பிரதமர் மோடி ஏன் திரும்ப போனார்?
இன்றைய TSL-ன் பிற ஹைலைட்ஸ்: வரி ஏய்ப்பு செய்த ஷியோமி | வைரல் கேம் Wordle | கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி | ரத்து செய்யப்படும் உ.பி பொதுக்கூட்டங்கள் | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
சோஷியல் மீடியால ஆக்டிவ்வா இருந்தீங்கன்னா, கடந்த சில நாள்களா இது மாதிரியான மஞ்சள் / பச்சை கட்டங்களை அடிக்கடி டைம்லைனில் பார்த்திருப்பீங்க. சில இந்த கேமை விளையாடியிருக்கலாம்; சிலர் பார்த்துட்டு மட்டும் கடந்துபோயிருக்கலாம்.
அண்மையில் வைரலான இந்த கேம் பெயர் Wordle. இந்த கேமிற்குப் பின்னாடியிருக்கும் சுவாரஸ்யமான குட்டி ஸ்டோரியையும், இதோட ரூல்ஸையும் இன்றைய TSL-ன் கடைசியில் பார்ப்போம். அதுக்கு முன்னாடி, இன்றைய முக்கிய அப்டேட்ஸை பார்த்துடுவோம்.
கொரோனா குறித்த புதிய அப்டேட்களும், பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையும் இன்றைய TSL Front Page-ல் இடம்பெறுகின்றன.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 4,862 (நேற்று முன்தினம்: 2,731)
- அதிகபட்சமாக, சென்னையில்: 2481 (1489)
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 9 (9)
இந்தியாவில் நேற்றைய கொரோனா பாதிப்பு: 58,097 (37,379)
- இதுவரை பதிவான ஓமிக்ரான் பாதிப்பு: 2,135 (1,892)
1️⃣ கொரோனா தொடர்பாக 4 முக்கிய அப்டேட்ஸ்
தனிமைப்படுத்துதல் நெறிமுறைகள் திருத்தம்: லேசான கொரோனா பாதிப்புள்ளவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். இதற்கு முன்பு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அதனால் லேசான பாதிப்புகள் மட்டும் இருந்தாலோ அல்லது அறிகுறிகள் இல்லாது இருந்தாலோ, வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் 10 நாள்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என இருந்தது. தற்போது, அது 7 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
முதல் ஓமிக்ரான் மரணம்: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர், ஓமிக்ரான் வேரியன்ட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இந்தியாவில் ஓமிக்ரானால் உயிரிழந்த முதல் நபர் இவர்தான். நேற்றுவரை உலகம் முழுவதும் 108 ஓமிக்ரான் வேரியன்ட் மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
பூஸ்டர் டோஸில் மாற்றமில்லை: வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனாவுக்கு எதிரான 3-வது தடுப்பூசிகள் செலுத்தப்படவிருக்கின்றன. இந்த தடுப்பூசி, ஏற்கெனவே எடுத்துக்கொண்ட தடுப்பூசிகளின் 3-வது டோஸா அல்லது வேறு புதிய தடுப்பூசியின் முதல் டோஸா என சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், 3-வது டோஸ் தடுப்பூசி முந்தைய தடுப்பூசியின் மற்றொரு டோஸாகவே இருக்கும் எனவும், தடுப்பூசிகளை மாற்றிப்போடும் திட்டம் இல்லை எனவும் கோவிட் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் வி.கே.பால் நேற்று தெரிவித்திருக்கிறார்.
எகிறும் கொரோனா: கடந்த 8 நாள்களில் 6.3% அளவுக்கு நாடு முழுக்க கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 29-ம் தேதி 0.79% ஆக இருந்த தொற்று உறுதியாகும் விகிதம் (Positivity Rate), நேற்று 5.03% ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டெல்லி, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் வேகமாக கொரோனா பாதிப்பு உயர்வதாகவும் நேற்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2️⃣ ஏன் நிகழ்ச்சியை ரத்து செய்தார் மோடி?
அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நேற்று பஞ்சாப் சென்றிருந்தார் பிரதமர் மோடி. அப்போது அவரின் சாலைவழிப் பயணம் அங்கு நடைபெற்ற விவசாயிகள் போராட்டங்களால் தடைபட்டு, சாலையிலேயே சுமார் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு, மீண்டும் டெல்லி திரும்பினார். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம், பஞ்சாப் அரசு மீது கடும் அதிருப்தி தெரிவிக்கவே, இந்த விவகாரம் தற்போது அரசியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
என்ன நடந்தது அங்கே?
அரசு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகவும், அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும் பஞ்சாப்பின் பதிண்டா விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார் மோடி. அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலமாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வதுதான் திட்டம். ஆனால், வானிலை மோசமாக இருக்கவே, ஹெலிகாப்டருக்கு பதில், சாலைமார்க்கமாக கார்களில் செல்ல முடிவெடுத்திருக்கின்றனர் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள்.
அப்போது, அவர்கள் எதிர்பாராதவிதமாக, போராடும் விவசாயிகள் குழுவினர், சாலைகளை மறித்து நிற்கவே, அங்கேயே சுமார் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ``இப்படி, ஒரு நாட்டின் பிரதமர் செல்லும் பாதையில், போராட்டக்காரர்களை அனுமதிப்பது அவரின் பாதுகாப்புக்கு அச்சுறுதலான விஷயம்; எப்படி பஞ்சாப் அரசு இந்த விஷயத்தில் கோட்டைவிட்டது?” எனக் கேட்டு, மாநில அரசிடம் இதுதொடர்பான அறிக்கையையும் கேட்டிருக்கிறது உள்துறை அமைச்சகம். பஞ்சாப் அரசு மீது கடும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளது.
ஆனால் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியோ,``பிரதமரின் இந்த தடங்கலுக்கு நாங்கள் வருந்துகிறோம். ஆனால், இதில் பாதுகாப்பு குறைபாடுகளெல்லாம் எதுவுமே இல்லை. அவர் ஹெலிகாப்டர் மூலம் செல்வதுதான் திட்டம்; ஆனால், திடீரென அதை மாற்றியதால் ஏற்பட்ட குழப்பம்தான் இது” என விளக்கம் அளித்திருக்கிறார்.
அந்தப் பகுதியில் போராட்டம் நடத்திய விவசாயிகளும், பிரதமரின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த பா.ஜ.க தொண்டர்களைத் தடுக்கவே சாலையில் போராடியதாகவும், பிரதமர் வருவது தெரிந்திருந்தால் அப்படி செய்திருக்கவே மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இது தேர்தல் நேரமல்லவா? எனவே, பா.ஜ.க தலைவர்கள் அனைவரும் இந்த விஷயத்தை வைத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை டார்கெட் செய்து வருகின்றனர்.
இதற்கு முன்பும், வெவ்வேறு இடங்களில் (உத்தரப்பிரதேசம், டெல்லி) இதேபோல பிரதமரின் கார் அணிவகுப்பானது சில முறை தடைபட்டு, அவர் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அப்போதெல்லாம், `பிரதமரின் உயிருக்கு ஆபத்து’ என எழாத கோஷங்கள், இப்போது பஞ்சாபில் மட்டும் ஏன் எழுகின்றன எனவும் கேள்வி எழுப்புகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள்
ஓமிக்ரான் பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து, தமிழக அரசு இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. அவற்றில் முக்கியமான 5-ஐ மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்…
- வார நாள்களில், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து, வேறு எதற்கும் அனுமதியில்லை. உள்மாநில / வெளிமாநில பேருந்துகள் வழக்கம்போல இயங்கும்.
- வரும் 9-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பின்பற்றப்படும். அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி. பொதுப்போக்குவரத்தும் முற்றிலும் இயங்காது.
- 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை. 10 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள்.
- அரசு மற்றும் தனியார் அமைப்புகளால் நடத்தப்படும் பொங்கல் விழாக்கள் ஒத்திவைக்கப்படுகின்றன.
- அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் அனுமதி இல்லை.
கைதான ராஜேந்திர பாலாஜி
19 நாள்களாக, தமிழக போலீஸாரின் வலையில் சிக்காமல் தப்பித்துக்கொண்டிருந்த, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று கர்நாடகாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியதற்காக 4 பா.ஜ.க நிர்வாகிகளும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடர்
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் உரையை அவையில் வாசித்தார். கொரோனா காரணமாக, இந்தக் கூட்டத்தொடர் இன்னும் 2 நாள்களுக்கு மட்டுமே நடைபெறவிருக்கிறது.
ஆளுநருக்கு எதிராக கொந்தளிக்கும் தி.மு.க
- நேற்று காலை, சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், மாலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகவேண்டும் என டெல்லியில் வைத்து, கடுமையாக விமர்சித்திருக்கிறார் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு.
- தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதால், இப்படி விமர்சித்திருக்கிறார் அவர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக எம்.பி-க்கள் 3 முறை சந்திக்க முயன்றும், அது முடியவில்லை. இதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு 240 ரன்கள் இலக்கு
ஜோஹன்னஸ்பெர்க் டெஸ்ட்டின் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில், 266 ரன்களுடன் 2-வது இன்னிங்ஸை முடித்து, தென்னாப்பிரிக்காவுக்கு 240 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது இந்திய அணி.
- இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 58(78) ரன்களும், புஜாரா 53(86) ரன்களும் எடுத்திருந்தனர்.
- இதையடுத்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 118 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 122 ரன்கள் தேவை.
- இந்த டெஸ்ட்டில் இந்தியா வென்றால், 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் வென்றுவிடும்.
மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய அணைப் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது தி.மு.க. மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு விவகாரம் (நீர்) குறித்து சட்டமியற்ற, நாடாளுமன்றத்திற்கு அதிகாரமில்லை என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்யக்கோரி, அ.தி.மு.க மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துவிட்டது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, கடந்த டிசம்பர் மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களில், 13 பேரை விடுவிக்க இலங்கை மன்னார் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான முதல் ஆன்டி வைரல் மாத்திரையாக மோல்னுபிரவிர் பயன்பாட்டுக்கு அண்மையில் மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், ``அதைப் பயன்படுத்துவதில் தீவிரமான பக்கவிளைவுகளும், ஆபத்துகளும் இருப்பதால், இப்போதைக்கு அதை சிகிச்சைக்கு நாங்கள் பரிந்துரைக்கவில்லை” எனத் தெரிவித்திருக்கிறார் ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா.
ஒருபக்கம் கொரோனா பரவல் விறுவிறுவென அதிகரிப்பதும், இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகள் பிரமாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்துவதும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில் பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது. இந்நிலையில், தேர்தலையொட்டி நடக்கவிருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் நேற்று முதல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. இதேபோல, அகிலேஷ் யாதவும் வரும் 9-ம் தேதி தொடங்கவிருந்த ரத யாத்திரையை ரத்து செய்திருக்கிறார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், நேற்று நடக்கவிருந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
இந்திய அரசுக்கு செலுத்தவேண்டிய 653 கோடி ரூபாய் கலால் வரியை, செலுத்தாமல் விட்டதற்காக சீன மொபைல் நிறுவனமான ஷியோமிக்கு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
On This Day - Jan 06
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக, ட்ர்ம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம் நிகழ்த்திய தினம், 2021
- கவிஞர் கலீர் ஜிப்ரான் பிறந்தநாள், 1883
- இந்திய கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பிறந்தநாள், 1959
- `இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள், 1967
- சர்வதேச வேட்டி தினம்
💡 Wordle கேமின் குட்டி கதை
அமெரிக்காவில் வசிக்கும் மென்பொருள் பொறியாளரான ஜோஷ் வார்டுல், சொல் விளையாட்டுகளில் ஆர்வமுள்ள தன் காதலிக்காக உருவாக்கின ஆன்லைன் கேம்தான் இந்த வோர்டுல். பின்னர் அவர் தன் குடும்ப உறுப்பினர்களிடம் இதைப் பகிர்ந்துகொள்ளவே, அவர்களும் தினமும் கேமுக்கு `ஹார்ட்டின்’ விடத் தொடங்கிவிட்டார்கள். அதற்குப் பிறகுதான், `இந்த கேம்ல சம்திங் ஏதோ ஸ்பெஷலா இருக்கு!’ என ஜோஷ் இணையத்திலும் பகிர, கடந்த சில நாள்களாக இது திடீர் ஹிட்! தற்போது இந்தியாவிலும் ட்ரெண்டாகத் தொடங்கியிருக்கிறது.
ரூல்ஸ்? ரொம்ப ஈசி.
5 எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை www.powerlanguage.co.uk/wordle/ தளத்திற்குச் சென்று கண்டுபிடிக்க வேண்டும். மொத்தம் 6 வாய்ப்புகள்தான்.
ஒவ்வொருமுறையும், நீங்க கணிக்கும் வார்த்தைகளில், எந்த எழுத்துகள் எல்லாம் ஒரிஜினல் வார்த்தையில் இருக்குன்னு, Wordle உங்களுக்கு சொல்லிட்டே (பச்சை நிறம்) வரும். அதை வைத்து அடுத்த வார்த்தையை முயற்சி செய்யவேண்டும்.
எழுத்துகளைக் கணிக்க உதவும் பிற நிறங்கள் 👇
அவ்வளவுதான். 6 முயற்சிகள்ல அந்த வார்த்தையைக் கண்டுபிடிச்சிட்டா, அன்றைய கேமில் நீங்களும் வின்னர்! TSL-ன் ஆரம்பத்தில் பார்த்ததுபோல, நீங்களும் உங்கள் முடிவுகளை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்யலாம் (எழுத்துகள் எதுவும் இன்றி பச்சை மஞ்சள் கட்டங்களில்).
இதில் ஒருநாளைக்கு ஒரு கேம்தான். `ஏன் இன்னும் நிறைய இருக்கலாமே?’-னு கேட்கிறீங்களா? இப்படி ஒரே ஒரு கேம் மட்டும் இருந்தாதான், அது சுவாரஸ்யமா இருக்கும்னு அதுக்கு லாஜிக் சொல்றார் ஜோஷ்.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: