Recap: வோடஃபோன் சிக்கல் முதல் ஜோகோவிச் பஞ்சாயத்து வரை!
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 4 ஸ்டோரிகள்
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 4 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
📶 அடுத்த BSNL ஆகிறதா வோடஃபோன் ஐடியா?
🎾 ஜோகோவிச்சிற்கு என்ன பஞ்சாயத்து?
🧐 மீண்டும் பரபரப்பாகும் திலீப் வழக்கு; ஏன்?
📚 OBC-க்கு 27% - ஏன் இந்த தீர்ப்பு முக்கியமானது?
📶 அடுத்த BSNL ஆகிறதா வோடஃபோன் ஐடியா?
அரசுக்கு செலுத்தவேண்டிய AGR நிலுவைத்தொகை மற்றும் ஸ்பெக்ட்ரம் கட்டண பாக்கிகளுக்கான வட்டித்தொகைக்கு பதிலாக, 35.8% பங்குகளை அரசிடம் கொடுக்க முடிவுசெய்திருக்கிறது வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம். இதன்மூலம் வோடஃபோன் ஐடியாவின் முன்னணி பங்குதாரராக மாறவிருக்கிறது மத்திய அரசு. ஏன் இப்படி தனியார் டெலிகாம் நிறுவனப் பங்குகளை வாங்குகிறது மத்திய அரசு?
இதுபற்றி புரிந்துகொள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் பிரச்னைகளையும் சுருக்கமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
என்ன பிரச்னை?
இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கும், மத்திய அரசுக்கும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவந்த பிரச்னை, AGR (Adjusted gross revenue) தொடர்பானது. டெலிகாம் நிறுவனங்களின் லாபத்தைக் கணக்கிடுவது தொடர்பாக ஏற்பட்ட இந்தப் பிரச்னையில், இறுதியாக 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி, டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு மொத்தமாக 92,000 கோடிக்கும் மேலாக செலுத்த வேண்டும். ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் சேர்த்து இந்த தொகை. இதில் வோடஃபோன் ஐடியாவின் பங்கு மட்டும் சுமார் 58,000 கோடி ரூபாய்க்கும் மேல்.
இந்த தொகையை 2021 முதல் 2031 வரை அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக இந்நிறுவனங்கள் செலுத்தவேண்டும். இதில்தான் வோடஃபோன் ஐடியாவுக்கு சிக்கல்.
இதையடுத்துதான் அரசு தந்திருக்கும் ஒரு வாய்ப்பை பயன்படுத்தி, தற்போது சிறிய ஆறுதல் அடைந்திருக்கிறது அந்நிறுவனம்.
இந்த முயற்சி எப்படி அந்நிறுவனத்தைக் காக்கும் என்பது குறித்தும், அரசுக்கு இதனால் என்ன லாபம் என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.
🎾 ஜோகோவிச்சிற்கு என்ன பஞ்சாயத்து?
10-வது முறையாக ஆஸ்திரேலிய ஓப்பன் சாம்பியன்ஷிப் வெல்வது, ஃபெடரர், நடால் இருவரையும் முந்தி 21-வது கிராண்ட்ஸ்லாம் வெல்வது; இந்த இரண்டு நோக்கங்களோடு, ஆஸ்திரேலியாவுக்கு வந்திறங்கிய உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச், கடந்த 9 நாள்களாக தொடரில் பங்கேற்பதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். தடுப்பூசி விதிகளை மீறியது, அதிகாரிகளிடம் பொய் சொன்னது என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழ, இதுவரைக்கும் இரண்டு முறை விசாவை ரத்து செய்துவிட்டது ஆஸ்திரேலியா. இதற்கு முன்பு நீதிமன்ற படியேறி, விசாவை மீட்டவர், தற்போது மீண்டும் அதேபோன்ற சூழ்நிலையில் வந்து நிற்கிறார்.
என்ன பஞ்சாயத்து இது?
ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடர் வரும் 17-ம் தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் கலந்துகொள்வதற்காக, கடந்த வாரம் வியாழக்கிழமையன்று ஆஸ்திரேலியா வந்தார் ஜோகோவிச்.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும், ஆஸ்திரேலியாவின் முக்கியமான விதிமுறைகளில் ஒன்று, கோவிட்டுக்கு எதிரான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டிருப்பது; இல்லையெனில், தடுப்பூசி எடுக்காததற்கு உரிய மருத்துவ காரணங்களை, மருத்துவர்களின் அறிக்கையுடன் தாக்கல் செய்து, இதிலிருந்து விலக்கு பெறவேண்டும். கோவிட்டால் ஏற்படும் தீவிர பாதிப்புகள் அல்லது வேறு தீவிர நோய் பாதிப்புகளுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு வழங்கப்படும்.
இதில், ஜோகோவிச் இரண்டாவது வகை. தடுப்பூசி செலுத்துவதற்கு பெற்ற விதிவிலக்குடன், ஜனவரி 6-ம் தேதி ஆஸ்திரேலியா வந்திறங்கினார். அங்கிருந்துதான் சிக்கல் தொடங்கியது.
தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதியில்லை எனக்கூறி சுமார் 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர் ஆஸ்திரேலிய அதிகாரிகள். பின்னர், அதிகாலையில் அவரின் விசாவையும் ரத்து செய்துவிட்டனர். இதையடுத்து ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிப்போகும் நிலை வரவே, உடனே இதுகுறித்து அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அவர். அவர்தான், விதிவிலக்கு பெற்றவராயிற்றே? பிறகென்ன பிரச்னை?
நிறையவே இருக்கிறது. இந்த வழக்கில் ஆரம்பகட்டத்தில் எழுந்த அந்தப் பிரச்னைகளை விளக்குகிறது இந்தக் கட்டுரை. இந்த வழக்கின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை திங்கள் கிழமை TSL-ல் பார்ப்போம்.
🧐 மீண்டும் பரபரப்பாகும் திலீப் வழக்கு; ஏன்?
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக, தனக்கு நடந்த அநீதி குறித்து அண்மையில் பொதுவெளியில் மௌனம் கலைத்திருக்கிறார் பாதிக்கப்பட்ட அந்த கேரள நடிகை.
கூடவே, அண்மையில் வெளியான ஆடியோக்களால் மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கிறார் நடிகர் திலீப். 5 ஆண்டுகளாக கேரளாவில் பரபரப்பாக பேசப்படும் நடிகை கடத்தல் வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.
திலீப் மற்றும் அவரின் தம்பியின் வீடுகளில் அண்மையில் நடைபெற்ற கேரள குற்றப்பிரிவு போலீஸாரின் ரெய்டு, வரும் வாரம் விசாரணைக்கு வரும் திலீப்பின் முன்ஜாமீன் மனு என இந்த வழக்கில் அடுத்தடுத்து பரபரப்புகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
2017-ம் ஆண்டு முதல் இந்த வழக்கு கடந்துவந்த பாதையையும், தற்போது என்ன நடக்கிறது என்பதையும் இந்த TSL எடிஷனில் படிக்கலாம்.
📚 OBC-க்கு 27% - ஏன் இந்த தீர்ப்பு முக்கியமானது?
மருத்துவப் படிப்புகளில் (MBBS / BDS / MD / MS / Diploma / MDS), அகில இந்திய தொகுப்பில் (AIQ) OBC பிரிவினருக்கான 27% இடஒதுக்கீடு செல்லும் என கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று மிக முக்கியமான தீர்ப்பை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.
மேலும், முன்னேறிய பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான (EWS) 10% இடஒதுக்கீட்டையும் இந்த ஆண்டு மருத்துவ கவுன்சிலிங்கில் பின்பற்றலாம் எனவும், அதே சமயம் EWS இடஒதுக்கீட்டிற்கான தகுதிகள் மற்றும் வருமான வரம்பு (ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய் என்பது) ஆகியவை நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. EWS விவகாரம் மீதான இறுதி விசாரணை மார்ச் மாதம் நடக்கவுள்ளது. (இந்த EWS விவகாரம் குறித்து அப்போது பார்ப்போம்)
இந்த தீர்ப்பின் மூலம், முதல்முறையாக மருத்துவப் படிப்புகளின் அகில இந்திய தொகுப்பிலும் OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
இந்த OBC இடஒதுக்கீடு கடந்துவந்த பாதையையும், இது ஏன் 30 ஆண்டுகளுக்கும் மேல் தாமதமானது என்பது குறித்தும் இந்த TSL Explainer-ல் படிக்கலாம்.
அவ்வளவுதான்!
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன்.
👉 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணிஉங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும். ஏற்கெனவே கருத்தைப் பதிவு செய்தவர்களுக்கு நன்றி!
Happy Weekend 🍕
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: