🚨 தீவிரமான போராட்டங்கள்; கர்நாடகாவில் என்ன நடக்கிறது?
Today Edition Highlights: காஷ்மீர் தின சர்ச்சை; மன்னிப்பு கேட்ட நிறுவனங்கள் | சென்னையிலிருந்து குஜராத் செல்லும் 1000 முதலைகள் | முகேஷ் அம்பானியை முந்திய அதானி | Reading time: ⏱ 4 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
முதலில் உடுப்பி மாவட்டத்தில் மட்டுமே தொடங்கிய, இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டங்கள், நேற்று கர்நாடாகவின் பல மாவட்டங்களுக்கும் பரவியுள்ளன. இந்தப் போராட்டங்களில் தங்கள் சக மாணவர்களுக்கு எதிராக, சக மாணவர்களே மதவெறியுடன் போராடி வருவதும், அவர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை நேற்று முன்தினம்தான் TSL-ல் பார்த்தோம். அதன்பிறகு தற்போது இந்தப் பிரச்னை எங்கு வந்து நிற்கிறது என்பதையும், நேற்று நடந்த முக்கியமான சம்பவங்களையும் இன்றைய TSL-ல் காணலாம்.
நேற்றைய தினம் நாடு முழுக்க அதிர்வுகளை ஏற்படுத்தின இரண்டு வீடியோக்கள். ஒன்று, மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி புர்கா அணிந்துவந்தபோது, அவரைக் குறிவைத்து காவித்துண்டு அணிந்துவந்த மாணவர்கள் சிலர்`ஜெய்ஶ்ரீ ராம்’ எனக் கூச்சலிட்ட வீடியோ.
இந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தவர் முஸ்கான் என்னும் மாணவி. இந்த சம்பவம் குறித்து அவர் குறிப்பிடுகையில், ``அவர்கள் `ஜெய் ஶ்ரீராம்’ என முழக்கமிட்டார்கள்; அதனால் நானும் `அல்லாஹூ அக்பர்’ என முழக்கமிட்டேன். நான் எப்போதும் ஹிஜாப் அணிவேன். கல்லூரி முதல்வர் எதுவும் சொன்னதில்லை. கடந்த வாரத்திலிருந்துதான் இதற்காக பிரச்னை செய்கிறார்கள். எனக்கு படிப்புதான் முக்கியம். அவர்கள் அதைத்தான் கெடுக்கிறார்கள். அந்த சம்பவத்திற்குப் பிறகு நிறைய பேர் ஆதரவளித்திருப்பதால் நான் தைரியமாக இருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இன்னொரு வீடியோ, உடுப்பி எம்.ஜி.எம் கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை நோக்கி, காவித்துண்டுகள் அணிந்த மாணவர்கள் ஓடிவந்து கோஷமிடுவது. தேர்வறைக்குள் அனுமதிப்பது தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றபோது, ஓரிடத்தில் இரு தரப்பினரும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டனர். அப்போது அங்கு பதற்றம் உருவானது.
இதேபோல இந்து அமைப்பு ஒன்று, மாணவர்களுக்கு காவி டர்பன் மற்றும் காவித்துண்டு வழங்கியதாக் சொல்லப்படும் வீடியோக்களும் வெளியாகின.
இவற்றிற்கிடையில் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேசிய கொடியேற்றும் கம்பத்தில் போராடிய மாணவர்கள் சிலர் காவிக்கொடியை ஏற்ற, அது பெரும் பிரச்னையானது. பதற்றத்தை தணிக்க காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
இதேபோலா தாவன்கரே, பாகல்கோட், ஹசன், ஹூபள்ளி, சித்ரதுர்கா எனப் பல மாவட்டங்களிலும், காவித்துண்டுகளுடன் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். சில இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நடைபெற்றன.
இதையடுத்து இன்று முதல் அடுத்த 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருக்கிறார் கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை.
இவையனைத்தும் ஒருபக்கம் இருக்க, கடந்த வாரம் பள்ளிகளில் ஹிஜாப் அணிவது தொடர்பாக மாணவிகள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதன்மீதான விசாரணை நேற்று தொடங்கியது.
என்ன சொன்னது நீதிமன்றம்?
``நான் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்தவன்; அரசியலமைப்புச் சட்டம்தான் எனக்கு பகவத் கீதை; எனவே என் உணர்வுகளை ஒதுக்கிவைத்துவிட்டுத்தான் இந்த வழக்கை விசாரிப்பேன்” என்று கூறியே வழக்கு விசாரணையைத் தொடங்கியிருந்தார் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தீக்ஷித்.
இந்தப் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, ``தினந்தோறும் மாணவிகள் சாலைகளில் நின்று போராடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நம்மை சர்வதேச சமூகம் உற்று கவனிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.
மாணவிகள் தரப்பில், ``கல்வியாண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் அதுவரையிலாவது ஹிஜாப் அணிய அனுமதிக்கவேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசு தரப்பிலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான ஆடையை அணியக்கூடாது எனவும், ஆடைக்கட்டுப்பாடுகளில் பிரச்னை இருந்தால், அதை கல்லூரி வளர்ச்சி குழுக்களிடம்தான் முறையிடவேண்டும் எனவும் வாதிடப்பட்டது. ஆனால், மாணவிகள் பொதுவெளியில் ஹிஜாப் அணியும்போது ஏற்படாத பிரச்னை, ஏன் பள்ளி வளாகங்களில் மட்டும் ஏற்படுகிறது என மாணவிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்தையும் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, வழக்கு விசாரணை இரண்டாவது நாளாக இன்றும் மதியம் 2:30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவித்திருக்கிறார். அதுவரைக்கும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படியும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இன்று முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதால், மாணவர்களிடையே இன்று கொஞ்சம் பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஹிஜாப்பை காரணம் காட்டி மாணவிகளின் கல்வி பறிபோவது குறித்து நேற்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் மலாலா.
1. மீண்டும் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா
தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பிய நீட் விலக்கு மசோதா, நேற்று மீண்டும் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மீதான விவாதத்தில் நேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``இந்த மசோதாவை நிராகரிக்க ஆளுநர் சொன்ன காரணங்கள் சரியாக இல்லை. பல்வேறு நபர்களிடம் கருத்து கேட்டபிறகுதான் ஏ.கே.ராஜன் கமிட்டியின் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் என்பவர், அமைச்சரவைக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ள வேண்டும். தற்போது மீண்டும் நிறைவேற்றப்படும் மசோதாவை தாமதிக்காமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்புவார் என்று நம்புகிறேன்.” எனப் பேசினார்.
இதையடுத்து மசோதாவும் நேற்று மாலையே ராஜ் பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்போது மீண்டும் ஆளுநர் முடிவெடுக்க காலம் தாழ்த்துவாரா அல்லது உடனடியாக குடியரசுத் தலைவருக்கு மசோதாவை அனுப்பிவைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சபாநாயருக்கு திருப்பி அனுப்பப்பட்ட மசோதா ஒன்று, எவ்வித மாற்றங்களுமின்றி, மீண்டும் அப்படியே நிறைவேற்றப்படுவது தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை.
2. கண்டனம் தெரிவித்த இந்தியா; மன்னிப்பு கேட்ட நிறுவனங்கள்
பாகிஸ்தானில் இயங்கிவரும் பெருநிறுவனங்களான ஹூண்டாய், சுஸூகி, KFC, கியா, பீட்ஸா ஹட் ஆகியவை அந்நாட்டின் காஷ்மீர் ஒருமைப்பாட்டு தினத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தன.
``காஷ்மீர் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் இந்த தினத்திற்கு, எப்படி இந்நிறுவனங்கள் வாழ்த்துச் சொல்லலாம்?” என இந்தச் செயலுக்கு இந்தியாவில் கண்டனங்கள் வலுத்தன.
இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனத்தின் இந்தச் செயல்குறித்து தென் கொரிய நாட்டு தூதரை அழைத்து அதிருப்தி தெரிவித்திருக்கிறது இந்தியா. இதையடுத்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஹூண்டாய் நிறுவனமும் இதுகுறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து சுஸுகி, கியா, KFC என பாகிஸ்தானில் வாழ்த்து தெரிவித்த பல நிறுவனங்களும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மன்னிப்பு கேட்டுள்ளன.
தென்கொரியாவைப் போலவே, மேற்கண்ட நிறுவனங்கள் இயங்கிவரும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாட்டு அதிகாரிகளிடமும் இந்தியா இந்தப் பிரச்னையை எடுத்துச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
3. பா.ஜ.க-வின் உ.பி தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்
வருகிற உத்தரப்பிரதேசம் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டிருக்கிறது பா.ஜ.க. அதில் சில ஹைலைட்ஸ்…
தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகைகளின்போது உஜ்வாலா திட்டத்தின்கீழ் பயன்பெறுபவர்களுக்கு 2 இலவச சிலிண்டர்கள்.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்
விவசாய பாசனத்திற்காக இலவச மின்சாரம்.
ராமரின் வரலாற்றுடன் தொடர்புடைய வேதங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய ராமாயண பல்கலைக்கழகம்.
மதமறுப்புத் திருமணம் செய்வோருக்கு (இதை லவ் ஜிஹாத் குற்றம் என்கிறது பா.ஜ.க) குறைந்தது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம்.
உத்தரப்பிரதேசத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 4,519 (நேற்று முன்தினம்: 5,104) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 792 (839) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 37 (13) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 67,597 (83,876) 🔻
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி தமிழகத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை நேற்று கைது செய்துள்ளது இலங்கை கடற்படை. இந்நிலையில், இப்படி இதுவரை கைது செய்யப்பட்டுள்ள மொத்தம் 29 மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 79 படகுகளையும் விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பனிச்சரிவில் சிக்கினர். 3 நாள்களாக நடந்துவந்த மீட்புப்பணியில் அவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளது நேற்று தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரதமர், குடியரசுத்தலைவர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின்படி, இந்தாண்டு முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் நம்பர் 1 பணக்காராகியிருக்கிறார் கௌதம் அதானி. இவரின் சொத்து மதிப்பு $88.5 பில்லியன். முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு $87.9 பில்லியன். கடந்த ஒரு வருடத்தில் ரிலையன்ஸ் பங்குகளின் விலை சுமார் 18.5% வரை ஏற்றம் கண்டுள்ளது. ஆனால், இதே காலத்தில் அதானி நிறுவனப் பங்குகளின் விலை 170% வரை ஏற்றம் கண்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியின் உருவாக்கத்தில் பாரத் பயோடெக்கிற்கு மட்டுமல்ல; ICMR-க்கும் பங்கு உண்டு. அதன் ஆராய்ச்சிக்காக சுமார் 35 கோடி ரூபாய் செலவழித்திருந்தது ICMR. இந்நிலையில், கோவாக்சினின் ராயல்ட்டியாக மட்டும் கடந்த ஜனவரி மாதம் வரை பாரத் பயோடெக்கிடமிருந்து 171.74 கோடி ரூபாய் பெற்றுள்ளது ICMR.
2022-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்குப் போட்டியிடும் படங்களின் இறுதிப்பட்டியல் நேற்று வெளியானது.
நேற்று காலை Rotten Tomatoes ஊடகத்தின் பத்திரிகையாளர் போஸ்ட் செய்த ஒரு ட்வீட்டால், சூர்யாவின் `ஜெய் பீம்’ திரைப்படமும், சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெறுமோ என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், ஜெய் பீம் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை.
மார்ச் 31, 2020 நிலவரப்படி மெட்ராஸ் முதலைப்பண்ணையில் இருக்கும் முதலைகளின் எண்ணிக்கை 2,000. இவற்றில் 1,820 முதலைகள் சதுப்புநில முதலைகள். இவற்றில் 1,000 முதலைகளை குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பத் தயாராகி வருகிறது மெட்ராஸ் முதலைப்பண்ணை. ஏற்கெனவே 50 முதலைகள் அனுப்பப்பட்டும் விட்டன. காரணம்? ஒரே ஒரு முதலைப்பண்ணையில் 2000 முதலைகள் என்பது பராமரிக்க சிரமமான காரியம். மேலும், கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் காரணமாக இந்தப் பண்ணையில் நிதிப்பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால் உணவளிப்பதிலும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் இந்த முடிவாம். தற்போது முதலைகளை அனுப்புவதற்கான பெட்டிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
- கூகுள் குரோம் பிரவுசர் பயனாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான CERT-IN. அதன்படி 98.0.4758.80-க்கு முந்தைய குரோம் வெர்ஷனைப் பயன்படுத்துபவர்களுக்கு, சில முக்கியமான பாதுகாப்பு குறைபாடுகளால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டாம். மூன்றாம் நபர்கள் நம் அனுமதியின்றி, நம் கணினிகளில் தங்கள் புரோகிராம்களை இயக்க இது வழிவகுக்கிறது. எனவே உடனே குரோமை அப்டேட் செய்ய அறிவுறுத்தியிருக்கிறது CERT-IN. கூகுள் நிறுவனமும் பயனாளர்களை லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் ஆகச் சொல்லியிருக்கிறது.
இதுபோல தினசரி செய்திகள் உங்கள் இன்பாக்ஸிற்கே வரவேண்டுமா? The Subject Line நியூஸ்லெட்டருக்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️