🔘 Recap: Aadhaar Voter ID இணைப்பு முதல் ஒமிக்ரான் ஆய்வு வரை!
இந்த வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியான TSL Edition-களில் நீங்கள் மிஸ் செய்யக்கூடாத 4 ஸ்டோரிகள்
ஹாய், ஹலோ… வணக்கம்! 👋
இந்த வார TSL-ன் ரீவைண்ட் எடிஷன் இது. இந்த 4 TSL Explainers-ஐ இந்த வாரம் படிக்க மிஸ் பண்ணியிருந்தா, இன்றைக்கு கட்டாயம் படிச்சிடுங்க!
Voter ID + Aadhaar; நிச்சயம் இணையத்தான் வேண்டுமா?
மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜூன் 30-க்குப் பிறகு என்னாகும்?
கர்நாடகாவின் மதமாற்ற தடைச்சட்டம் சரியானதா?
Omicron: சில முன்னெச்சரிக்கைகளும் சில நற்செய்திகளும்!
🗳 Voter ID + Aadhaar; நிச்சயம் இணையத்தான் வேண்டுமா?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் போதிய விவாதங்களின்றி, அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது, தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதா. இது அரசியல் கட்சியினரிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. காரணம், அதில் இடம்பெற்றிருந்த வாக்காளர் அடையாள அட்டையையும், ஆதார் எண்ணையும் இணைக்கும் ஒரு அம்சம்.
என்ன பிரச்னை அதில்?
தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவில் மொத்தம் 4 புதிய திருத்தங்கள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒன்றுதான் இந்த ஆதார், வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு. இது என்ன சொல்கிறது?
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-ன், பிரிவு 23-ல் திருத்தம் செய்து, தேர்தல் ஆணையம் ஆதார் மற்றும் வாக்காளர் விவரங்களை இணைப்பதற்கான அதிகாரத்தை வழங்குகிறது இந்த மசோதா.
இதன்மூலம், புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களிடம், அதிகாரிகள் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆதார் எண்ணை கேட்கலாம். ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு வாக்காளர், வெவ்வேறு தொகுதிகளில் பதிவு செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யவும், ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை பதிவு செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யவும்கூட, அவரின் ஆதார் தகவல்களைக் கேட்டு பயன்படுத்தலாம்.
ஆனால், ஆதார் இல்லை என்பதாலேயே ஒருவரின் பெயரை பட்டியலில் இருந்து நீக்கவோ, அவரை பட்டியலில் சேர்க்காமல் இருக்கவோ கூடாது. அதற்கு பதிலாக டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த ஆதார் விவரங்களை, வாக்காளர் அடையாள அட்டையோடு இணைப்பது என்பது கட்டாயமல்ல; வாக்காளர் தன் சுயவிருப்பத்தின் பெயரில் மட்டுமே இதைச் செய்யலாம்.
இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கின்றன எதிர்க்கட்சிகள்; ஆனால், அவையில் எதிர்ப்புகளிடையேயும் இதை நிறைவேற்றிவிட்டது மத்திய அரசு. இந்த மசோதாவில் உள்ள பிரச்னைகள் என்ன, நமக்கு ஏற்பட வாய்ப்புள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்து இங்கே படிக்கலாம்.
💳 மாறும் கார்டு பேமென்ட் விதிமுறைகள்; ஜூன் 30-க்குப் பிறகு என்னாகும்?
வரும் ஜனவரி 1, 2022-லிருந்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் அமலாகவிருந்தது. ஆனால், வங்கிகள் மற்றும் பேமென்ட் நிறுவனங்களின் கோரிக்கையை அடுத்து, இது ஜூன் 30, 2022 வரை தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த விதிகள் அமலானால், ஆன்லைன் கார்டு பேமென்ட்களில் பெரியளவில் மாற்றங்கள் நடக்கும்.
என்ன மாற்றம்?
இதைப் புரிந்துகொள்வதற்கு முன்பு தற்போது ஆன்லைன் பேமென்ட்கள் எப்படி நடக்கின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது, ஆன்லைனில் ஏதேனும் சேவைகளுக்காக (உதாரணம் ஸ்விக்கி, அமேசான்) பேமென்ட் மேற்கொள்ள வேண்டுமென்றால், பில்லிங் அல்லது செக் அவுட் பகுதிக்குச் சென்று 3 வேலைகளைச் செய்யவேண்டும்.
நம்முடைய டெபிட் / கிரெடிட் கார்டு எண்ணை கொடுப்பது.
கார்டின் CVV எண்ணை கொடுப்பது
பிறகு OTP-யைப் பதிவு செய்து, பணம் செலுத்துவது.
இந்த மூன்றும்தான் பொதுவாக நடக்கும் விஷயம். இதில், இந்த சேவை நிறுவனங்கள் கூடுதலாக நம்மை இன்னொரு விஷயமும் செய்யச்சொல்லும். அது, நம் கார்டு விவரங்களை நிரந்தரமாக அந்த இணையதளம் / App-ல் சேமித்து வைத்துக்கொள்வது. `இதுதான் தவறான விஷயம்!’ என்கிறது ரிசர்வ் வங்கி.
இதற்கு பதிலாக, `Tokenisation’ வழிமுறையைப் பின்பற்றச் சொல்லி வலியுறுத்துகிறது. இந்த Tokenisation குறித்தும், இது நம் டேட்டாவை எப்படி பாதுகாப்பாக வைக்கும் என்பது குறித்தும் இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.
🛕 கர்நாடகாவின் மதமாற்ற தடைச்சட்டம் சரியானதா?
கர்நாடக அரசு கடந்த வாரம் சட்டசபையில் நிறைவேற்றிய, மதச்சுதந்திர பாதுகாப்பு மசோதா 2021, அம்மாநிலம் மட்டுமன்றி, நாடு முழுக்கவே விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது; அம்மாநில எதிர்க்கட்சிகள் உள்பட நாடு முழுவதும் பல தரப்பிலிருந்து எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. என்ன பிரச்னை இதில்? ஏன் இதை எதிர்க்கிறார்கள்?
என்ன சொல்கிறது இந்த மசோதா?
கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றங்களைத் தடைசெய்வதும், வலதுசாரிகளால் தொடர்ந்து பயன்படுத்தப்படும், `லவ் ஜிஹாத்’ என்ற மதமறுப்பு திருமணங்களையும் கட்டுப்படுத்துவதும்தான் இந்த மசோதாவின் நோக்கம்.
இந்த மசோதாவின் பிரிவு 3-ன் படி, ஒருவரை ஏமாற்றியோ, கட்டாயப்படுத்தியோ, ஆசைகாட்டியோ, வன்முறையைப் பிரயோகித்தோ, திருமணம் செய்தோ, ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாற்றினால், அது சட்டவிரோதம். இதை செய்பவருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ₹25,000 அபராதமும் விதிக்கப்படும்.
இதில் மதம் மாற்றப்படுபவர் சிறாராகவோ, மனநலம் குன்றியவராகவோ, பட்டியலின அல்லது பழங்குடியினராகவோ இருந்தால், சிறைத்தண்டனை 10 ஆண்டுகள் வரைகூட நீட்டிக்கப்படலாம். கூடவே, ₹25,000 அபராதமும்!
இந்த மதமாற்றம் குறித்து மதம் மாறியவர்களின் உறவினர்கள் மட்டுமல்ல; உடனிருப்பவர்கள், பணியிட நண்பர்கள் என யார் வேண்டுமானாலும் காவல் துறையில் புகார் அளிக்கமுடியும். இந்த மதமாற்றம், ஜாமீனில் வரமுடியாத குற்றமாக கருதப்படும்.
அப்படியெனில் ஒருவர் எப்படி மதம் மாறுவது? இந்த சட்டம் மக்களின் உரிமைகளில் எப்படி தலையிடுகிறது? இந்த விவரங்களையெல்லாம் இந்த TSL Explainer-ல் படிக்கலாம்.
😷 Omicron: சில முன்னெச்சரிக்கைகளும் சில நற்செய்திகளும்!
இந்தியாவில் கொரோனா ஓமிக்ரான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 400-ஐத் தொடவிருக்கிறது. இதையொட்டி பல மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்குகள் போன்றவை தொடங்கியிருக்கின்றன.
இந்த நேரத்தில் ஓமிக்ரான் குறித்தும், அதன் தன்மை குறித்தும் சில நன்மையளிக்கும் செய்திகளும் ஆய்வுகள் மூலம் வந்திருக்கின்றன. அதுகுறித்து இங்கே படிக்கலாம்.
அவ்வளவுதான்!
இனி இரும்பவும், திங்கள் கிழமை காலை 7 மணிக்கு அன்றைய தினத்தின் முக்கியமான செய்திகளோட சந்திக்கிறேன்.
👉 இதுவரைக்கும் TSL-ஐ தொடர்ந்து படிச்சிட்டு வர்றீங்க; எனவே இதுபற்றிய உங்க கருத்தை தெரிஞ்சுக்க விரும்புறோம். அதனால், இந்த லிங்கை க்ளிக் பண்ணி உங்களோட ரேட்டிங்கைப் பதிவு பண்ணிடுங்க. TSL-ஐ மேம்படுத்த இது எங்களுக்கு உதவியா இருக்கும்!
Happy Christmas! 🎄🎊
The Subject Line-ஐ சமூக வலைதளங்களில் பின்தொடர: