமுறைகள் இன்றி, தனிநபர்களின் டேட்டாவைக் கையாளக்கூடாது. உதாரணமாக, உங்களுக்குத் தெரியாமல், உங்கள் தரவுகளை சி.பி.ஐ சேகரிக்க நினைக்கிறது அல்லது பயன்படுத்த நினைக்கிறது எனில் அதற்கு முறையான விதிமுறைகளைப் பின்பற்றி அனுமதி பெறவேண்டும். இல்லையெனில், தனியார் நிறுவனங்கள் போலவே, அரசும் யாருடைய பிரைவசியையும் மீறமுடியாது. மீறினால், கடும் தண்டனைகள் உறுதி.
சரி, இதில் என்ன பிரச்னை?
இந்த வரைவு மசோதா, 2019-ல் சட்டமான போது, நிறைய முக்கியமான அம்சங்களை மாற்றிவிட்டது அரசு. அதில் முக்கியமானவை சில..
Data Protection Authority-யின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனங்களில் அரசின் பங்கை அதிகப்படுத்தியது.
பிரிவு 35-ன் கீழ் மத்திய அரசு நினைத்தால், எந்த அரசு நிறுவனம் / அமைப்புக்கும் இந்த சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கலாம் எனத் திருத்தியது.
காவல்துறை, CBI அரசு அமைப்புகள் குடிமக்களின் அனுமதியின்றி, அவர்களின் தரவுகளைப் பயன்படுத்த நேரும்போது, அவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளைக் குறிப்பிடாமல் விட்டது.
இந்த மூன்றுமே மத்திய அரசுக்கு இந்த சட்டத்தின் மூலம் வானளாவிய அதிகாரம் வழங்குவது போல இருக்கிறது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. அண்மையில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த சில எதிர்க்கட்சித் தலைவர்களும் இதே குற்றச்சாட்டுகளையும், எதிர்ப்பையும் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்திருக்கின்றனர்.
அரசு செய்வதில் என்ன தவறு?
இங்கேதான் பிரைவசி குறித்த முக்கியமான அம்சத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும். பிரைவசி என்பது நம் அடிப்படை உரிமை. அதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை. இதைத்தான் 2017 உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதிப்படுத்தியது. ஆனால், இதை உறுதிசெய்வதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் நிறைய. அவற்றைக் கண்டுபிடித்து மக்களுக்கு உதவத்தான் சட்டமே தவிர, அரசின் கண்காணிப்பை நியாயப்படுத்துவதற்கு அல்ல. எனவே அரசு தவறு செய்தால், அதை தண்டிப்பது யார் என்பதுதான் இங்கே பெரிய கேள்வியே.
ஒருவேளை, அரசு நாட்டின் பாதுகாப்புக்காக நியாயமான கோரிக்கைகளைக் கொண்டிருக்கும்பட்சத்தில், அதை நடைமுறைப்படுத்தவும் விதிமுறைகளை வகுக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போல. மாறாக, பொத்தாம்பொதுவாக சட்டத்திலிருந்து தப்பிக்ககூடாது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான நேரங்களில் காவல்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ, என்.ஐ.ஏ உள்பட எந்த அமைப்பும் மக்களின் தரவுகளை அனுமதியின்றி தாராளமாகப் பார்க்கட்டும்; ஆனால், அவர்களின் நோக்கம் உண்மைதானா என்பதை யார் உறுதி செய்வது? அவர்களை யார் கண்காணிப்பது? தனியார் நிறுவனங்களுக்கு கடும் விதிமுறைகளை விதித்துவிட்டு, அரசு மட்டும் தப்பிக்கப் பார்க்கலாமா? இந்தக்கேள்விகளைத்தான் அரசை நோக்கி கேட்கின்றனர் பிரைவசி ஆர்வலர்கள்.
அதுவும், பெகாசஸ் விவகாரம் போன்ற அரசு கண்காணிப்பு தொடர்பான பிரச்னைகள் அரசியலில் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், மக்களின் உரிமையை நீர்த்துப்போகச் செய்ய அரசு முயற்சி செய்யக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.
இந்தியா
மம்தாவின் டெல்லி விசிட்:
மேற்கு வங்கம் தாண்டியும் திரிணமுல் காங்கிரஸ் கோவா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கிளைபரப்பி வருகிறது. இன்னொருபுறம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒரே கூட்டணியில் திரட்டவும் மம்தா தயாராகி வருகிறார். இந்நிலையில்தான், நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்திருக்கிறார் மம்தா. அரசு தொடர்பான கோரிக்கைகளை மட்டும் வைத்தவர், அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார்.
அதன்பிறகு பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சாமியையும் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்கள், ``ஏன் இந்தமுறை சோனியா காந்தியை சந்திக்கவில்லை?” எனக் கேட்டதற்கு, ``அனைத்துக் கட்சியினரும் பஞ்சாப் தேர்தல் விவகாரங்களில் பரபரப்பாக இருக்கின்றனர். மேலும், சோனியா காந்தியை ஒவ்வொருமுறையும் சந்திக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், உத்தரப்பிரதேசம் போல, திரிணமுல் காங்கிரஸ் இல்லாத மாநிலங்களில், தோழமைக் கட்சிகளுக்காக சட்டமன்றத் தேர்தல்களில் பிரசாரம் செய்ய தான் தயாராக இருப்பதாகவும், இந்த மாத இறுதியில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேகாலயாவிலும் காங்கிரஸூக்கு அடி:
சோனியா காந்தியை மம்தா சந்திக்காமல் போனதற்கு, இதுதான் காரணம் போல. மேகாலயாவில் மொத்தம் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். அவர்களில் முன்னாள் மாநில முதல்வர் முகுல் சங்மா உள்பட 12 பேர் நேற்று இரவோடு இரவாக மேகாலயா திரிணமுல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர். இதனால், அங்கு காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது; திரிணமுல் காங்கிரஸ் அந்த அந்தஸ்தைப் பெறுகிறது. வரும் 2023-ல் அங்கு சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கிறது.
கர்நாடக காங்கிரஸூக்கு மைக்கில் கண்டம்:
ஆபிஸ் வீடியோ காலில் மைக் மியூட்டில் இல்லாதபோது, ஏதேனும் உளறி மாட்டியதுண்டா? அந்தப் பிரச்னை உங்களுக்கு மட்டுமல்ல; கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களுக்கே நிறைய இருக்கிறது. அதுவும் வீடியோ காலில் அல்ல; பொதுவெளியிலேயே மைக்கில் பேசி மாட்டி வருகின்றனர். சில நாள்களுக்கு முன்பு பிரஸ்மீட் ஒன்றில், மைக் ஆனில் இருப்பது தெரியாமல், இரண்டு நிர்வாகிகள், டி.கே.சிவக்குமார் லஞ்சம் வாங்கியது தொடர்பாகப் பேச, அந்த வீடியோ வைரலானது. இதேபோல நேற்று சித்தாராமைய்யா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரும் மைக் ஆனில் இருப்பது தெரியாமல் பேசி மாட்டியிருக்கின்றனர். ஒரு கட்சி நிகழ்ச்சியின்போது இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டிருக்கையில், ``இங்கு இந்திரா காந்தியின் படத்தை மட்டும் வைத்துவிட்டு, சர்தார் வல்லபாய் படேலின் போட்டோவை நாம் வைக்கவில்லையெனில், பா.ஜ.க அதைப் பெரிதாக்கிவிடும்” என சித்தாராமைய்யா பேசியது மைக்கில் கேட்க, அந்த வீடியோவும் அம்மாநில பா.ஜ.க-விற்கு லட்டு போல சிக்கிவிட்டது.
தமிழகம்
வழக்கில் ஜெ.தீபா வெற்றி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்துவந்த போயஸ் கார்டன் இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு முந்தைய அ.தி.மு.க அரசு எடுத்த முடிவை செல்லாது என அறிவித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இதையடுத்து அந்த வீடு, ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளான, ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிடம் வழங்கப்படவிருக்கிறது.
உலகம்
நாசாவின் புது மிஷன்: விண்வெளியில் இருக்கும் டைமார்ஃபஸ் என்னும் விண்கல்லைத் தாக்கி, அதன் சுற்றுவட்டப்பாதையை மாற்றுவதற்காக நேற்று ஒரு விண்கலனை பூமியிலிருந்து ஏவியிருக்கிறது நாசா. 160 மீட்டர் விட்டமுள்ள இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. இருப்பினும் சோதனை முயற்சியாக முதல்முறையாக இதைச் செய்கிறது நாசா. இந்த விண்கலன் - விண்கல் மோதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 1-க்குள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கான மசோதாவுக்கு நேற்று கேபினர் ஒப்புதல் அளித்துள்ளது.
மாநாடு திரைப்படம் இன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
GST வரிவிதிப்பில் இருக்கும் 5% மற்றும் 18% ஆகிய இரண்டையும், 7% மற்றும் 20% சதவீதமாக உயர்த்தலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்பட 13 மாநிலங்களுக்கு (தமிழகம் இல்லை) கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சொல்லி, மத்திய சுகாதாரத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
வங்கி சட்டத்திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதையடுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகிய இரு வங்கிகளும் தனியார் மயமாகவிருக்கின்றன என எண்ணி, இவற்றின் பங்கு விலைகள் உயர்ந்துவருகின்றன. இந்நிலையில், இரண்டு வங்கிகளும், ``தனியார்மயமாவது குறித்து இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை” என இரண்டு வங்கிகளும் செபிக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்தியா - நியூஸிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று காலை 9:30 மணிக்கு கான்பூரில் தொடங்குகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கவிருக்கிறார்.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த லிஸ்ட்ல சேர்க்கணும், இருக்குற விஷயங்கள்ல ஏதாச்சும் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க!
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day! ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடர: