🇺🇦 பதற்றம் கூடும் உக்ரைன் எல்லை | விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு | முத்துவேல் எங்கே? 🗞
Today Edition Highlights: நிதின் கட்கரிக்கு மு.க.ஸ்டாலின் பதில் | சாதித்த ஸ்மிருதி மந்தனா | இலக்கை அடைந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி | Reading Time: ⏱ 4 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
மோத தயாராகும் அமெரிக்கா?
சுமார் 1,00,000 வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்திருப்பதாகவும், எந்நேரம் வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் எனவும் கடந்த டிசம்பர் 14 அன்று TSL-ல் பார்த்தோம். இதோ… 40 நாள்கள் கடந்துவிட்டன. இன்னமும் பதற்றம் தணியவில்லை. மாறாக களச்சூழல் இன்னும் கொதிப்படைந்திருக்கிறது. தற்போது நடப்பது என்ன?
தன்னுடைய அண்டை நாடான உக்ரைன், மேற்குலக நாடுகளுடனான NATO அமைப்பில் இணையக்கூடாது என்பதுதான் புடின், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும் உக்ரைனுக்கும் வைத்த முக்கிய கோரிக்கை. ஆனால், இதை அனைவரும் நிராகரித்துவிட்டனர். புடினும் சண்டைக்குத் தயாராகிவிட்டார்.
புடினின் பிடிவாதத்தைத் தணிக்க, அமெரிக்க அதிபர் மற்றும் அந்நாட்டு அதிகாரிகள், நடத்திய பேச்சுவார்த்தைகளும் பலனளிக்கவில்லை. ``எனவே எந்நேரமும் உக்ரைனைத் தாக்கி, அந்நாட்டு ஆட்சியை ரஷ்யா காப்பாற்றலாம்; அதைத் தடுத்தாக வேண்டும்” எனத் தயாராக இருக்கின்றன அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட மேற்குலக நாடுகள்.
இதற்காக, ரஷ்யாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் போலந்து, ஸ்லோவோகியா, ஹங்கேரி, ரோமானியா உள்ளிட்ட NATO அமைப்பின் உறுப்பு நாடுகளில், உக்ரைனுக்கு ஆதரவாகப் படைகளைக் குவிக்கவும் தொடங்கிவிட்டன. இதில் அண்மைய ஆச்சர்யம் அமெரிக்காவின் மூவ்தான்.
அது என்ன?
ரஷ்யாவுடன் நேரடியாக ராணுவ ரீதியாக மோதினால், அது பெரிய பிரச்னையாகப் போய் முடியும் என நினைத்த அமெரிக்கா ஆரம்பத்தில் புடினை எச்சரிக்க `பொருளாதாரத் தடை’ என்ற ஆப்ஷனை மட்டும்தான் பயன்படுத்தியது. பிற மேலை நாடுகளும் இதைச் சொல்லிதான் எச்சரித்தன. ஆனால், ரஷ்யா இதை அலட்டிக்கொள்ளவில்லை.
இதையடுத்தே, NATO அமைப்பு உக்ரைனுக்கு ஆதரவாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தங்கள் படைகளை அனுப்பியது. தற்போது கூடுதலாக போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் ஆகியவற்றையும் அனுப்பியிருக்கிறது. அமெரிக்கா இன்னும் தன்னுடைய படைகளை அனுப்பவில்லை. ஆனால், தற்போது 5,000 வீரர்கள் வரை அனுப்ப அந்நாடு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒருவேளை போர்ச்சூழல் ஏற்படும் பட்சத்தில் இந்தப் படைகளின் எண்ணிக்கையும் அதிகமாகலாம்.
சரி, இப்போது என்ன நிலவரம்?
``ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்து அங்கு அவர்களுக்கு சாதகமான அரசை நிர்மாணிக்கப்போகிறார்கள்” என பிரிட்டன் அரசு, உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலை வெளியிட்டு ரஷ்யாவை எச்சரித்திருக்கிறது. ஆனால், ரஷ்யா இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கா நேற்று முன்தினம், உக்ரைனிலிருந்து தன் தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினரையும், சில அதிகாரிகளையும் வெளியேறச் சொல்லிவிட்டது. இதேபோல பிரிட்டனும் தன்னுடைய தூதரக அதிகாரிகளில் பாதிப்பேரை வெளியேறச் சொல்லிவிட்டது. இன்னும் ஐரோப்பிய யூனியன் எதுவும் முடிவெடுக்கவில்லை.
இன்னொருபுறம், உக்ரைனுக்கு அண்டை நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கும் NATO படைகள், ரஷ்யா மீது ஒரு கண் வைத்து முழு அலெர்ட்டில் இருக்கின்றன.
இப்படியாக, பேச்சுவார்த்தைகளைக் கடந்து, தற்போது இருதரப்பும் படைகளை வைத்து பலப்பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருக்கின்றன.
முத்துவேல் எங்கே?
தஞ்சை மாணவி உயிரிழந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் வெளியான அந்த மாணவியின் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு, இதுவரை இந்த வழக்கில் 37 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், அதில் 14 பேர் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியது. மேலும், மாணவியின் வீடியோவை ரெக்கார்டு செய்த மொபைல்போன் கிடைத்தால் மட்டுமே அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்யமுடியும் எனவும் தெரிவித்தது.
வீடியோ எடுத்தது யார்?: அந்த வீடியோவை ரெக்கார்டு செய்தது உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முத்துவேல் எனவும், அவர் தற்போது எங்கிருக்கிறார் என்ற தனக்குத் தெரியாது எனவும் மாணவியின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முத்துவேல் இன்று விசாரணை அதிகாரிகளின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கவேண்டும் எனவும், அந்த மொபைல் போனை தடவியல் ஆய்வுக்காக அளிக்கவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த ஆய்வு முடிவை ஜனவரி 28-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
வீடியோவின் முக்கியத்துவம்: மாணவி இறப்பதற்கு முன்பு அளித்த வாக்குமூலங்களில், மதம் மாறச் சொல்லி விடுதிக்காப்பாளர் வலியுறுத்தியது பற்றி இல்லாமல், அவர் செய்த பிறகொடுமைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அவர் இறந்ததற்குப் பின் வெளியான வீடியோவில்தான், மதமாற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தது. எனவே, அந்த வீடியோவின் முழு விவரம் குறித்து அறிவது முக்கியமாகிறது.
1. உயர்ந்த சீன இறக்குமதி
2020-ம் ஆண்டிலிருந்து இந்தியா சீனா இடையேயான அரசியல் உறவு சுமுகமாக இல்லை. ஆனால், வர்த்தக உறவு வரலாறு காணாத அளவு வளர்ந்திருக்கிறது.
2021-ம் ஆண்டில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 97.52 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டிருக்கிறது. இருநாட்டிற்கிடையே நடைபெற்ற மொத்த வர்த்தக மதிப்பு, முதல்முறையாக 125.66 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டிருக்கிறது.
எலெக்ட்ரிக் உதிரிபாகங்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள், வேதி உரங்கள், மருந்துப்பொருள்கள் ஆகியவற்றின் தேவை முன்பு இல்லாத அளவுக்கு கடந்தாண்டு அதிகரித்ததே, இந்தளவு இறக்குமதி உயரக் காரணமாம்.
இந்தியாவின் ஏற்றுமதி?: இதேபோல, இந்தியா சீனாவுக்கு செய்யும் ஏற்றுமதி மதிப்பும் உயர்ந்துள்ளது. ஆனால், சீனாவின் ஏற்றுமதியோடு ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. அந்த மதிப்பு 👇
- 2019 - $17.1 பில்லியன்
- 2020 - $19 பில்லியன்
- 2021 - $24 பில்லியன்
2. சரிந்த பங்குச்சந்தை; என்ன காரணம்?
நேற்றைய நிலவரம் 👇
Nifty 50 - 17149.10 (-2.66%) 🔻
Sensex - 57491.51 (-2.62%) 🔻
உலகளவிலும் சரி; இந்தியாவிலும் சரி; கடந்த 5 நாள்களாகவே பங்குச்சந்தைகள் தொடர்ந்து இறங்குமுகத்தில் இறக்கின்றன. இந்தியாவில் மட்டும் கடந்த 5 நாள்களில் பங்குச்சந்தை முதலீட்டில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் இழந்திருக்கின்றனர்.
அதுவும் குறிப்பாக டெக் நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கியிருக்கின்றன. அண்மையில் IPO வெளியிட்ட பேடிஎம் (-4.61%), ஜொமேட்டோ (-19.62%), நைகா (-13.13%) உள்ளிட்ட பங்குகள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிந்துவருகின்றன. நேற்றும் அவை இறங்குமுகத்தில்தான் இருந்தன.
ஏன் சரிகிறது சந்தை?
அமெரிக்க ஃபெடரல் வங்கி விரைவில், அங்கு வட்டி விகிதங்களை உயர்த்த திட்டமிட்டிருப்பதால் அமெரிக்க பங்குச்சந்தை இறக்கம் கண்டது. அது இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.
அமெரிக்கா - ரஷ்யா இடையே உக்ரைனில் நிலவும் பதற்றம் உலகப் பொருளாதாரத்தில் தாக்கல் செலுத்தலாம் என்ற கணிப்பும் ஒரு காரணம்.
விரைவில் தாக்கலாகவிருக்கும் மத்திய பட்ஜெட், உயர்ந்துவரும் கச்சா எண்ணெய் விலை போன்றவையும் சந்தையில் தாக்கம் செலுத்துகின்றன.
3. வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப்
கடந்த டிசம்பர் 25-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் சமர்த்தாக தன் சுற்றுவட்டப்பாதையில் போய் நின்றுவிட்டால், அதன்பின் பல பிரபஞ்ச ரகசியங்கள் வெளிவருவது உறுதி என ஏற்கெனவே நாம் பார்த்தோம் அல்லவா? அந்த சம்பவம் நேற்று நடந்துவிட்டது.
சுமார் 16 லட்சம் கிலோமீட்டர்கள் பயணித்து சரியாக L2 எனப்படும் லக்ராஞ்சியன் பகுதியில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இனி இதன் கருவிகளை ஒவ்வொன்றாக ஆன் செய்து, அவற்றிலிருந்து தரவுகளைப் பெறுவதுதான் விஞ்ஞானிகளின் அடுத்த வேலை.
ஜேம்ஸ் வெப்பிலிருந்து முதல்கட்ட தரவுகள் வர நாம் இன்னும் சில மாதங்கள் காத்திருக்கவேண்டும்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 30,215 (நேற்று முன்தினம்: 30,580) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 6,296 (6,383) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 46 (40) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 3,06,064 (3,33,533) 🔻
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு 🌦 ☔️

தமிழகத்தில் மத்திய நெடுஞ்சாலைத்துறை திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து நேற்று அவருக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின், இதற்கு முன்பு இருந்த பல பிரச்னைகளுக்கு இந்த ஆட்சி அமைந்தவுடன் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் தொடர்ந்து அனைத்து திட்டங்களுக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக, நாளை (ஜனவரி 26) நடக்கவிருந்த கிராம சபைக்கூட்டங்கள் ரத்துசெய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 5 மாதங்கள் காலநீட்டிப்பு அளித்துள்ளது தமிழக அரசு. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து, 3 மாதங்களில் அறிக்கை தாக்கல்செய்வதற்காக 2017-ம் ஆண்டு அமைக்கப்பட்டது இந்த ஆணையம். ஆனால், இன்னமும் விசாரணையைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது 12-வது காலநீட்டிப்பு.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள், எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, பலமுறை அவர்களின் படகுகளை பறிமுதல் செய்துள்ளது இலங்கை கடற்படை. இப்படி 2010-ம் ஆண்டிற்குப் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை பிப்ரவரி 7-ம் தேதி முதல் ஏலம் விடப்போவதாக அந்நாடு அறிவித்துள்ளது. இதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, அரசுகள் இதைத் தடுத்து நிறுத்தவில்லையென்றால், பிப்ரவரி 2-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஐ.பி.எல் தொடரில் லக்னோ நகரை மையமாகக் கொண்டு என்ட்ரி கொடுத்திருக்கும் புதிய அணியின் பெயர், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் இந்த அணியின் கேப்டன்.
2021-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதுகளை நேற்று அறிவித்துள்ளது ஐ.சி.சி.
- இதில் ஆண்கள் பிரிவில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சஹீன் அஃப்ரிடி 2021-ன் சிறந்த கிரிக்கெட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
A year to remember 🤩 Smriti Mandhana's quality at the top of the order was on full display in 2021 🏏 More on her exploits 👉 bit.ly/3fRiDnm- பெண்கள் பிரிவில், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2021-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2018-ம் ஆண்டும் இதே கௌரவத்தைப் பெற்றிருந்தார் ஸ்மிருதி. ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெரிக்குப் பிறகு, இரண்டு முறை இந்த விருதைப் பெறுவது ஸ்மிருதி மட்டும்தான்.
- விஜய் வழக்கில் இன்று தீர்ப்பு: ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு நுழைவு வரி கட்டுவதிலிருந்து விலக்கு கேட்டிருந்த நடிகர் விஜய்யின் மனுவை, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தள்ளுபடி செய்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியம். கூடவே, ``நடிகர்கள் ரீல் ஹீரோவாக இருக்கவேண்டும்; ரியல் ஹீரோவாக இருக்கக்கூடாது” என வரி செலுத்துவது தொடர்பாக கடுமையான விமர்சனங்களையும் தீர்ப்பில் பதிவு செய்தார்.
கடும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விமர்சனங்களை தீர்ப்பிலிருந்து நீக்குமாறு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் விஜய். இந்த வழக்கில் நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் முகமது ஷஃபிக் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.
On This Day - Jan 25
- இந்தியாவின் 18-வது மாநிலமாக இமாசலப்பிரதேசம் உருவான நாள், 1971
- தேசிய வாக்காளர்கள் தினம்
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: