🚀 இஸ்ரோ: சோமநாத் முன் இருக்கும் புதிய சவால்கள் என்ன?
Today Edition Highlights: நாடு திரும்பிய ஜோகோவிச் | யார் அடுத்த டெஸ்ட் கேப்டன்? | இந்தியர்களின் Favourite பாராசிட்டமால் எது? | இந்திய ராணுவத்தின் புதிய சீருடை; என்ன ஸ்பெஷல்? | Reading Time:⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
💡 காய்ச்சல், தலைவலிக்காக இந்தியர்கள் அதிகம்பேர் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் ஒன்று, பாராசிட்டமால். இந்தியாவில் சுமார் 37 வகை பாராசிட்டமால் மாத்திரை பிராண்டுகள் அதிகம் விற்பனையாகின்றன. இவற்றில், இந்தியளவில் எது டாப் தெரியுமா? விடையை TSL-ன் இறுதியில் பார்ப்போம்.
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
இஸ்ரோவின் 10-வது தலைவராக இரு தினங்களுக்கு முன்பு பதவியேற்றுள்ளார், விஞ்ஞானி எஸ்.சோமநாத்.
1985-ம் ஆண்டு முதன்முதலாக VSSC (Vikram Sarabhai Space Centre)-ல் இணைந்த இவர், பி.எஸ்.எல்.வி, GSLV MKIII உள்ளிட்ட இஸ்ரோவின் மிக முக்கியமான ராக்கெட் திட்டங்களில் பங்காற்றிய, ராக்கெட் விஞ்ஞானி. சந்திரயான், ககன்யான் எனக் கடந்த 4 ஆண்டுகளாகவே இஸ்ரோவுக்கு பரபரப்பான காலம். இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளுக்கு இன்னும் கூடுதலான சவால்கள் காத்திருக்கின்றன சோமநாத்திற்கு.
என்னென்ன சவால்கள்?
ககன்யான்
2018-ம் ஆண்டு, சுதந்திர தின உரையின்போது, ``ககன்யான் திட்டம் மூலம் 2022-ல் இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும்!” என அறிவித்தார் பிரதமர் மோடி. அப்போதிருந்தே இஸ்ரோவின் `நம்பர் 1’ அசைன்மென்ட்டானது இந்த மிஷன்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் 2022-ம் ஆண்டுக்குள் இதை சாதிக்கவேண்டும் என்பதுதான் இஸ்ரோவுக்கு பிரதமர் கொடுத்த டார்கெட். 2019 வரை சுமுகமாக போய்க்கொண்டிருந்த இந்தப் பணிகள், பின்னர் கொரோனாவால் தொய்வடைய, தற்போது இந்த ஆண்டு இறுதி அல்லது 2023-ல் முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் 9,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்தியாவின் இந்த முதல் மனித விண்வெளி பரிசோதனையை வெற்றிகரமாக குறிப்பிட்ட கால அளவுக்குள் சாத்தியமாக்குவதும், அதை வெற்றிகரமாக வழிநடத்துவதும்தான் சோமநாத்தின் முதல் சவால்.
சந்திரயான் 3
சந்திரன் குறித்த இந்தியாவின் ஆராய்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகித்தவை சந்திரயான் மற்றும் சந்திரயான் 2 திட்டங்கள். இதில் சந்திரயான் 1, நிலவில் நீர் இருப்பதை முதன்முதலாக உறுதி செய்து, இந்தியாவுக்கு நல்லபெயர் வாங்கித் தந்தது.
ஆனால், நிலவில் ரோவரை இறக்கி ஆராய்ச்சி செய்யும் முயற்சியுடன் களமிறங்கிய சந்திரயான் 2, அந்த முயற்சியில் தோல்வியடைந்தது. அந்தக் குறையை, சந்திரயான் 3 மூலம் சரிசெய்யும் முயற்சியில் இருக்கிறது இஸ்ரோ.
ஏற்கெனவே நிகழ்ந்த தோல்வியால் உருவான அழுத்தம் மற்றும் அதிக எதிர்பார்ப்பு காரணமாக 2023-ல் தொடங்கும் இந்த மிஷன் சோமநாத்தின் இரண்டாவது சவால்.
ஆதித்யா L1
ககன்யான் போலவே, இஸ்ரோ இதுவரை சாதித்திடாத இன்னொரு விஷயம், சூரியனை ஆராயும் சோலார் மிஷன்கள். சூரியனை நோக்கி விண்கலனை செலுத்துவது ஏன் கடினம் என்பதை நாசாவின் பார்க்கர் விண்கலன் குறித்த Explainer-லிலேயே பார்த்தோம் இல்லையா?
கிட்டத்தட்ட அதேபோல, சூரியனின் வளிமண்டலமான கொரோனாவை ஆராய இந்தியா தயார் செய்துவரும் விண்கலன்தான் ஆதித்யா L1. 2021-ல் நடக்கவேண்டிய இந்த மிஷனும் கொரோனா காரணமாக தற்போது இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கிறது.
இதற்கடுத்து இந்தியாவின் இன்னொரு மிகப்பெரிய திட்டம் 2030-ல் இந்தியாவுக்கென சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைப்பது.
இப்படி மிகக்குறைவான காலத்தில் அடுத்தடுத்து சவாலான மிஷன்கள், சோமநாத் முன் இருந்தாலும், இதைவிட இன்னொரு முக்கியமான பொறுப்பும் அவருக்கு இருக்கிறது.
என்ன அது?
இந்திய விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையும், தனியார் முதலீட்டையும் அதிகப்படுத்துவது. இது எதற்காக?
சர்வதேச செய்திகளை படிப்பவர்களாக இருந்தால் Space X, Blue Origin போன்ற நிறுவனங்களின் பெயர்களை கவனிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள். முதலாவது, டெஸ்லா CEO எலான் மஸ்க்குடையது; இரண்டாவது, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸூடையது. இதில் முதலாவதை மட்டும் வைத்து, இஸ்ரோவின் நோக்கத்தைப் புரிந்துகொள்வோம்.
செயற்கைக்கோள்கள் மூலம் சாட்டிலைட் இன்டர்நெட் சேவை, நாசாவின் விண்கலனை ஏவுவதற்கான ராக்கெட்டுகள், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலாப் பயணம் என ஒரு தனியார் நிறுவனமாக இருந்துகொண்டு விண்வெளித்துறையில் பல்வேறு விஷயங்களை சாதிக்கிறது Space X. ஆனால், இந்தியாவில் இப்படியொரு தனியார் நிறுவனம் சாதிப்பது கடினம்.
முதலாவது காரணம், சட்டசிக்கல்கள் / விதிமுறைகள். இரண்டாவது காரணம், விண்வெளியில் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களிடன் இருக்கும் தயக்கம். இந்நிலையில்தான், ``இனி இதெல்லாம் பிரச்னையில்லை; எங்களுடைய விண்வெளி ஏவுதளங்கள், தொழில்நுட்பங்கள், ஆலோசனைகள் என அனைத்தையும் கொண்டு உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம்; நீங்கள் துணிந்து முதலீடு செய்யுங்கள்!” என 2020-ம் ஆண்டு முதல் தனியாருக்கு IN-SPACe, NSIL போன்ற அமைப்புகளையெல்லாம் உருவாக்கி அழைப்பு விடுத்தது மத்திய அரசு.
ஏன் இவ்வளவு மெனக்கெட்டு தனியாரை அழைக்க வேண்டும்?
உலகளவில் விண்வெளித்துறை சார்ந்த சந்தை மதிப்பு $350 பில்லியன். இதில் இந்தியாவின் தற்போதைய பங்கு என்பது வெறும் 3%தான்.
இந்த சந்தையை, Space X போல (உதாரணம் மட்டுமே), பிற தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், புதிய முயற்சிகளும் இன்றி விரிவுபடுத்துவது கடினம் என்பது இஸ்ரோவின் எண்ணம்.
இப்படி பிற வணிக வாய்ப்புகளை இஸ்ரோவிடமிருந்து, தனியார் நிறுவனங்களும் பகிர்ந்துகொண்டால்தான் இதற்கடுத்து விண்வெளி ஆராய்ச்சிகள் (R&D), விண்வெளி அறிவியல், அடுத்தகட்ட தொழில்நுட்பங்களில் மட்டும் இஸ்ரோ கவனம் செலுத்தமுடியும். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் அதுவே மிக முக்கியமும் கூட.
இப்படி, இதுவரை இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்திவந்த இஸ்ரோவுக்கு, இந்திய விண்வெளிச்சந்தையையே மாற்றியமைக்கவேண்டிய பொறுப்பும் இப்போது வந்துசேர்ந்திருக்கிறது. 3 ஆண்டு பதவிக்காலத்திற்குப் பிறகு, சோமநாத்தின் பங்களிப்பு இவற்றையும் சேர்த்துதான் மதிப்பிடப்படும்; இதற்கு முன் இருந்தவர்களுக்கு இல்லாத சவால் இது!
1. விடுவிக்கப்பட்ட பிராங்கோ; அடுத்து என்ன?
கேரள சீரோ மலபார் சபையின் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். இவர் 2014 - 2016-க்கு இடைப்பட்ட காலத்தில் தன்னை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கோட்டயம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர் ஜூன், 2018-ல் கேரள காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
4 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிமன்றம், பிராங்கோவை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.
``வழக்கில் அரசு தரப்பிலிருந்து தாக்கல் செய்த சாட்சியங்களும், குற்றம் சாட்டியவரின் சாட்சியங்களும், பிராங்கோவை குற்றவாளி என அறிவிக்க போதுமானதாக இல்லை” எனக்கூறியிருக்கிறது நீதிமன்றம்.
சர்ச்சின் நெருக்கடி, பிராங்கோ தரப்பிலிருந்து வந்த அச்சுறுத்தல்கள் எனப் பல சவால்களைத் தாண்டிதான், போராடி இந்த வழக்கை நடத்திவந்தார் அந்த கன்னியாஸ்திரீ. தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறார்.
2. தொடரிலிருந்து வெளியேறிய ஜோகோவிச்
இன்று தொடங்கும் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் விளையாடுவாரா, மாட்டாரா என நிலவி வந்த குழப்பம் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் ஆஸ்திரேலியா வந்த அவரின் விசாவை கடந்த வெள்ளிக்கிழமை 2-வது முறையாக ரத்து செய்தது ஆஸ்திரேலியா.
இதை எதிர்த்து ஜோகோவிச் நீதிமன்றம் செல்ல, இதற்கு முன்பு போல, இந்தமுறை தீர்ப்பு அவருக்கு சாதகமாக அமையவில்லை. முதல் முறை, ஆஸ்திரேலிய விதிமுறைகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, அவரின் விசாவை அனுமதித்த நீதிமன்றம், இந்தமுறை ஆஸ்திரேலிய அரசு பொதுநலன் கருதி எடுத்த இம்முடிவை ரத்து செய்யவில்லை.
இந்த தீர்ப்பு கடும் ஏமாற்றமளிப்பதாகக் கூறிய ஜோகோவிச், நேற்றே ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறினார். ஆஸ்திரேலிய அரசு சிறப்பு விதிகளின் அனுமதிக்காவிடில், இனி அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஜோகோவிச் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையமுடியாது.
3. புதிய ராணுவ உடையில் என்ன ஸ்பெஷல்?
2008-க்குப் பிறகு தற்போது மீண்டும் வீரர்களின் போர்க்கால சீருடையை மாற்றியிருக்கிறது இந்திய ராணுவம்.
National Institute of Fashion Technology-யைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த சீருடையின் சிறப்பம்சம், இதன் உறுதித்தன்மைதான். இப்போது இருக்கும் சீருடையைவிடவும், இந்தப் புதிய உடை 15% எடை குறைவாகவும், 23% வலிமையாகவும் இருக்குமாம். மேலும், இப்போதைய உடையைப் போல, Tuck In செய்யவேண்டியதில்லை.
முதல்முறையாக பெண் வீரர்களுக்கேற்ப, வடிவமைப்பில் மாறுதல் செய்யப்பட்ட சீருடைகளும் இந்த முறை வடிவமைக்கப்பட்டுள்ளன.
Bar Code மற்றும் QR Code மூலமாக அடையாளம் குறிக்கப்படும் இந்த ராணுவ சீருடைகள், வெளிச்சந்தைகளில் கிடைக்காது. 12 லட்சம் வீரர்களுக்கும் ராணுவமே வழங்கவிருக்கிறது.
4. விராட் கோலி இடத்திற்கு அடுத்து யார்?
யாரும் எதிர்பாராவிதமாக, நேற்று முன்தினம் டெஸ்ட் கேப்டன்ஷிப்பிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் விராட் கோலி. உலகக்கோப்பைக்குப் பிறகு T20 கேப்டன்ஷிப்பை துறந்தது, ODI கேப்டன்ஷிப்பிலிருந்து BCCI-யால் நீக்கப்பட்டது என இதற்கு முந்தைய நிகழ்வுகளை வைத்து பார்க்கையில், கோலியின் இந்த முடிவும் அதிர்ச்சியான ஒன்றுதான்.
அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பதுதான் இப்போது பலரின் கேள்வி. எப்படியும் பி.சி.சி.ஐ இதற்கு இன்றோ, நாளையோ விடைசொல்லப்போவதில்லை. அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவிருக்கும் ஶ்ரீலங்கா தொடருக்கு அணியை அறிவிக்கும்போதுதான் தெரியவரும்.
இருப்பினும், கே.எல்.ராகுல்தான் அந்தப் போட்டியில் முன்னணியில் இருக்கிறார் என்கின்றன செய்திகள். ரோஹித், ராகுல் இருவருமே பி.சி.சி.ஐ-க்கு ஓகே என்றாலும், ரோஹித் அடிக்கடி காயத்தால் அவதிப்படுவது பி.சி.சி.ஐ-யை யோசிக்க வைக்கிறது.
மேலும், ரோஹித்தின் டாஸ்க்காக 2022 T20, 2023 ODI World Cup இரண்டை மட்டுமே கொடுப்பது அவருக்கு அணிக்கும் நல்லது எனவும் சில பி.சி.சி.ஐ நிர்வாகிகள் நினைக்கின்றனர்.
இவர்கள் இருவரையும் தாண்டி, அஷ்வின் போன்ற அனுபவம் வாய்ந்த பவுலருக்கும் கேப்டன்ஷிப்பைத் தரலாம்தான். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவே!
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 23,975 (நேற்று முன்தினம்: 23,989) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 8,987 (8,978) 🔺
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 22 (11)🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,71,202 (2,68,833) 🔺
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️ 👇
ஏற்கெனவே 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் வரை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா காரணமாக 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதிதான் முதல்முறையாக இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும்பணிகள் தொடங்கப்பட்டது. அதன்படி, நேற்றுடன் இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும்பணி ஓராண்டை நிறைவுசெய்துள்ளது. நேற்றைய நிலவரப்படி இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்களில் 69.8% பேர் இரண்டு டோஸ்களையும், 93% பேர் குறைந்தது ஒரு டோஸேனும் எடுத்துக்கொண்டுள்ளனர்.
8 பேர் வரை பயணிக்கக்கூடிய கார்களில், பயணிகளின் பாதுகாப்பு கருதி குறைந்தது 6 ஏர் பேக்குகளாவது இருக்கவேண்டும் என விதிமுறைகளில் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம்.
ஆஷஸ் தொடரின் 5-வது போட்டியில் இங்கிலாந்து 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருக்கிறது.
- பட்ஜெட் கூட்டத்தொடர் 2022:
இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதல் கட்டம் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11 வரையிலும், பின்னர் இரண்டாம் கட்டம் மார்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரையிலும் நடைபெறவிருக்கிறது. 2022-33-க்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கலாகிறது.
- தேசிய ஸ்டார்ட் அப் தினம்
இந்தியாவில் சுயதொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்அப் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இனி ஆண்டுதோறும் ஜனவரி 16-ம் தேதி தேசிய ஸ்டார்ட்அப் தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
- ஜனவரி 22 மெகா தடுப்பூசி முகாம்
பொங்கல் விடுமுறையையொட்டி, இந்த வாரம் நடக்கவிருந்த மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை. இதையடுத்து வரும் ஜனவரி 22-ம் தேதி (சனிக்கிழமை) அடுத்த மெகா தடுப்பூசி முகாம் தமிழகமெங்கும் நடைபெறவிருக்கிறது. இன்னும் இரண்டு டோஸ்களும் எடுக்காதவர்களா இருந்தா இந்த முகாமைப் பயன்படுத்திக்கோங்க!
On This Day - Jan 17, 2022
- விஞ்ஞானியும், அமெரிக்காவின் அரசியல் அறிஞருமான பெஞ்சமின் ஃபிராங்க்ளின் பிறந்தநாள், 1706
- நடிகரும், தமிழகத்தின் 3 முறை முதல்வருமான எம்.ஜி.ஆர் பிறந்தநாள், 1917
- உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி பிறந்தநாள், 1942
- குவைத் மீதான ஆதிக்கத்திற்கு எதிராக, ஈராக் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வளைகுடா போரை தொடங்கிய தினம், 1991
💡 Winner is Calpol & Dolo 650
- IQVIA நிறுவனத்தின் தரவுகளின்படி, மார்ச் 2020 முதல் கடந்த டிசம்பர் 2021 வரைக்கும், சுமார் 567 கோடி ரூபாய் அளவுக்கு Dolo 650 மாத்திரைகள் (Micro Labs நிறுவனத்துடையது) இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன. இதே காலகட்டத்தில் Calpol (GSK Pharmaceuticals) மாத்திரைகள் சுமார் 714 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன.
- அதிகபட்சமாக, கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்த கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் Dolo 650 மற்றும் Calpol இரண்டின் விற்பனையும் உச்சத்தை (93.1 கோடி, 129.1 கோடி) தொட்டிருக்கின்றன.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: