🇮🇱 இஸ்ரேலிலும் தொடங்கிய `பெகாசஸ்' புயல்
Today Edition Highlights: ஆளுநர் சபாநாயகரிடம் சொன்னது என்ன? | JNU துணைவேந்தர் சர்ச்சை | காங்கிரஸை கடுமையாக விமர்சித்த மோடி | Reading Time: ⏱ 4 Mins
Good Morning ☕️
இன்றைய தினத்தின் டாப் அப்டேட்ஸ் இதோ…
``You can't keep snakes in your backyard and expect them to only bite your neighbour”
ஹிலரி கிளின்டனின் இந்த வாசகம், இப்போதைய இஸ்ரேல் அரசியலுக்கு அப்படியே பொருந்தும்.
எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரையும் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசு உளவுபார்த்ததாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் சில மாதங்கள் முன்பு புயலைக் கிளப்பின. இதேபோல அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பி, தற்போது அங்கு விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த பெகாசஸ் குறித்த TSL Explainer-ஐ இங்கே படிக்கலாம்.
இப்படி வெளிநாடுகள் பெகாசஸ் விவகாரத்தில் தீவிரமாக இருந்தாலும், இஸ்ரேலில் இதனால் எந்த பரபரப்பும் இல்லை. பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் உலக அரசியலில் இஸ்ரேல் ஆதிக்கம் செலுத்தியதாக செய்திகள் வெளியானபோதுகூட இஸ்ரேலில் அவை பெரிதாக எதிரொலிக்கவில்லை. ஆனால், நேற்று இஸ்ரேல் ஊடகங்களில் பெகாசஸ் விவகாரம் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது. பிற நாடுகளைப் போலவே இஸ்ரேல் அரசியல்வாதிகளும் பெகாசஸ் விவகாரத்தை உற்று கவனிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இப்போது திடீரென என்ன நடந்தது?
இஸ்ரேல் நாட்டின் காவல் துறை, அந்நாட்டு மக்களுக்கு எதிராக பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தியிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளது. இதுதான் முதல் காரணம்.
Calcalist என்னும் இஸ்ரேல் செய்தி நிறுவனம் இதுகுறித்து ஏற்கெனவே பலமுறை புலனாய்வுச் செய்திகள் வெளியிட்டது. ஆனால், அனைத்தையும் விட நேற்று வெளியிட்டிருக்கும் தகவல் இன்னும் அதிர்ச்சியானது.
அந்த தகவலின்படி, இஸ்ரேலின் தொழிலதிபர்கள், அமைச்சர்களின் முன்னாள் செயலர்கள், மேயர்கள், போராட்டக்காரர்கள் எனப் பலரும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டிருக்கின்றனர். அந்நாட்டின் முன்னாள் பிரதமரான நேதன்யாஹூவின் மகன் மற்றும் நேதன்யாஹூ ஊழல் வழக்கில் தொடர்புடைய சாட்சி எனப் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களின் பெயர்களும் வெளிவந்திருக்கின்றன.
இதையடுத்துதான் இதுவரை பெகாசஸ் ஏதோ வெளிநாட்டு விவகாரம் என அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த இஸ்ரேல் வாசிகள், முதன்முதலாக பெகாசஸின் ஆபத்து குறித்து விவாதித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்திற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
இந்திய அரசு பெகாசஸ் பயன்படுத்தியதா என்பதை அறிய உச்சநீதிமன்றம் அமைத்த குழு விசாரணை நடத்தி வருவதை அறிவீர்கள்.
இந்நிலையில்தான் இந்த சம்பவம் ஒரு விஷயத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பெகாசஸ் உளவு மென்பொருள் பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றது அதைத் தயாரித்த NSO நிறுவனம். அது பொய் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.
இந்தியாவில் தனிநபர்களைக் கண்காணிக்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டிருக்குமா எனக் கேள்வி எழுந்தபோது NSO மேற்கண்ட பதிலைத்தான் சொன்னது.
இன்னொன்று, இந்த பெகாசஸ் விவகாரம் பல நாட்டு அரசியல் விவகாரங்களிலும் நேரடியாக தலையிட்டிருப்பதால், இது சர்வதேசப் பிரச்னையாகவும் மாறியிருக்கிறது.
1. ராகுலுக்கு மோடியின் ரிப்ளை
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ராகுல் காந்தி ஆற்றிய உரை தேசிய அளவில் வைரலானது. இந்நிலையில் அந்த உரைக்கு பதிலளிக்கும் விதமாக சுமார் 1:40 மணி நேரங்களுக்கு நேற்று பேசியிருக்கிறார் மோடி. அதில் அவர் குறிப்பிட்ட சில விஷயங்கள் சர்ச்சையாகியிருக்கின்றன.
காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பிரதமர், ``தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை எனக்கூறி காங்கிரஸ் பிரிவினை வாதத்தை தூண்டுகிறது” என்றார். மேலும், ``உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, குஜராத், பீகார், மேற்கு வங்கம், ஒடிஷா, நாகலாந்து ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இல்லை” எனவும் குறிப்பிட்டார்.
``தமிழ்நாட்டை ஒருபோதும் பா.ஜ.க ஆளமுடியாது” என ராகுல் காந்தி குறிப்பிட்டதற்குத்தான் இப்படி பதில் அளித்தார். கூடவே, ``பிரிட்டிஷார் நாட்டைவிட்டு சென்றுவிட்டாலும் இன்னும் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி காங்கிரஸ் வடிவில் இங்கு இருக்கிறது; அதனால்தான் காங்கிரஸ் பிரிவினைவாதிகளின் தலைமையகமாக இருக்கிறது” என்றும் விமர்சித்தார்.
மேலும், கொரோனாவின் முதல் அலை சமயத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை அச்சுறுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் இலவச ரயில்கள் விட்டதால்தான் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் (இந்த மூன்று மாநிலங்களுக்கும் உள்ள ஒற்றுமை, விரைவில் வரவிருக்கும் தேர்தல்!) கொரோனா பரவல் அதிகரித்தது என்றும் குறிப்பிட்டார்.
இந்த விமர்சனத்தை ஆம் ஆத்மி, சிவசேனா கட்சிகள் எதிர்த்துள்ளன. எந்தவித முன்னறிவிப்புமின்றி, லாக்டௌன் அறிவித்த சமயத்தில் கைவிடப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மாநில அரசுகள்தான் உதவின என அவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
2. ஜே.என்.யு துணைவேந்தர் சர்ச்சை
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) துணைவேந்தராக இருந்த ஜகதீஷ்குமார் பல்கலைக்கழக மானியக்குழு தலைவராகப் பொறுப்பெற்றுள்ளார். இதையடுத்து JNU-வின் முதல் பெண் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ளார் சாந்திஶ்ரீ துலிபுடி பண்டிட்.
JNU-வில் நடந்த போராட்டங்கள், மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக சர்ச்சைக்குரிய நபராகவே இருந்தார் முன்னாள் துணைவேந்தர் ஜகதீஷ். அதேபோல சாந்திஶ்ரீ நியமனமும் நேற்று சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. காரணம், அவரது ட்வீட்கள்.
சிறுபான்மையினருக்கு எதிராக மத துவேஷங்கள், கோட்சேவிற்கு ஆதரவான கருத்துகள் என மிகவும் இழிவான கருத்துகளை தொடர்ந்து ட்வீட் செய்து வந்திருக்கிறார் சாந்திஶ்ரீ. அவை நேற்று வைரலானதும், அவரின் ட்விட்டர் அக்கவுன்ட் டிஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கிறது.
3. ஆளுநர் அரசிடம் சொன்னது என்ன?
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திருப்பியனுப்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழக அரசின் மசோதா, கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு எதிராக உள்ளதாக மட்டும் குறிப்பிட்ட ஆளுநர் மாளிகை, ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான காரணத்தை சபாநாயகரிடம் விரிவாக விளக்கியிருப்பதாக குறிப்பிட்டிருந்தது.
தமிழக அரசும் ஆளுநர் நீட் விலக்கு மசோதா குறித்து அனுப்பிய குறிப்புகளை வெளியிடவில்லை. இந்நிலையில் ABP செய்தி நிறுவனம், நேற்று ஆளுநர் அனுப்பிய அறிக்கையின் குறிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதில், ``உயர்நிலைக் குழு (நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி) அளித்த மொத்த அறிக்கையும் காமாலைக் கண் கொண்டு தயாரித்தது போல இருக்கிறது. மேலும், நீட் தகுதியில்லாதவர்களை அனுமதிக்கிறது என்பதையும், நீட் ஒரு இலக்கில்லாத தேர்வு என பொத்தாம்பொதுவாகச் சொல்லப்பட்டிருப்பதையும் ஏற்க முடியாது. நீட் தேர்வின் முக்கியத்துவத்தை உணராமல், சமூக நீதிக்கு எதிரானது என்ற வாதத்தை வைத்து மட்டுமே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார் ஆர்.என்.ரவி.
இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநர் வழியாக குடியரசுத்தலைவருக்கு அனுப்புவதற்காக இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கவிருக்கிறது.
தமிழகத்தில் நேற்று பதிவான கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை: 5,104 (நேற்று முன்தினம்: 6,120) 🔻
- அதிகபட்சமாக, சென்னையில்: 839 (972) 🔻
- தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை: 13 (26) 🔻
இந்தியாவில் நேற்று பதிவான கொரோனா பாதிப்பு: 83,876 (1,07,474) 🔻
கர்நாடகாவில் குந்தாபூர் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் அனுமதிக்காமல் இருந்த நிர்வாகம், நேற்று அவர்களை உள்ளே அனுமதித்திருக்கிறது. ஆனால், வகுப்புகளில் அனுமதியில்லை. மாறாக, ``பள்ளிக்குள்ளே தனி அறையில் போராட மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளது நிர்வாகம்.
கேரளாவின் பிரபல பாம்புபிடிக்கும் நபரான வாவா சுரேஷ் அண்மையில் பாம்பு தீண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஒரு வார கால சிகிச்சைக்குப் பிறகு நேற்று அவர் முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்பியிருக்கிறார்.
கர்நாடகாவின் மேக்கேதாட்டூவில் அணைகட்ட எப்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் என அம்மாநில உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே, ``தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களிலும் கருத்தொற்றுமை ஏற்பட்டால் மட்டுமே மேக்கேதாட்டூவில் அணைகட்ட அனுமதி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மும்பையைச் சேர்ந்த சில தனியார் செய்தி சேனல்கள் டி.ஆர்.பி ரேட்டிங் முறைகேட்டில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, செய்தி சேனல்களுக்கான வாராந்திர TRP அறிக்கையை தற்காலிகமாக நிறுத்திவைத்தது BARC அமைப்பு. இந்நிலையில், தற்போது TRP தொழில்நுட்பத்தை இன்னும் மேம்படுத்தியிருப்பதாகச் சொல்லும் BARC, மார்ச் 17-ம் முதல் தேதி முதல் இனி மீண்டும் வாராந்திர TRP தரவுகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
மார்ச் 27, 2020 முதல் மார்ச் 31, 2021 வரைக்கும் PM Cares நிதியாக 10,990 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. தற்போது இதன் தணிக்கை அறிக்கைக்ள் வெளிவந்துள்ளன. அதன்படி, இந்த 10,990 கோடி ரூபாயில், 3,976 கோடி ரூபாய் மட்டுமே கடந்த நிதியாண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தி.மு.க ஆரம்பிக்கவிருக்கும் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பில் பங்கேற்பதற்காக நாட்டின் 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் மு.க.ஸ்டாலின். இந்த அழைப்பை ஓ.பன்னீர் செல்வம் ஏற்கனவே மறுத்துவிட்டார். இந்நிலையில் நேற்று காங்கிஸ் கட்சி மற்றும் மெஹ்பூபா முஃப்தியின் PDP கட்சி ஆகிய இரு கட்சிகளும், இந்தக் கூட்டமைப்பிற்கு தங்கள் பிரிதிநிதிகளை அனுப்ப சம்மதம் தெரிவித்திருக்கின்றன. காங்கிரஸ் சார்பில் வீரப்ப மொய்லி பங்கேற்கவிருக்கிறார்.
அவ்வளவுதான்!
The Subject Line-னோட இன்னைக்கு அப்டேட்ஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நம்புறேன். பிடிச்சிருந்தா கீழ இருக்க பட்டன் மூலமா உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… இன்னும் ஏதாச்சும் இந்த TSL-ல் மாத்தணும்னா எனக்கு மெசேஜ் பண்ணுங்க! உங்க கருத்துகள் எங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். 🤞
திரும்ப நாளைக்கு காலைல 7 மணிக்கு சந்திப்போம்!
Have a Nice day ☕️
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர:
Telegram | Twitter | Facebook | Insta
Today Edition பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க! ❤️