⚡`ம்' சொல்வாரா எலான் மஸ்க்?
Today Edition Highlights: சென்னையிலும் உணரப்பட்ட எரிமலை அதிர்வு | உயரும் டாடா கார்கள் விலை | பஞ்சாப் முதல்வர் வேட்பாளர்கள் யார்? | மோடிக்குப் பிரச்னை செய்ததா டெலிபிராம்ப்டர்? | Reading Time: ⏱ 5 Mins
ஹாய், ஹலோ… வணக்கம் 👋
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
``ஏன் இன்னும் டெஸ்லா கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை?” எனக் கேட்டிருந்த ஒரு ட்விட்டர் பயனாளியின் கேள்விக்கு,``இந்திய அரசுடன் இருக்கும் பிரச்னைகள் இன்னமும் தீரவில்லை” என அண்மையில் பதிலளித்திருந்தார் அந்நிறுவனத்தின் CEO எலான் மஸ்க். இதையடுத்து மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா எனப் பல மாநில அமைச்சர்களும், எலான் மஸ்க்கை தங்கள் மாநிலங்களுக்கு வர அழைப்பு விடுத்தனர்.
தமிழகம் சார்பில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும், இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான முதலீட்டில் தமிழகம் 34% பங்கு வகிப்பதாகக் குறிப்பிட்டு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆம்னி பஸ் ஸ்டாண்டில் ஆள் தேற்றுவது போல, இவ்வளவு மாநில அமைச்சர்கள் வெளிப்படையாக அழைத்தும் ஏன் எலான் மஸ்க் இன்னும் சைலன்ட்டாக இருக்கிறார்? காரணம், அவரின் பிரச்னையே வேறு!
டெஸ்லாவுக்கு அப்படியென்ன என்ன பிரச்னை?
தற்போது எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்திருக்கும் அனைத்து அமைச்சர்களுமே, டெஸ்லாவை தங்கள் மாநிலங்களில் தொழிற்சாலை அமைக்கச் சொல்லியும், அங்கு எந்தப் பிரச்னையும் இன்றி உற்பத்தியைத் தொடங்க உதவுவதாகவும் கூறியே அழைத்திருக்கின்றனர். ஆனால், எலானுக்கு முதல் பிரச்னையே இதுதான்!
ஆமாம், தற்போது மாநில அமைச்சர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்களோ, இதையேதான் மத்திய அரசும் எலான் மஸ்க்கிடம் 3 ஆண்டுகளுக்கும் மேல் சொல்லிக்கொண்டிருக்கிறது.
``இந்தியா வாருங்கள்; இங்கு உற்பத்தியைத் தொடங்குங்கள்; பிறகு வரிச்சலுகைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்; இங்கேயும் உங்கள் கார்களை விற்கலாம்; வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யலாம்; அரசு உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யும்!” - இதுதான் மத்திய அரசு சொல்வது. ஆனால், எலான் கேட்பதோ வேறு.
``இந்தியாவில் உற்பத்தி தொடங்குவதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் டெஸ்லா கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு 100% வரிச்சலுகை தாருங்கள். அந்தக் கார்கள் இங்கே சந்தையில் வரவேற்பு பெற்றால் நாங்கள் இந்தியாவில் ஆலை அமைத்து உற்பத்தி தொடங்குகிறோம்” என்பதுதான் டெஸ்லாவின் நிலைப்பாடு.
``இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்காமல் விற்பனை எனில், இந்தப் பேச்சே வேண்டாம்” எனச் சொல்லிவிட்டது மத்திய அரசு. இதுதான் எலான் மஸ்க்கிற்கு இப்போது இருக்கும் பிரச்னை.
ஏன் வரிச்சலுகை கேட்கிறார் எலான் மஸ்க்?
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் $40,000-க்குள் மதிப்புகொண்ட எலெக்ட்ரிக் காரை இறக்குமதி செய்யவேண்டுமென்றால் 60 சதவீதமும், $40,000-க்கு மேல் மதிப்புகொண்ட எலெக்ட்ரிக் கார்கள் என்றால் 100 சதவீதமும் இறக்குமதி வரி செலுத்தவேண்டும். இதில் டெஸ்லாவின் கார்கள் இரண்டாவது வகை. அதனுடைய பேஸ் மாடலே அமெரிக்காவில் $44,690. அதை 100% இறக்குமதி வரியோடு இந்தியாவில் விற்றால், மதிப்பு 60 லட்சம் ரூபாயைத் தொட்டுவிடும்.
இன்னமும் ~1% அளவுக்கு மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், 60 லட்ச ரூபாய்க்கு யாரும் டெஸ்லா காரை வாங்க மாட்டார்கள் என்பது அவர்கள் வாதம்; அது சரியும் கூட.
மேலும், ``ஏற்கெனவே டாடா, மஹிந்திரா, ஹூண்டாய் என இங்கிருக்கும் போட்டியாளர்களுடன் மோத வேண்டுமானால், முதலில் டெஸ்லாவுக்கென ஒரு சந்தை உருவாக வேண்டும்; அதன் பின்பே இங்கு உற்பத்தியைத் தொடங்குவோம்” என்பது அடுத்த வாதம். ஆனால், அரசு இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
என்ன காரணம்?
இதுபோன்ற எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களுக்கு சலுகை அளிப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள்…
இங்கு உள்நாட்டில், புதிய முதலீடும் புதிய வேலைவாய்ப்புகளும் பெருகும்.
இந்தியா தன்னுடைய பசுமை இல்ல வாயுவைக் குறைக்க இதுபோன்ற முயற்சிகள் நீண்டகால நோக்கில் பயனளிக்கும்.
ஆனால், டெஸ்லா வெறுமனே இறக்குமதி மட்டுமே செய்தால், இது இரண்டுமே நடக்காதே? உள்நாட்டில் கார்களைத் தயாரிக்காமல், இந்தியாவுக்கு ஏற்ற விலையோடு வரவில்லையெனில், டெஸ்லா இந்திய சந்தையில் பெரிய மாறுதலை ஏற்படுத்தாமல் போகவே வாய்ப்பு அதிகம்.
மேலும், உள்நாட்டு வாகன உற்பத்தியாளர்களும் டெஸ்லாவுக்கு மட்டும் வரிவிலக்கு அளித்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே செய்வார்கள். (ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்கள்). அதனால்தான், Production Linked incentive (PLI) திட்டம் மூலம், இங்கு உற்பத்தியைத் தொடங்கும் திட்டமிருந்தால், பிறகு வரிச்சலுகை பற்றி பேசலாம் என்கிறது மத்திய அரசு.
என்னதான் தீர்வு?
டெஸ்லா மட்டுமல்ல; இதற்கு முன்பு ஆப்பிள் நிறுவனம், ஐபோன்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்ய 2016-ம் ஆண்டு வரிச்சலுகை கேட்டபோதுகூட, மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ``இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கும் திட்டம் இல்லையென்றால் எனில் வரிச்சலுகை இல்லை” என்றது. பின்னர்தான் ஆப்பிள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிவந்து இந்தியாவில் தன் திட்டத்தையே மாற்றி, இங்கு உற்பத்தியைத் தொடங்கவும் முடிவு செய்தது. டெஸ்லாவுக்கும் இது ஒன்றுதான் வழி.
``முதல் இரண்டு ஆண்டுகள் இறக்குமதிக்கு வரிச்சலுகை, பின்னர் இந்தியாவில் உற்பத்தி” என விதிமுறைகளில் தளர்வுகள் வேண்டுமானால் இருக்கலாமே தவிர, இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்காமல் டெஸ்லாவுக்கு வேறு எந்த சிறப்பு சலுகைகளும் கிடைக்க வாய்ப்பு குறைவு.
டெஸ்லாவின் 4 கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க 2020-லேயே அனுமதியளித்துவிட்டது மத்திய அரசு. மும்பையில் ஒரு ஷோரூம், பெங்களூருவில் ஒரு அலுவலகம் அமைக்கும் பணிகளைக் கூட டெஸ்லா தொடங்கிவிட்டது.
எனவே, உள்நாட்டு உற்பத்திக்கு எலான் மஸ்க், `ம்’ சொல்லப்போகிறாரா, `ம்ஹூம்’ சொல்லப்போகிறாரா என்பதைப் பொறுத்து மட்டும்தான் இந்தியாவில் டெஸ்லாவின் எதிர்காலம் இருக்கிறது.
அண்மையில்தான், இதேபோல எலான் மஸ்க்கின் இன்னொரு நிறுவனமான ஸ்டார்லிங்க்கும் சிக்கலில் மாட்டியது. முறையான லைசென்ஸ் பெறாமல் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கு, முன்பதிவைத் தொடங்கி, பின்னர் அரசு எச்சரித்ததும் வாடிக்கையாளர்களிடம் பணத்தை திருப்பியளித்தது.
1. டெலிபிராம்ப்டர்தான் பிரச்னையா?
பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு World Economic Forum (WEF) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் பேசினார். அப்போது, திடீரென இடையில் பேச்சை நிறுத்திவிட்டு, சிறிது இடைவெளி விட்டார்.
``மோடி பார்த்து வாசித்துக்கொண்டிருந்த டெலிபிராம்ப்டர் பிரச்னை செய்ததும், மோடி அடுத்து எதுவுமே பேச முடியாமல் நின்றுவிட்டார்; டெலிபிராம்ப்டர் இல்லையெனில் மோடி இவ்வளவுதான்” என அந்த சில நொடி காணொளி ட்விட்டரில் வைரலானது. எதிர்க்கட்சிகள் இதை வைத்து மோடியைக் கிண்டல் செய்து வந்தன.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், பா.ஜ.க ஐ.டி விங் சார்பிலும், இது தொழில்நுட்பக்கோளாறால் ஏற்பட்ட பிரச்னை என ட்ரெண்ட் செய்யப்பட்டு வந்தது. உண்மையில் என்ன நடந்தது?
பிரச்னை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் (WEF) தரப்பில்தான் இருந்திருக்கிறது. முதலில் மோடி பேசும்போது, அது அங்கு திரையில் வராமல் போகவே, இந்திய அதிகாரிகள் அதைக் குறிப்பிட்டு, மோடியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம், பேசுவது ஒளிபரப்பாவதை உறுதி செய்துகொள்ளுமாறு கூறியிருக்கின்றனர். மோடியும் அதைக் கேட்டிருக்கிறார். (இதுதான் சம்பவம் நடந்த இடம்!) பின்னர், WEF தலைவர் உறுதி செய்ததும், மீண்டும் மோடி பேசுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின்னர் மீண்டும் முதலில் மோடி முழுவதுமாகப் பேசியிருக்கிறார்; எதுவும் பிரச்னை ஏற்படவில்லை. இவை WEF-யின் யூடியூப் பக்கத்தில் நடந்த நேரலையிலேயே பதிவாகியிருக்கின்றன.
எனவே, இது டெலிபிராம்ப்டர் பிரச்னையில்லை என Fact Check செய்து உறுதிப்படுத்தியிருக்கிறது Boom Live தளம்.
2. முதல்வருக்கு ராஜ்நாத் சிங் பதில்
டெல்லியில் நடைபெறவிருக்கும் இந்த ஆண்டுக்கான குடியரசு தின விழாவில், தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து நேற்று பார்த்தோம் அல்லவா? அதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
நிபுணர்கள் குழுவின் பரிசீலனைக்குப் பிறகே, தமிழக அரசின் ஊர்தி நிராகரிக்கப்பட்டதாகவும், முதல் 3 கட்டங்களில் பரிசீலிக்கப்பட்ட தமிழக ஊர்தி, அதற்குப் பிறகே, இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஊர்திகளில் ஒன்றாக தகுதிபெறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு முன்பு 2017, 2019, 2020, 2021 ஆண்டுகளில் தமிழக ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டிருந்ததையும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாகவும், உடனே இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் எனவும் நேற்று முன்தினம் கடிதம் எழுதியிருந்தார் தமிழக முதல்வர்.
ஆனால், மத்திய அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்பது இந்தக் கடிதத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது. இந்நிலையில், மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழகத்தின் அலங்கார ஊர்தியானது, தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் எனவும், தமிழகத்தின் நகரங்களுக்கும் அது அனுப்பப்படும் எனவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருக்கிறார்.
3. பஞ்சாப் முதல்வர் வேட்பாளர்:
உத்தரப்பிரதேசம் போலவே பஞ்சாப் மாநில தேர்தலும் அண்மைய நடவடிக்கைகள் காரணமாக பரபரப்பாகியுள்ளது. பக்வந்த் சிங் மானை முதல்வர் வேட்பாளராக நேற்று அறிவித்திருக்கிறது ஆம் ஆத்மி கட்சி. இவர் தற்போது அக்கட்சியின் எம்.பியும் கூட. முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கும் முதல் கட்சி ஆம் ஆத்மிதான்.
இதேபோல, காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக அறிவிக்கவில்லையென்றாலும், நேற்று ஒரு பிரசார வீடியோ மூலம், தற்போது முதல்வராக இருக்கும் சரண்ஜித் சிங் சன்னிதான் முதல்வர் வேட்பாளர் என மறைமுகமாகச் சொல்லியிருக்கிறது. நவ்ஜோத் சிங் சித்து ரேஸில் இல்லை!
இன்னொருபுறமோ, மணல் கொள்ளை தொடர்பாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர்களுக்குச் சொந்தமான 10 இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தியிருக்கின்றனர்.
4. சென்னையில் உணரப்பட்ட எரிமலை வெடிப்பு
தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்திருக்கும் டோங்கா தீவுக்கூட்டங்களின் அருகில் கடலுக்கடியில் இருந்த எரிமலை ஒன்று, கடந்த சனிக்கிழமையன்று வெடித்துச் சிதறியது.
இதையடுத்து நியூசிலாந்து, அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கைகளும் விடப்பட்டன. ஆனால், டோங்கா தீவுகளைத் தவிர வேறு எங்கும் சுனாமி பாதிப்பு ஏற்படவில்லை.
அண்மைக்காலங்களில் நிகழ்ந்த மாபெரும் எரிமலை வெடிப்பான இது, டோங்கா தீவுகளின் ஆழ்கடல் தொலைத்தொடர்பு கேபிள்களைப் பாதித்திருப்பதால், அந்நாட்டின் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. டோங்காவில் சுமார் 1,00,000 பேர் வசிக்கின்றனர்.
மேலும், எரிமலை வெடிப்பால் அந்த தீவுக்கூட்டங்கள் முழுவதும் சாம்பலால் சூழப்பட்டுள்ளது. இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், இந்த எரிமலை வெடிப்பின் அதிர்வானது, 2,500 கி.மீ தொலைவிலுள்ள நியூசிலாந்து, 9,500 கி.மீ தொலைவிலுள்ள அமெரிக்காவில் மட்டுமல்ல; சுமார் 12,000 கி.மீ தொலைவிலுள்ள சென்னையிலும் `Barometer’ மூலம் உணரப்பட்டுள்ளது. இதை சென்னை புயல் எச்சரிக்கை மைய இயக்குநர் புவியரசனும் உறுதி செய்திருக்கிறார்.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 23,888 (நேற்று முன்தினம்: 23,443) 🔺
- அதிகபட்சமாக, சென்னையில்: 8,305 (8,591) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 29 (20) 🔺
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 2,38,018 (2,58,089) 🔻
இன்று மற்றும் நாளைக்கான வானிலை முன்னறிவிப்பு ☔️ 👇
12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மார்ச் மாதம் தொடங்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார் தேசிய கோவிட் கட்டுப்பாட்டுக்குழு தலைவர் என்.கே.அரோரா. 15 - 18 வயதுக்குட்பட்ட சுமார் 7.4 கோடி சிறார்களில் இதுவரை 3.45 கோடி பேர் தங்கள் முதல் டோஸை (கோவாக்சின்) எடுத்துக்கொண்டுள்ளனர். விரைவில் இவர்களுக்கு 2-வது டோஸ் செலுத்தும்பணிகளும் முடிக்கப்பட்டு, அதன்பின் 12-14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.
நாட்டில் பசியால் எவ்வளவு பேர் இறக்கிறார்கள் என்ற தரவுகளை சேகரிக்கச் சொல்லியும், பசியால் யாரும் உயிரிழக்காமல் இருக்க நாடு முழுக்க கம்யூனிட்டி கிச்சன்களை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்கும்படியும், மத்திய அரசை நேற்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆண்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை எதிர்த்து, தேவாஸ் நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்த வழக்குகளில் சர்வதேச தீர்ப்பாயம், இந்திய அரசு அந்நிறுவனத்திற்கு 1.2 பில்லியன் டாலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் எனத் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் காலத்தில் நடந்த இந்த ஊழலை எதிர்த்து தற்போதைய மத்திய அரசு தொடர்ந்து சர்வதேச தீர்ப்பாயங்களில் போராடும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருக்கிறார். 2005-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து 2011-ல் அப்போதைய மத்திய அரசால் ரத்துசெய்யப்பட்டது.
Call Of Duty, World of Warcraft உள்ளிட்ட கேம்களை உருவாக்கிய Activision Blizzard நிறுவனத்தை 68.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கவிருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இதன்மூலம் டென்சென்ட், சோனிக்கு அடுத்து உலகின் 3-வது பெரிய கேமிங் நிறுவனமாக மாறப்போகிறது Xbox.
- மாருதி சுஸூகி நிறுவனம் கடந்த வாரம் தன் கார் மாடல்களின் விலையை 4.3% வரை உயர்த்தியிருந்தது. இந்நிலையில், இன்று முதல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கார்களின் விலையை 0.9% அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. உற்பத்திச்செலவு உயர்வில் ஏற்பட்ட உயர்வு காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- குழந்தைகளுக்கான போலியோ சொட்டுமருந்து முகாம் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெறும். அதன்படி, நாடு முழுவதும் இந்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த முகாமானது, கொரோனா பரவல் காரணமாக, பிப்ரவரி 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
🔴 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: